பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டதால் வந்த வினை! | தினகரன்

பாரம்பரிய விவசாயத்தை கைவிட்டதால் வந்த வினை!

நாட்டின் பெருமளவு பிரதேசங்களில் தற்போது கொடிய வரட்சி நிலவுகின்றது. நீர்ப்பாசனக் குளங்கள் வற்றி விட்டதனால் பல இடங்களிலும் விவசாயிகள் நெற்செய்கையைக் கைவிட வேண்டிய பரிதாபமான நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயச் செய்கையில் பெருமளவில் முதலீடு செய்தோருக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் ஈடு செய்ய முடியாததாகும். நெற்செய்கையை மாத்திரம் நம்பி வாழ்கின்ற இக்குடும்பங்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்குவது அரசினால் முடியாத காரியம்.

எனினும் அரசாங்கம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறியளவிலான நிவாரணத்தையாவது வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பது ஆறுதல் தருகின்ற விடயமாகும். வரட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மாதாந்தம் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறான உலர் உணவுப் பொதிகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளன. வறிய நிலைமையில் உள்ள விவசாயக் குடும்பங்களுக்கு இவ்வாறான உணவு நிவாரணம் பெரிதும் உதவியாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

நாட்டின் இன்றைய கொடிய வரட்சியினால் நெல் உட்பட உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே அரிசி, மரக்கறி மற்றும் தானியங்களின் விலைகள் அதிகரித்தபடியே செல்கின்றன. நடுத்தர மற்றும் வறிய மக்களால் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாத நிலைமையொன்று உருவாகும் அபாயம் உள்ளது. இத்தகைய நிலையில் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகும். அதேசமயம் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது.

எனவேதான் அரசாங்கம் 47 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை திடீரெனக் குறைத்துள்ளது. இப்பொருட்களுக்குள் அரிசி, கோதுமை மா, மீன், சீனி, கிழங்கு, பெரிய வெங்காயம், சோளம் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைக்கமையை இந்த விலைக் குறைப்பு உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அறிவிடப்படுகின்ற வரியைக் குறைப்பதன் மூலமே அப்பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது விலைக் குறைப்பு செய்யப்பட்டிருக்கும் 47 பொருட்களும் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களென்பதால், அரசின் நடவடிக்கையானது பொதுமக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கவே செய்யும்.

ஆனால் இப்பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டிருப்பதை வர்த்தகர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்களென்பதே இங்கு முக்கியம். வரிக்குறைப்புக்கு ஏற்ப வர்த்தகர்களும் இப்பொருட்களுக்கான விலையைக் குறைத்தாலேயே அரசாங்கம் அளிக்கின்ற நிவாரணத்தின் பலன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய முடியும். நாட்டில் வரட்சி நிலைமை நீங்கும் வரை இவ்விலைக் குறைப்பு அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க, நாட்டிலுள்ள பிரதான குளங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டதனால், அடுத்த போகத்துக்குரிய விவசாயச் செய்கையும் அதிக பயனைத் தரப் போவதில்லை. எனவே விவசாயிகளின் வருமானம் தொடர்ந்தும் பாதிப்படையும் அபாய நிலைமையே உள்ளது. எமது நாட்டு விவசாயிகள் தாழ்நிலப் பயிர்ச் செய்கையில் பெரிதும் தங்கியிருப்பதனாலேயே, வரட்சியான காலங்களில் வருமானத்துக்கு மாற்றுவழியைக் காண முடியாதிருக்கின்றது. இலங்கையின் பண்டைய விவசாயத் துறையானது. மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலேயே பெருமளவில் தங்கியிருந்தது. நெல்லுக்குப் பதிலாக மேட்டு நிலங்களில் செய்கை பண்ணக் கூடிய உணவுப் பயிர்கள் அன்றைய காலத்தில் மக்களின் உணவுத் தேவையை பெருமளவில் ஈடு செய்தன.

ஆனால் நெல் தவிர்ந்த ஏனைய தானியப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் இப்போதெல்லாம் அக்கறை செலுத்துவது கிடையாது. எனவேதான் வரட்சியான காலத்தின் போது வறிய விவசாயிகள் அன்றாட உணவுக்குத் திண்டாட வேண்டிய அவலம் ஏற்படுகின்றது. அதேசமயம் ஏனைய தானிய உணவுகளை இந்தியா பொன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளோம். இலங்கையில் மேட்டு நிலங்களில் செய்கை பண்ணக் கூடிய தானியங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது எமது விவசாயத் துறையில் நிலவுகின்ற பாரிய குறைபாடு ஆகும்.

இலங்கை பாரம்பரிய விவசாய நாடாகும். அரிசியில் மாத்திரமன்றி அனைத்து விதமான உணவுப் பொருட்களின் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்று விளங்கிய ஒரு நாடாகும். வெளிநாட்டுக்கு அரிசியை ஏற்றுமதி செய்த பெருமைக்குரியதாக எமது நாடு விளங்குகின்றது.

எனினும் அன்றைய நிலைமை இன்றில்லை. இன்றைய நவீன வாழ்க்கையில் விவசாயம் படிப்படியாக புறந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீர்ப்பாசனம், உணவு உற்பத்தி, உணவு களஞ்சியப்படுத்தல், பசளைப் பாவனை, பீடைகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் எமது முன்னோர் கற்றுத் தந்த அனுபங்களை நாம் ஒதுக்கி விட்டோம். கைத்தொழில் மயமாக்குதல் பெருகியதனால் இயற்கை விவசாயம் தொலைந்து போய் விட்டது.

நாட்டில் அவ்வப்போது ஏற்படுகின்ற கொடிய வரட்சிகளே எமது பண்டைய விவசாயத்தின் அருமையை எமக்குப் புரிய வைக்கின்றன. விவசாயத்தில் இயற்கை வழிவகைகளை நாடி நாம் பின்னோக்கிச் சென்றாலேயே உணவு நெருக்கடி சவால்களை வெற்றி கொள்ள முடியும்.


Add new comment

Or log in with...