காத்திரமான யோசனைகளை முன்வைத்திருந்தால் 48 மணி நேரத்தில் திருத்தியிருக்கலாம் | தினகரன்

காத்திரமான யோசனைகளை முன்வைத்திருந்தால் 48 மணி நேரத்தில் திருத்தியிருக்கலாம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக 5153 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 6 வருட காலத்தில் துறைமுகத்தினூடாக 711.9 கோடி ரூபா மட்டுமே வருமானம் ஈட்டப்பட்டதாக குறிப்பிட்ட அவர் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 1600--1700 பில்லியன் ரூபா செலுத்த வேண்டிய நிலையிலே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கம்பனியுடன் இணைத்து முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக நளின் ஜெயதிஸ்ஸ எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் பாராளுமன்ற விவாதத்தில் காத்திரமான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததால் 48 மணி நேரம் தாமதித்து சீனாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க எம்.பி இடையிட்டு இரண்டு கேள்விகளை வினவியிருந்தார். இவற்றுக்குப் பதிலளித்த பிரதமர்,

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக சீனாவிடமிருந்து பெற்ற கடனில் இதுவரை 40, 817 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 5 தடவைகளில் கடன் பெறப்பட்டதோடு மொத்த கடன் 1262 அமெரிக்க டொலர்களாகும். வட்டியுடன் சேர்த்து 1886 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாராளுமன்ற விவாதத்தில் முன்வைக்கப்படும் யோசனைகளை ஒப்பந்தத்தில் உள்வாங்க நாம் முடிவு செய்திருந்தோம். அவசர அமைச்சரவை கூட்டத்தை நடத்தி ஆராய்ந்து அவற்றை சேர்க்க இருந்தபோதும் விவாதத்தை எதிரணி குழப்பியது. பிரயோசனமற்ற துறைமுகத்தை வருமானம் பெறும் இடமாக மாற்றியிருப்பது வரலாற்று முக்கியமானதாகும். வீண் கோசம் எழுப்புபவர்களுக்கு மக்கள் தக்க பதில் வழங்குவார்கள் என்றார்.

வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி வரை விவாதம் நடத்தி மறுநாள் 9.30 க்கு ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் எவ்வாறு சேர்த்திருக்க முடியும் என அநுரகுமார எம். பி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதமர் தேவையானால் 48 மணி கால அவகாசம் பெற்று தேவையான திருத்தங்களை இணைத்திருக்க முடியும்.

ஆனால் விவாதம் நடக்காததால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த ஒப்பந்தமே சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டது என்றார். பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியிருந்தாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனங்கள் அவ்வாறான எந்த யோசனையும் முன்வைக்கவில்லை இதனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதனால் ஒப்பந்தத்தை முழுமையாக மாற்ற நேரிடும் ஹம்பாந்தோட்டை துறைமுக கடனை துறைமுக அதிகார சபை தான் செலுத்த வேண்டும். எனவே அதற்கான சிறந்த வருமான வழி தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கொழும்பு துறைமுக வருமானம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செலவிடப்பட்டது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...