அமித் ஷாவின் அடுத்த இடம் பிரதமர் ஆசனம் | தினகரன்

அமித் ஷாவின் அடுத்த இடம் பிரதமர் ஆசனம்

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கட்சித் தலைவர் பதவிக்கு வந்து 3 வருடங்களை முடித்துள்ளார். அடுத்த கட்டத்தை நோக்கி இனி அவர் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நோக்கியே அமித் ஷாவின் அடுத்தடுத்த பயணங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2019 தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அப்போது அமித் ஷாவின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இப்போதே எழுந்து விட்டது. 2014ம் ஆண்டு ஜூலை 9ம் திகதி பா.ஜ.க தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் அமித் ஷா. அதன் பிறகு பாஜக பெற்ற வெற்றிகள் ஏராளம். கட்சித் தலைவரான பின்னர் 2014ம் ஆண்டு ஓகஸ்ட் 9ம் திகதி அவர் பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அமித் ஷா அடுத்து வேறு கட்டத்துக்கு உயர்வார் என்று இப்போதே கட்சியினர் கூறத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கும் என்று பேசப்படுகிறது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அமித் ஷாதான் பொலிஸ் துறை அமைச்சராக இருந்தார் என்பது இந்த நேரத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

எனவே அமித் ஷாவை எம்.பியாக்கியிருப்பதை மோடிக்கு அடுத்து பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ராஜ்யசபா மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்து அவை நடவடிக்கைகளை அறிந்து கொண்டால், மோடிக்கு அடுத்து பிரதமர் பதவியில் அமித் ஷா அமர வசதியாக இருக்கும் என்று கருதியே இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.

அநேகமாக 2025ம் ஆண்டு அமித் ஷா பிரதமர் பதவியில் அமரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்போது மோடிக்கு 75 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள்ளாக அமித் ஷாவை தயார்படுத்த பாஜக இப்போதே களம் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பிரதமர் பதவி குறித்தெல்லாம் இப்போதைக்கு அமித் ஷா நினைத்துப் பார்ப்பாரா என்பது தெரியவில்லை. அவரது முழுக் கவனமும் தேசிய அளவில் காங்கிரஸைக் காலி செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அந்த நோக்கில்தான் அவர் ஒவ்வொரு மாநிலமாக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்.

பாஜக பிறந்தபோது ஷாவுக்கு வயது 15.கடந்த 1980ம் ஆண்டு பாஜக உருவாக்கப்பட்டது. அப்போது அமித் ஷாவுக்கு வயது 15தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இருந்த பாஜக தலைவர்களிலேயே வயதில் மிகவும் இளையவர் அமித் ஷாதான். இதுவரை இருந்த தலைவர்களிலேயே இரும்புக் கரம் படைத்தவரும் அமித் ஷாதான். பாஜகவின் மிகவும் வெற்றிகரமான தலைவரும் இவர்தான்.

தொண்டர்களின் கட்சியாக இருந்த பாஜகவை இன்று மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கட்சியாக மாற்றியவர் அமித் ஷாதான். அவரது வியூகங்கள்தான் இன்றைக்கு பாஜகவை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

முற்பட்ட வகுப்பினரின் கட்சியாகப் பார்க்கப்பட்ட பாஜகவை இன்று பிற சாதியினர் மத்தியிலும் கொண்டு சென்றவர் அமித் ஷாதான். தலித் சமூகத்தினரின் ஆதரவையும் கூட இக்கட்சி பெற முடிந்தது என்றால், அதற்கு அமித் ஷாவின் செயல்பாடுகள்தான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.

பாஜகவால் நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றிகளை அமித் ஷா காலத்தில் அது கண்டது. வட கிழக்கில் கிடைத்த வெற்றி அதில் முக்கியமானது. உ.பியில் அது ஆட்சியைப் பிடித்தது ஷாவின் உச்சகட்ட பெருமையாகும். மொத்தத்தில் மோடிக்கு அடுத்த நிலையில் அமித் ஷா வலுவாக வளர்ந்து நிற்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதுஇவ்விதமிருக்க, அமித்ஷாவின் மூன்றாண்டு தலைமைப் பதவியில் அவருடைய சாதனைகள் என்ன என்பது பற்றி இங்கு ஆராய்வது அவசியம்.

சிபிஐ, வருமானவரித்துறை, அமுலாக்கத்துறை என்ற சுதந்திரமான அமைப்புகளைப் பயன்படுத்தி அகில இந்திய அளவில் எதிர்க்கட்சி அரசுகளை கூச்சமே இல்லாமல் மிரட்டியிருக்கிறார் அமித் ஷா.

தமிழகத்தில் சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க அரசாங்கத்தை பயன்படுத்தி மத்திய அரசுஅதிகாரம் செலுத்த வகை செய்திருக்கிறார்.

தேர்தலில் வெற்றி பெறாமல், மக்கள் தீர்ப்புக்கு மாறாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மூன்று சிறிய மாநிலங்களில் பாஜக அரசாங்கத்தை அமைத்திருக்கிறார்.

இவற்றின் மூலம் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க அமித்ஷா முயன்று வருகிறார்.

திரிபுராவில் பாஜகவுக்கு ஆதரவே இல்லை. ஆனால், அந்த மாநிலத்தில் உள்ள ஆறு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அந்த மாநில சட்டசபையில் பாஜக தனது கணக்கை தொடக்கி இருப்பதாக பெருமை பீற்றியிருக்கிறது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சொந்தக் கட்சி உறுப்பினர்களை அவர்களே கொன்று விட்டு, அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதை வீரம் என்று காட்டுகிறார்கள்.

அமித்ஷாவின் இந்த வேலையை புகழ்ந்து தள்ளுகிறார் பிரதமர் மோடி. குஜராத்தில் அமித் ஷா மூக்குடைபட்டதை வசதியாக மறைக்கிறார்.

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற வேண்டிய தேர்தலை தேவையில்லாமல் ஒத்திவைக்க ஏற்பாடு செய்தார். காங்கிரசிலிருந்து வெளியே வந்த ஒருவரை தனது கட்சி வேட்பாளராக அறிவித்தார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...