நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயகர்கள் | தினகரன்

நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயகர்கள்

உலகில் தாய் அன்புக்குப் பின்னர் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன் காட்டும் தூய்மையான அன்புதான். அன்று முதல் இன்று வரை நட்பு விலைமதிப்பற்ற சொத்தாக போற்றப்பட்டு வருகிறது. நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை தூர விலக்கிச் செல்லவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது.

நட்புக்கு இலக்கணமான பல்வேறு நபர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் பல சதாப்தங்களாக நட்பை விட்டுக் கொடுக்காமல் மனநிறைவுடன் போற்றி வருகிறார்கள். அவர்களுள் சிலர் வருமாறு:

கண்ணன் - குசேலன்:

யமுனைக் கரையில் உள்ள கோவர்த்தன மலைக் காடுகளில் ஆயர்குலக் கண்ணன் தனது கால்நடைகளை மேய்த்து வந்தான். மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் வேளையில் கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது. சேட்டைகளை செய்து முடித்து களைப்படைந்த நேரங்களில் தனது தலையில் மயிலிறகை செருகிக் கொண்டு, புல்லாங்குழல் வாசித்த போது அங்கே காற்றில் உலாவிய ராகங்கள் குசேலனை மிகவும் கவர்ந்தன.

அவன் வாசிக்கும் புல்லாங்குழல் இசைக்கு மயங்கி தூரத்திலிருந்து ரசிப்பவன். ஒருநாள் குசேலனைப் பார்த்த கண்ணன் தன்னுடன் வந்து விளையாடும்படி அழைப்பு விடுத்தான். குசேலனோ மிகுந்த தயக்கத்தோடு கண்ணனை அணுகினான். காரணம் தன்னைப் போன்ற ஏழையை அவன் எப்படி ஏற்றுக் கொள்வான் என்ற எண்ணம்தான். ஆனால் நட்புக்கு ஏழ்மையெல்லாம் தெரியாது என்பதற்கு சாட்சியாய் இவர்கள் இருவரும் நட்பு பாராட்டியதை அனைவரும் பாராட்டினர்.

கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார்:

உலகில் அனைவரும் மறக்கக்கூடா வடக்கிருத்தல் இணைபிரியா நட்பிற்கு அடையாளமான கோப்பெருஞ்சோழன்_- பிசிராந்தையார் வடக்கிருந்த செயல். கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் அரசுரிமைக்காகத் தந்தையாகிய மன்னரை எதிர்த்தனர். அவர்களுடன் போர் தொடுக்கவிருந்த மன்னனிடம் புலவர்கள் அறிவுரை கூறி அப்போரைத் தடுத்தனர். புலவர்களின் அறிவுரைக்கிணங்க வேந்தனும் போரை நிறுத்தி அரசுரிமையை அவர்களிடமே கொடுத்தான்.

எனினும் மக்களே தந்தையிடம் போர் தொடுக்க நேர்ந்த சூழலை அவமானமாகக் கருதினான். எனவே, வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் விட்டான் கோப்பெருஞ்சோழன். அப்பொழுது அதுவரை வேந்தனை நேரில் கண்டறியாமல் நட்பு பூண்டிருந்த புவலர் பிசிராந்தையார் அங்கு வந்து, மன்னன் இறந்த துயரம் அறிந்து தானும் அவன் வழி வடக்கிருந்து உயிர் துறந்தார்.

க‌ர்ணனு‌ம் து‌ரியோதனனு‌ம்:

தேரோட்டி மகனை அங்கதேச அரசனாக்கி நட்புப் பாராட்டியவன் துரியோதனன். ஒருசமயம் துரியோதனனின் மனைவியுடன் தாயம் ஆடிக் கொண்டிருந்தான் கர்ணன். துரியோதனன் வருவதைக் கண்டதும் துரியோதனனின் மனைவி அவசர அவசரமாக எழுந்தாள். அவளைப் பிடித்து விளையாட்டைத் தொடரக் கர்ணன் இழுத்த போது, அவள் கட்டியிருந்த ஆபரணத்திலிருந்து மணிகள் சிதறித் தரையில் விழுந்தன.

