அரசியல் ஒழுக்கம் பேணும் யாப்பு உருவாக வேண்டும் | தினகரன்

அரசியல் ஒழுக்கம் பேணும் யாப்பு உருவாக வேண்டும்

வரி விலக்கு உத்தரவுப் பத்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் கார்களின் உரிமத்தை மாற்றும் வகையில் அவை சில பாராளுமன்ற உறுப்பினர்களால் விற்பனை செய்யப்பட்டு பணம் ஈட்டப்படுகின்றது. இந்த முறைமையானது, அரசாங்கங்களின் ஆரோக்கியமற்ற மற்றும் கோணல்மாணலான கொள்கைத் திட்டங்களை உணர்த்துகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களின் மிகவும் மோசமான இது தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னணி வகிக்கும் நிலையில் தொழில் வாண்மையாளர்களும் குறிப்பிட்ட அரச அதிகாரிகளும் கூட சமூகத்தில் காணப்படும் நல்ல குடிசன ஒழுங்கு தரம் மற்றும் நீதி ஆகியவற்றை குழப்பும் வகையில் தங்கள் சமூக அந்தஸ்தை துஷ்பிரயோகம செய்துள்ளனர்.

இதுவும் ஆட்சி பீடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமக்கள் அதிகாரத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளும் செயற்பாட்டின் ஓர் அங்கமாகும். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தொழிவாண்மையினரும் பொறுப்புடைமையற்றவர்களாகக் காணப்படுவது மட்டுமன்றி, அவர்களிடம் உணர்வுபூர்வமான கடமையை உணரும் சக்தி கிஞ்சித்தும் இல்லாவர்களாகவும் உள்ளனர்.

தங்களிடம் இரண்டாம் தரமான பொறுப்புக்கூறல் உணர்வொன்று மாத்திரமே உள்ளதென்பதனை அவ்வப்போது பதவிக்கு வரும் அரசாங்கங்கள் தாம் தேர்ந்தெடுத்துப் பின்பற்றி வரும் குறிப்பிட்ட கொள்கைகள் மூலம் நிரூபித்துக் காட்டி வருகின்றன. பொது நன்மை பொறுப்புணர்ச்சியுடன் பங்கேற்கும் வகையில் நாட்டு மக்கள் கல்வி மற்றும் தொழல்சார் திறமை மிக்கவர்களாக தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்றனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களின் கல்வியறிவு மற்றும் புரிந்துணர்வு அற்ற நிலை காரணமாக பலர் சில்லறைச் சர்வாதிகளாகவே செயற்பட்டு வருகின்றனர்.

எது எப்படியிருப்பினும், ‘நான்’ என்ற அகங்காரம் கொண்டுள்ள நிலையில், தங்களிடம் இல்லாத அதிகாரங்களை அவர்கள் தமக்குத் தாமே தாரைவார்த்துக் கொள்வதுடன், தாம் மனப்போன போக்கில் செய்து வரும் அதிகார துஷ்பிரயோகங்களை எல்லாம் நியாயப்படுத்தவும் முயன்று வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றார்கள் என்று பார்த்தால் அனுமானின் வால் போன்று அவர்களின் உடன் பிறப்புக்கள், மைத்துனர்கள், மைத்துனிகள், அவர்களின் மனைவிமார், பிள்ளைகளென ஒரு கூட்டமும் அதிகார அந்தஸ்தை மாற்றும் விதத்தில் தான்தோன்றித்தனமாக அதிகாரத்தைக் கையில் எடுத்து வருவது தான் வேதனை தரும் விடயமாகும். அற்பத்தனமுள்ள மற்றும் கல்வி வாசனையற்ற ஒருசிலர் முட்டாள்தனமான செயற்பாடுகளையும் கர்வம் மிகுந்த மனப்பாங்குகளையும் உடையவர்களாக மாற முயல்வதுடன் அவர்களை அவதானித்து வருவோருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் மனங்களை வெல்லும் மனிதப்புனிதர்களாகவே தம்மை மாற்றிக்கொள்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அத்தகைய அதிகாரங்களை தமது திடீர் விருப்பங்களுக்கேற்றவாறு தமது தேர்தல் தொகுதியில் உள்ள கடைகளையும் வியாபார ஸ்தலங்களையும் திறந்துவைக்கவும் மூடி விடவுமான உத்தரவுகளைப் பிறப்பித்தும் வருகின்றனர்.

குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் தமது மனம்போன்றவாறான வகையில் தமது அதிகாரத்தைப் பிரயோகித்துள்ள நிலையில், அவர்களில் பலர் பொலிஸாருக்கு உத்தரவிடக் கூடிய இயலுமையைக் கொண்டிருக்க விரும்புகின்றனர். ஒருவர் நீதிபதியொருவருக்கு உத்தரவிட முயல்கின்றார்; இன்னுமொருவரோ தொலைக்காட்சி நிலையமொன்றுக்குள் மனம்போன போக்கில் நடந்து கொள்கின்றார்; அரசாங்க ஊழியரொருவரை மரத்தில் கட்டிவைத்து தண்டனை வழங்கும் அதேவேளையில், இன்னுமொரு அரசியல்வாதி ஆசிரியை ஒருவரை மாணவர்கள் முன்னிலை முழந்தாளில் நிற்க வைக்கின்றார்.

பாராளுமன்றத்திற்குள் தமது கெட்ட நடத்தையைக் காண்பிக்கும் நாடறிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் சிலர் தலைவீக்கம் பிக்கவர்களாகவும், பாராளுமன்றத்திற்குள்ளும் ஏன், தமது அமைச்சுக்கள் மற்றும் காரியாலங்களுக்குள்ளும் எவ்வாறு நடந்து கொள்வதென்பதனை அறியாத மனிதப் பிறவிகளாகவும் காணப்படுகின்றனர். அத்துடன், தாங்கள் எவருக்கும் எதுவித விளக்கத்தையும் அளிக்கத் தேவையில்லையெனவும் தங்களின் பொது நடத்தை மற்றும் பொதுச் செலவினங்கள் குறித்து தம்மை எவரும் கேள்வி கேட்கக் கூடாதெனவும் நினைக்கின்றனர்.

அவர்களின் ஒழுக்கமற்ற தன்மை, மற்றும் பொறுப்புக்கூறல் அற்றதன்மை ஆகியவை அவர்களின் ஊழல் மிக்க செயற்பாடுகளையும் அரச கடமையை உதாசீனம் செய்தலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன எனலாம்.

இத்தகைய அரசியல்வாதிகள், அப்பாவி மக்களால் தொடர்ந்தும் ஏமாற்றப்படவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.

ஒளித்து வைக்கப்பட்ட பணத்தை

வெளியே கொண்டு வருதல்:

அரச, தலைவர்களுக்கு அதிகளவான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய அதிகாரமானது நாட்டின் நன்மையான விடயங்களுக்காகவே முதன்மை மற்றும் முக்கியத்துவத்தும் கொடுக்கப்பட்டு பாவிக்கப்படவேண்டுமே ஒழிய தலைவர்களுக்கு நெருக்கமான தனிநபர்களின் நன்மைக்காக அல்ல என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் இவ்வாறு செய்யும் போது மக்களின் நம்பிக்கைத் துரோகிகளாக மாறுகின்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அதுவே செய்யப்பட்டதுடன் நாட்டு மக்கள் அவர்களுக்கு தம் வாழ்வில் மறக்கவே முடியாதளவுக்கு அரசியல் பாடமொன்றை புகட்டினர். இன்றைய அரசியல் தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் நடவடிக்கைகளை கண்டும் காணாதவர்களாக முன்னைய ஆட்சியில் காணப்பட்டதைப் போன்று பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிப்பார்களாயின் நாட்டு மக்கள் அவர்களை எவ்வாறு தண்டிப்பரென்பதனை சொல்லவே தேவையில்லை.

ராஜபக்ஷ ஆட்சியின் காலத்தில் காணப்பட்ட முட்டாள்தனம் மற்றும் முற்றிலும் பொறுப்புக்கூறாத தன்மையை மக்கள் சிறிசேன – விக்கிரமசிங்க ஆட்சியிலும் தொடர்ந்தும் சகித்துக்கொள்ளவே மாட்டார்கள். ஒழுக்கம்கெட்ட நடைமுறைகளுக்கு இட வசதி அளிக்கப்பட்டிருப்பின், புதிய அரசியல் யாப்பானது அதனைச் சரிவரச் செய்வதுடன் இது சம்பந்தமாக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.

அரசாங்கத் தலைவர்களும், அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக்கூறும் வகையில் செயற்படுவதனையும் அவர்கள், தத்தமது பொறுப்புக்களை கௌரவமான முறையில் மேற்கொள்வதனையும் நாட்டு மக்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

அரச தலைவர்களும், அமைச்சர்களும் தாம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்பதனைக் மக்களுக்கு செயலில் காட்டவேண்டும் என்பது காலத்தின் கட்டளை எனில் அது மிகையன்று.

 

ஆங்கிலத்தில்:
அருட்தந்தை ஒகஸ்டின் பெர்ணாந்து
தமிழில்: இரா. இராஜேஸ்வரன் 


Add new comment

Or log in with...