Home » காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் போர் நிறுத்த முயற்சியும் தோல்வி

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் போர் நிறுத்த முயற்சியும் தோல்வி

எகிப்தின் எல்லையில் உதவிகள் காத்திருப்பு: அபாய கட்டத்தில் காசா மக்கள்

by sachintha
October 17, 2023 6:00 am 0 comment

காசா மீதான தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் அங்கு தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. காசாவுக்கு உதவிகள் வருவது மற்றும் முற்றுகையில் உள்ள அந்தப் பகுதியில் சிக்கியிருக்கும் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றிருப்பவர்கள் வெளியேறுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் தெற்கு காசாவில் போர் நிறுத்தத்திற்கான எதிர்பார்ப்பு நேற்று (16) தோல்வி அடைந்தது.

ஹமாஸ் ஆட்சியில் இருக்கும் காசாவில் கடந்த ஒன்பது நாட்களில் இல்லாத வகையில் நேற்று அதிகாலை வான் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து காணப்பட்டன. பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டதோடு உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா மீது இடைவிடாது குண்டுமழை பொழிந்து வரும் நிலையில் அந்த பகுதிக்கு உதவிகளை வழங்குவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது 75 ஆண்டு இஸ்ரேலிய வரலாற்றில் ஒரு தினத்தில் இடம்பெற்ற அதிக உயிரிழப்பாக இருந்தது.

காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் ஒன்றை நடத்த தயாராகி வரும் இஸ்ரேல் அந்தப் பகுதியில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை துண்டித்து முழு முற்றுகையை செயற்படுத்தி வருகிறது. மறுபுறம் காசாவில் இருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் குண்டுத் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் ஏற்கனவே காசா எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 2,750 ஆக உயர்ந்துள்ளது. இதில் கால் பங்கினர் சிறுவர்களாவர். சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 1,000 பேர் வரை காணாமல்போயிருப்பதோடு இவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. அங்கு உணவு, எரிபொருள் மற்றும் நீர் தீர்ந்து வரும் நிலையில் பல நாடுகளினதும் பல நூறு தொன் உதவிகள் காசாவுக்கான எகிப்து எல்லையில் காத்துக் கிடக்கின்றன.

இந்த உதவிப் பொருட்களை ரபா எல்லைக் கடவை ஊடாக காசாவுக்கு பாதுகாப்பாக விநியோகிப்பது மற்றும் காசாவில் உள்ள வெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற எகிப்து காத்துள்ளது.

எல்லையை திறந்து காசாவுக்கு உதவிப் பொருட்களை அனுப்புவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக எகிப்து பாதுகாப்பு தரப்பினர் நேற்றுக் காலை அறிவித்திருந்தனர்.

எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், “வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்காக தற்போது எந்தப் போர் நிறுத்தமும் எட்டப்படவில்லை என்பதோடு காசாவில் மனிதாபிமான உதவி இடம்பெறவில்லை” என்று குறிப்பிடப்பட்டது.
எகிப்துடனான எல்லை திறக்கப்படுவது மற்றும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று பற்றிய செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஹமாஸ் அதிகாரி இஸ்ஸதல் ரெஷிக் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்த எல்லைக் கடவையின் எகிப்துப் பக்கமான பகுதி அண்மைய நாட்களாக திறக்கப்பட்டிருந்தபோதும் பலஸ்தீன பக்கம் இஸ்ரேலிய குண்டு வீச்சுகளால் செயலிழந்திருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரபா எல்லைக் கடவை தொடர்பில் நேற்றைய தினத்தில் தெளிவில்லாத சூழல் இருந்து வந்தது. இஸ்ரேல் தவிர்த்து காசாவுக்கான ஒரே வாயிலாக இந்த ரபா எல்லைக் கடவை உள்ளது. இந்நிலையில் எகிப்துக்குள் நுழையும் எதிர்பார்ப்பில் சிறு எண்ணிக்கையானோர் இந்த எல்லைக் கடவைக்கு அருகில் காத்து நிற்கின்றனர்.

காசாவில் இருந்து வெளியேறுவதற்காக இந்த எல்லைக் கடவைக்கு அருகில் இருக்கும்படி அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. காசாவில் சுமார் 500 தொடக்கம் 600 பலஸ்தீன மற்றும் அமெரிக்க இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் இருப்பதாக அமெரிக்க அரசு மதிப்பிட்டுள்ளது.
அதேபோன்று பலஸ்தீன போராளிகள் பிடித்து வைத்திருக்கும் சுமார் 195 பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. இந்த பணயக்கைதிகளில் அமெரிக்கர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

பலஸ்தீன பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நெதன்யாகு மற்றும் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை வலிறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல், போர் விதிகளை பின்பற்றும்படியும் பைடன் வலியுறுத்தியுள்ளார்.

