பல்கலை மாணவர் சூடு; பொலிசாரின் பிணை மறுப்பு | தினகரன்

பல்கலை மாணவர் சூடு; பொலிசாரின் பிணை மறுப்பு

 
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் மேற்கொண்ட 5 பொலிஸாருக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்கு விசாரணை, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்களால் முன்வைக்கப்பட்ட பிணை மனு யாழ். நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
 
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி இரவு, யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன் (23) மற்றும் சுலக்‌ஷன் (24) ஆகியோர் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தனர்.
 
குறித்த துப்பாக்கிச் சூட்டுப்பிரயோகம் தொடர்பில், சம்பவ தினத்திற்கு அடுத்த நாள் (ஒக்டோபர் 21) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 05 பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
 
குறித்த 5 பொலிஸார் சார்பாகவும் எதிரிகளின் சட்டத்தரணி கடந்த வழக்கின் போது பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.
 
பிணை மனு விசாரணை இன்றையதினம் (08) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன், குறித்த நபர்களின் பிணை மனுவை நிராகரித்ததுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 

Add new comment

Or log in with...