சவால்கள் நிறைந்த பாதையில் 40 வருட வெற்றிப் பயணம் | தினகரன்

சவால்கள் நிறைந்த பாதையில் 40 வருட வெற்றிப் பயணம்

ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பயணிப்பதென்பது இலகுவானதொரு காரியமல்ல. எமது நாட்டின் அரசியல் பயணம் தொடர்பில் பின்னோக்கிப் பார்க்கின்ற போது, ஆட்சியில் அமரும் கட்சியொன்று எதிர்கொள்ளும் சவால்கள் மிகக் கடினமானவையாகவே அமைந்திருப்பதை வரலாற்று நெடுகிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.

நாடு சுதந்திரமடைந்த பின்னர், தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவில் ஆரம்பித்து பல தலைவர்கள் நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர். டி.எஸ்.சேனாநாயக்கவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சகல தலைவர்களும் நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டனர்.

1977 இல் நடந்த தேர்தல் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்தியது. நாட்டு மக்களில் 5/6 பங்கினர் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபீடமேற்றினர். 1977க்குப் பின்னர் எமது நாட்டுக்கு சர்வதேசக் கதவுகள் அகலத் திறக்கப்பட்டன. ஜே.ஆர். ஆட்சியிலேயே திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக 77 முதல் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. உள்நாட்டில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்த நிலையிலும் அபிவிருத்திப் பணிகள் தடைப்படவில்லை. நாட்டில் புதிய அரசியல் கலாசார மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்ட காலமாக இக்காலத்தைப் பார்க்க முடிந்தது.

ஜே.ஆரின் அந்த ஆட்சியில்தான் ரணில் விக்கிரமசிங்க என்ற இளைஞர் அரசியல் பிரவேசம் செய்தார். 1977 இல் தொடங்கிய அவரின் அரசியல் பயணம் தொடர்ந்து 40 வருடங்களாக தடைப்படாமல் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் தொடர்ச்சியாக 40 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்த ஒருவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார். இந்தச் சாதனையை மதித்து இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெறுகிறது.

1977 இல் பியகம தேர்தல் தொகுதி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான இளம் சட்டத்தரணி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பெரும்பங்காற்றிய டி.ஆர். விஜேவர்தன பரம்பரையில் வந்தவராவார். இவர் இந்த நாட்டில் ஊடகத்துறைக்காக தங்கப் பேனாவை பரிசாகப் பெற்ற எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் புதல்வராவார்.

அன்று ஜே.ஆர். ஜயவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது முதல் இளைஞர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார்.

முதல் தடவையிலேயே பாராளுமன்றத்துக்குத் தெரிவான ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் நடந்த எந்தவொரு தேர்தலிலும் தோல்வியே காணாத ஒரு வெற்றி வீரனாகவே காணப்படுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் பிரதியமைச்சராக, அமைச்சராக பல தடவைகள் பதவி வகித்துள்ளார். கட்சி தோல்வி கண்ட சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவராக பணிபுரிந்ததோடு தோல்வி கண்ட கட்சியை மீளக்கட்டியெழுப்புவதில் தனது அரசியல் சாணக்கியத்தை முழுமையாக பயன்படுத்தியவர் என்பதை எவராலும் மறுக்கவியலாது.

இவற்றுக்கெல்லாம் மேலாக நாட்டின் அரசியல் வரலாற்றில் நான்கு தடவைகள் பிரதமராக பதவி வகித்த பெருமையையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். ரணிலின் அரசியல் ஞானத்தைப் பார்க்கின்ற போது அப்படியொரு தலைவரை எமது நாடு பெற்றுக் கொண்டிருப்பது நாடு பெற்ற பாக்கியமாகவே கருத வேண்டும். அன்னார் மேற்கு நாடொன்றில் பிறந்திருப்பாரானால் உலகளாவிய அரசியல் மேதையாக மிளிர்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தவர்களின் அபிமானத்தை வென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வுக்கு 40 வயது நிறைவாகும் இவ்வேலையில் சுதந்திரத்துக்குப் பிந்திய வரலாற்றில் பாதிக்கும் மேற்பட்ட வரலாற்றை ஆக்கியவர்களில் முக்கிய இடத்தை அவர் வகிக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ரணிலின் இந்த 40 ஆண்டுகால வரலாறு இந்த நாட்டுக்கும் மக்களுக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் நன்மை பயக்கக் கூடியதாக அமையப் பெற்றுள்ளதா என்பது குறித்து நேர்மையானதொரு பார்வை மிக அவசியமானதாகும்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஐ.தே.க._சு.க.தேசிய நல்லாட்சி அரசை முன்கொண்டு செல்வதிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் பங்கிருக்கின்றது. இந்த நாட்டில் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இதனைக் கருதலாம்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி, அவர் இந்த நாட்டை ஒரு நவீன நாடாக முன்னேற்றுவதற்கான முடியுமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். 40 ஆண்டு கால பாராளுமன்ற வாழ்வில் அவர் சாதித்தவற்றை விடவும், மிக முக்கியமான ஒன்றை அவர் எதிர்வரும் காலத்தில் சாதிக்க வேண்டியிருக்கிறது. அதுதான், கடந்த தேர்தலுக்கு முன்னர் அவர் வாக்களித்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம். இதனையும் அவர் செய்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். 40 வருட பாராளுமன்ற அரசியல் வாழ்வை கொண்டாடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தினகரன் அதன் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.


Add new comment

Or log in with...