துரியோதனனைக் கண்டதும் கர்ணன் திடுக்கிடுகிறான். ஆனால் துரியோதனன் அப்போது, "விழுந்த மணிகளை எடுத்து மட்டும் தரவா? அல்லது கோர்த்தும் தரவா?" என்று கேட்டான். அவன் மனதில் கர்ணனின் செயல் தவறு என்று தோன்றவில்லை. நட்பின் ஆழத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

எம்.ஜி.ஆர்-_கருணாநிதி:

எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப் பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிர்க்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே" எனக் கடிந்துரைத்தார்.

கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும், அவரது வள்ளல் குணத்தினை நாம் குறை சொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச் சென்றபோதுதான் எம்.ஜி.ஆருக்கு கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என வரியை எடுத்துக் கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது" என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டு "இவர்கள் என் தம்பிகள்" என்று அண்ணா அடிக்கடி சொல்வார். எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும், கருணாநிதியின் எழுத்து வீச்சையும் வைத்து அவர் அப்படிச் சொன்னார்.

அண்ணா மறைந்த பின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்த போது தி.மு.க-வுக்குள் கருணாநிதிக்கு ஆதரவான அலையை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், தி.மு.க-வில் இருந்த பலர் நெடுஞ்செழியனைத் தேர்வு செய்யலாம் என்று கூறினர். ஆனால், எம்.ஜி.ஆர் இதை அப்படியே விட்டுவைக்கவில்லை. கருணாநிதிக்கு ஆதரவாக தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் பேசினார்.

தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. நெடுஞ்செழியன், கருணாநிதி இருவரும் போட்டியிட்டனர். எம்.ஜி.ஆரின் ராஜதந்திரத்தின்படி கருணாநிதியே வெற்றி பெற்றார். தி.மு.க-எம்.எல்.ஏ-க்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராகப் பதவியேற்றார்.

 

ரஜினி-கமல்:

ரஜினி திரையுலகுக்கு அறிமுகமான முதல் திரைப்படமே கமல்ஹாசன் நடித்த திரைப்படம்தான். 12 திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர்.

பல திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் போது நட்பு ஏற்பட்டாலும் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்திற்காக முதன் முதலாக சிங்கப்பூர் சென்ற போது ரஜினிக்கும் கமலுக்குமான நட்பு மிக ஆழமானது.

ஒரு அறை நண்பர்களாக, சிங்கப்பூரை சுற்றிப்பார்ப்பது, சூட்டிங் இடைவெளிகளில் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து தூங்குவது என இவர்கள் நட்பு உறுதியடைந்தது அப்போதுதான்.

ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பை இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகிய பின்னரும், சினிமாவில் உள்ள போட்டி வேறு, நிஜவாழ்க்கை நட்பு வேறு என பிரித்துணர்ந்து பொறாமை இன்றி இன்றுவரை தொடர்வது ஆரோக்கியமான விஷயம்.ஆரம்பம் முதல் இன்றுவரை எந்த இடத்திலும் ரஜினி கமலை உயர்த்தியும், விட்டுக்கொடுக்காமலும் பேசுவார்.

கமல் தன் விழா ஒன்றில் ரஜினி மேடையில் இருக்க, ‘இப்ப வரைக்கும் எங்க ரெண்டு பேர் மாதிரி நட்போட இருக்கற நடிகர்கள் யாரும் இருக்காங்களா.. சவால் விட்டுக் கேட்கறேன்’ என்றே சொன்னார். நட்பு என்பது சாதாரணச் சொல் அல்ல.

பெ‌ற்றோ‌ர், சகோதர‌ன், மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.

நல்ல நண்பர்களைப் பெருக்கிக் கொண்டால் நலமான வாழ்வு நிச்சயம். ஏனெனில் 'காலம் கூட நட்பை வெல்ல முடியாது...! 

 


Add new comment

Or log in with...