நீதிநியாயத்தை ஏற்பதற்கு தமிழக மீனவர் மறுப்பதேன்? | தினகரன்

நீதிநியாயத்தை ஏற்பதற்கு தமிழக மீனவர் மறுப்பதேன்?

இலங்கைக் கடற் பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களைப் பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்கதையாகி விட்டது. இச்செயற்பாட்டின் ஊடாக சட்டவிரோத பொருட்கள் சில சந்தர்ப்பங்களில் இலங்கைக்குள் கடத்தி- வரப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதன் காரணத்தினால் தமிழக மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவென இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்வதோடு, அவர்களது படகுகளைக் கைப்பற்றவும் செய்கின்றனர். இருந்தும் அவர்களின் அத்துமீறிய வருகையும் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்திய மீன்பிடித்தலும் இற்றை வரையும் குறைந்ததாக இல்லை. இது தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே நீடித்து வருகின்றது.

இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக் காண்பதில் இலங்கையும், இந்நாட்டு மீனவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் தம் அயல்நாட்டு சகோதர மீனவர்களுடன் முரண்பட்டுக் கொள்ள சிறிதளவேனும் விரும்பம் கொள்ளாதவர்களாவர்.

இந்தப் பின்புலத்தில் இலங்கை_ இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையிலும், அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அத்தோடு இலங்கை, இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இருநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்புகளும் நடைபெற்றன. இருந்தும் இந்த பேச்சுவார்த்தைகளும், சந்திப்புகளும் இணக்கப்பாடுகள் எட்டப்படாது இடைநடுவில் முடிவுற்றமைதான் வரலாறு.

ஆனால் இந்தியக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் செயல் சட்டவிரோதமானது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். இருந்தும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் எவருமே எதுவித கருத்தையும் கூறுவதாக இல்லை. இதன்படி இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் ஊடாக தீர்வு காண்பதற்கு தமிழக மீனவர் தரப்பினர் விரும்புவதாகத் தெரியவில்லை.

இவ்விவகாரம் குறித்து இணக்கப்பாடு எட்டப்படாது தொடரும் நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழக மீனவர்கள், தொடர்ந்தும் தம் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடவே செய்கின்றனர். அதனூடாக சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவதோடு, கடல் வளத்தையும் அழித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கைக் கடற் பரப்புக்குள் எழுநூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் அத்துமீறிப் பிரவேசித்த தமிழக மீனவர்கள், சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களைப் பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக காங்கேசன்துறை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் பிரதேசங்களை அண்டிய கடற்பரப்பிலும் கூட தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாகப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சமயம் விரைந்து செயற்பட்ட இலங்கைக் கடற்படையினர் சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 49 தமிழக மீனவர்களைக் கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய 12 இழுவைப் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 49 பேர் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண பிரதி கடற்றொழில் பணிப்பாளரிடம் அவர்களை ஒப்படைத்து உள்ளனர்.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய தமிழகத்தின் சில ஊடகங்கள், 'தமிழக மீனவர்கள் இலங்​கை கடற்படையினர் இருவரைக் கடத்தி சென்று விட்டதாக குறித்த தினத்தன்று காலையில் செய்தி வெளியிட்டன. இதனால் ஒரு பரபரப்பு நிலைமை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் இலங்கை கடற்படைப் பேச்சாளர் சமிந்த வலாக்குழு, ' எமது கடற்படையினர் எவரும் கடத்திச் செல்லப்படவில்லை. அவ்வாறு கடத்தி செல்லப்பட்டிருந்தால் கடத்திச் சென்றவர்கள் ஏன் அவர்களது புகைப்படத்தை வெளியிடவில்லை'என்று கேள்வி எழுப்பினார். அத்தோடு அச்செய்தி புஷ்வாணமாகியது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்பில் தமிழக ஊடகங்கள் ஊடக தர்மத்தைப் பேணி நியாயபூர்வமாக நடந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்நாட்டில் சுமார் முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுற்ற பின்னர் இப்போதுதான் அவர்கள் சுதந்திரமாகக் கடற்றொழிலில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதன் ஊடாக இந்நாட்டு கடல் வளத்தை சுரண்டிச் செல்வதோடு, கடற்றொழில் வளங்களையும் சேதப்படுத்தி அழித்து வருகின்றனர். இது தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும் மறைக்க முடியாத அழிவுகர நடவடிக்கைகளாகும்.இவை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

ஆகவே தமிழகக் கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லையை மதித்து நடப்பதோடு, இலங்கையின் வடபகுதி மீனவர் சமூகத்தை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகி இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும் அவர்கள் முன்வர வேண்டும். அத்தோடு இலங்கைக் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுகவும் தவறக் கூடாது. அப்போது தமிழக மீனவர்களின் செயற்பாடுகள் ஒருபோதுமே சர்ச்சைக்குரியதாக அமையாது.


Add new comment

Or log in with...