“பெரும்பான்மையான பலஸ்தீனியர்கள் ஹமாஸின் பயங்கரமான தாக்குதல்களுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டு மழை இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றுக் காலை காசா நகரில் அல் குத்ஸ் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் சரமாரி தாக்குதலை நடத்தியதோடு இந்த தாக்குதல்களால் அம்புலன்ஸ் வண்டிகளாலும் நகர முடியாத நிலை ஏற்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் உள்ள மக்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் சுமார் 2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த உத்தரவை பொருட்படுத்த வேண்டாம் என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கான எரிபொருள் இருப்பும் 24 மணி நேரத்திக்கு மாத்திரமே போதுமாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் உயிராபத்தை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அலுவலகம் எச்சரித்துள்ளது.

காசா நகரில் டெல் அல் ஹவாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் பிரதான வீதி மீது குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் செம்பிறை சங்கத்தின் அல் குத்ஸ் மருத்துவமனையில் அடைக்கலம் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் இருக்கும் சிவில் அவசர சேவை மற்றும் அம்புலன்ஸ் சேவையில் மூன்று தலைமையகங்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ளது. இதனால் ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு அந்தப் பகுதிகளுக்கான மீட்பு நடவடிக்கைகளும் ஸ்தம்பித்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கான் யூனிஸ் அகதி முகாமில் உள்ள அபூ முஸ்தபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் அந்தப் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய குண்டுவீச்சு சத்தத்துடன் நேற்று காலை விழித்துக் கொண்ட 45 வயதான சுஹைல் பாகர் தனது அண்டை வீடு தரைமட்டமாக்கப்பட்டு ஐவர் கொல்லப்பட்டதை கண்டுள்ளார்.

“நாம் பயங்கரத்துடன் விழுத்துக்கொண்டதோடு பெரும் அழிவினை கண்டோம். புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது” என்று பாகர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

கான் யூனிஸின் அருகாமையில் உள்ள வீதி ஒன்றில் தனது வீட்டுக்கு வெளியில் இருந்து கொண்டிருந்த வயோதிபரான அபூ அஹமது, “இஸ்ரேல் எம் அனைவரையும் கொலைசெய்ய தீர்மானித்துவிட்டது” என்றார்.

காசா மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவானர்களான ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அந்த குறுகிய நிலப்பகுதிக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களின் தேவைகளை சமாளிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள மக்கள் சுத்தமான நீரை பெறுவதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். கடைசி முயற்சியாக இவர்கள் விவசாய நிலங்களில் இருக்கும் உவர் நீரை அருந்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் நீர்வழி நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் நேற்று காசாவில் மின்சார வசதிகள் இருக்கவில்லை என்பதோடு இதனால் சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும் துப்புரவேற்பாட்டு சேவைகள் முடங்கிய நிலையில் உணவுப் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இராஜதந்திர முயற்சிகள் ஸ்தம்பிதம் இந்த மோதல் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் மத்தியஸ்த முயற்சிகளும் பின்னடைவை சந்தித்துள்ளன. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் மற்றொரு முனையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதில் அமெரிக்கா பிராந்தியத்தில் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈட்டுபட்டு வருகிறது. அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ஜோர்தான், கட்டார், பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய ஆறு அரபு நாடுகளுக்கு அவசர சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பின்னர் இஸ்ரேல் சென்றுள்ளார்.

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இந்தப் போரில் இரண்டாவது முனை ஒன்றை ஆரம்பிக்கும் வாய்ப்புக் குறித்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அதிக கவலையை வெளியிட்டு வருகிறது. எனினும் இஸ்ரேலின் தற்பாதுகாப்பு உரிமைக்கு அவை ஆதரவு அளித்து வருகின்றன.

மோதலை தணிக்கும் முயற்சியில் எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்த மூன்று நாடுகளும் இஸ்ரேலுடன் நல்ல உறவை பேணுவதோடு ஹமாஸ் அமைப்பிலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

இஸ்ரேலின் பதில் தாக்குதல்கள் குறித்து சீனா மற்றும் ரஷ்யா கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. அதேபோன்று இந்த நாடுகள் இஸ்ரேலின் எதிரி நாடான ஈரானில் செல்வாக்கு செலுத்தும் நாடாக இருக்கும் சூழலில் பிராந்தியத்திற்கு இந்த மோதல் பரவுவதை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளாக உள்ளன.

ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு நீண்ட காலமாக ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் காசா நிலைமை குறித்து அமெரிக்கா மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டை சுமத்திய சூழலில் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதில் பல முட்டுக்கட்டைகள் இருந்து வருகின்றன. காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தால் நிலைமை கட்டுப்படுத்த முடியும் என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் அமிர் அப்துல்லாஹியம் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.

“நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT