வீட்டுக் கொடுக்கல் வாங்கலில் எனது தலையீடு இல்லை | தினகரன்

வீட்டுக் கொடுக்கல் வாங்கலில் எனது தலையீடு இல்லை

'மொனார்ச் ரெசிடன்சி'யில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டுத்தொகுதியை வாடகை அடிப்படையில் பெறுவதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ தான் எந்தவொரு தலையீடும் செய்யவில்லையென முன்னாள் நிதியமைச்சரும் தற்போததைய வெளிவிவகார அமைச்சருமான ரவிகருணாநாயக்க நேற்று திறைசேரி முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.

தனது மனைவியும் மகளுமே இந்த வீட்டுத் தொகுதியை குத்தகைக்கு பெற்றிருப்பதை பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்ட போது அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தின்போது இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மோசடிகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரான போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறினார். ஆ​ணைக்குழு முன் நேற்று ஆஜரான அவர் சுமார் ஐந்து மணிநேரம் சாட்சியமளித்தார். விசாரணைகள் முறைப்படி நேற்றுக் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. சாட்சியம் அளிப்பதற்காக விசாரணைக் கூண்டில் ஏறிய அமைச்சர், கடமைகளின் நிமித்தம் இரண்டு முறை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாமைக்காக மன்னிப்புக் கோரினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தின் காரணமாகவே தான் கடந்த முறை ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராக முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளின்போது அரசாங்க தரப்பிலிருந்து ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள்ள தி லிவேராவினால் அமைச்சர் ரவி கருணாநாயக்க சுமார் 05 மணித்தியாலங்களாக துருவித்துருவி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விசாரணை மிகவும் பரபரப்பாகவும் ஆக்கிரோக்ஷமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டது. எனினும் அனைத்து கேள்விகளுக்கும் தான் ஒரு நிரபராதி என்பதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் ரவி கருணாநாயக்க சிறிதும் சளைக்காமல் பதிலளித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பியமை, கொழும்பில் தொடர்மாடி வீடொன்றுக்கு வாடகைக்கு சென்றமை மற்றும் பின்னர் அந்த வீட்டைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

விசாரணைகளுக்கு இடைநடுவே இரகசியப் பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அர்ஜுன அலோசியஸின் 0777 777 723 என்ற எண்ணுக்குரிய 'அப்பிள்' கையடக்கத் தொலைபேசியிலிருந்த தகவல்கள் அடங்கிய பிரதிகளை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைத்தார். அதில் அர்ஜுன அலோசியஸுக்கு வந்த மற்றும் அவரால் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பிலும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புள்ள தி லிவேரா, அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் பல மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக விசாரணைகளை தொடுத்தார்.

விசாரணைகளுக்கு நீண்டநேரம் தேவைப்பட்டதனால் அமைச்சரை மீண்டும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமுகமளிக்க முடியுமா? என கேட்டதற்கு அவரால் கடமைகளின் நிமித்தம் நாளை வரமுடியாது என்றும் வேண்டுமானால் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்குப் பின்னர் வருவதாகவும் அமைச்சர் பதிலளித்தார். எனினும் அமைச்சர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரட்ண தன்னால் வெள்ளிக்கிழமை சமுகமளிக்க முடியாது எனக் கூறியதன் விளைவாக அனைத்து விசாரணைகளும் நேற்றைய தினமே முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. பிற்பகல் 3.30 மணியளவில் விசாரணைகள் முடிவுபெற்றன.

முறிகள் ஏல விற்பனைக்குப் பின்னர் கடந்த இரண்டரை வருடங்களாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கும் தனக்குமிடையில் தொலைபேசி மூலமாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அமைச்சர் ரவி கருணாநாயக்க, சாட்சியங்களின்போது ஆணித்தரமாக கூறினார். அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் கோரிக்கைக்கு அமையவே அரசாங்கத்தின் நிதி தேவைப்பாட்டை தான் எழுத்து மூலம் வரைந்ததாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

திறைசேரி முதற்தடவையாக கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பெரும் தொகை நிதியை கோரியிருந்தது. கடந்த அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த 100 பில்லியன் ரூபா கடனில் 15 பில்லியன் ரூபா கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த அரசாங்கத்துக்கு பணம் தேவைப்பட்டது.

இந்நிலையிலேயே எஞ்சிய 75 பில்லியன் ரூபா பணமும் அவசியம் என்பதை நானும் அமைச்சர்களான கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்கிரம ஆகிய மூவரும் ஏல விற்பனை இடம்பெற்றதற்கு முதற் தினமான பெப்ரவரி 26 ஆம் திகதியன்று மத்திய வங்கியில் கூடித் தீர்மானித்ததன் விளைவாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய தான் கடிதத்தை எழுதியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இதுப்பற்றிய அனைத்து விடயங்களும் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்களுக்கு தெரியும். முதற்தடவையாக அனைத்து விடயங்களும் ஆவணங்களாக பதிவு செய்யப்படடுள்ளன. அனைத்து விடயங்களும் அதிகாரிகளுடன் தீர அராய்ந்ததன் பின்னரே தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனால் எவரும் இதுப்பற்றி தெரியாது எனக் கூறுவதற்கில்லை. நான் கூறும் உண்மைகள் கேட்பதற்கு கசப்பானதாக இருந்தாலும் அதுவே உண்மையாகும். நிதி அமைச்சில் 2,200 பேர் வேலை செய்கின்றார்கள், யாரிடம் வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள். நாம் இந்த அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்போது நாடு கடனிலிருந்தது. நாட்டுக்கு வருமானம் தேவை என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக இருந்தனர். என்றும் அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.

அர்ஜுன அலோசியஸின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த மற்றும் அவரால் அனுப்பப்படடிருந்த குறுந் தகவல்களில் ஆர்.கே என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவற்றின் பிரதிகள் ஆர்.கே என்ற நபருக்கும் அனுப்பப்பட்டிருப்பதுவும் விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புள்ள தி லிவேரா அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியதற்கு, அதில் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கும் ருவன் காலகே, ஸ்டீவ் செமுவேல் ஆகியோர் பற்றி தான் கேள்விப்பட்டதில்லையென்றும் அவற்றின் பிரதிகள் தனக்கு அனுப்பப்படவில்லையென்றும் ஆர்.கே என்பது யார் என தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

அத்துடன் விசாரணைகளின்போது கடந்த ஒன்பது மாதங்களாக தான் கொழும்பில் வாடகைக்கு குடியிருந்த தொடர்மாடி வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை யாருக்கு குத்தகைக்கு வழங்கியிருந்தார் என்பது பற்றி தான் அறிந்து வைத்திருக்கவில்லையென்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து தான் முன்னர் நிர்வகித்து வந்த அனைத்து தனியார் கம்பனிகளில் இருந்தும் பதவி விலகிவிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தனது மனைவியும் மகளுமே அக்கம்பனிகளை நடத்தி வந்ததாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்தவகையில் தனது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிறுவனமே அந்த வீட்டை முதலில் வாடகைக்கு அமர்த்தியதாகவும் பின்னர் கொள்வனவு செய்ததாகவும் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீட்டில் மின்சார ஒழுக்கின் காரணமாக தீ விபத்து இடம்பெற்ற சம்பவத்தையடுத்து திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் வரையிலும் பிள்ளைகளின் பாடசாலைகளுக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காகவும் தற்காலிகமாகவே வாடகை வீட்டை நாடியிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

வாடகைக்கு அமர்த்தப்பட்ட வீடு நஹீல் விஜேசூரிய என்பவரது மகளான அனிக்கா விஜேசூரியவுக்குரியது என்பதுவும் அர்ஜுன அலோசியஸ் அனிக்காவின் முன்னாள் காதலன் என்பதுவும் தனக்குத் தெரியும் என்கின்றபோதும் அந்த வீடு யாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது தனக்கு தெரியாது என்றும் அமைச்சர் சாட்சியமளித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்றத்தில் வீடு விடயத்தைக் கூறியதன் பின்னரே நானும் உண்மையைக் கண்டறிந்தேன். வீட்டு உரிமையாளரான அனிக்கா தனது வீட்டை வோல்ட் என்ட் ரோவ்ஸ் எனும் கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார். அந்த கம்பனி அர்ஜுன அலோசியஸுக்குரியது. அலோசியஸ் பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். எனவே அவர்கள் எந்தெந்த கம்பனிகளில் இருப்பார்கள் என்பதை நானும் எனது குடும்பத்தாரும் தேடிப்பார்க்கவில்லை. ஆகவே எனது குடும்பத்தார் செயற்படுத்தி வந்த ஜீ.டி.எல் நிறுவனம் சர்ச்சைக்குரிய பேர்பட்டுவல் ட்ரசரிஸ்ஸுக்கு நேரடியாக வாடகை செலுத்தவில்லை நானும் எனது குடும்பத்தாரும் முன்னர் அது பற்றி அறிந்து வைத்திருக்கவில்லையென்றும் அமைச்சர் ஆணித்தரமாக கூறினார்.

இந்த வீட்டுக்காக ஜீ.டி.எல் நிறுவனம் மாதாந்தம் 1.45 மில்லியன் ரூபா வாடகை செலுத்தியதாகவும் பின்னர் தனது பத்தரமுல்லை வீட்டின் திருத்தல் பணிகள் 06 மாதத்துக்குள் முடிவடையாததனால் நாடோடிகள் மாதிரி அங்கும் இங்கும் அலைய முடியாததன் காரணமாக ஜீ.டி.எல் நிறுவனத்தின் பங்குதாரரான லக்ஷ்மி காந்த் வீட்டை 4.5 பில்லியன் ரூபாவுக்கு வாங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் தான் வாடகைக்கு இருந்த வீடு 04 ஆயிரம் அடி சதுரஅடிகளைக் கொண்டது என்பதை முற்றாக மறுத்த அமைச்சர் மூன்று படுக்கையறைகளுடனான இந்த வீடு சுமார் 02 ஆயிரம் சதுர அடிகளை மட்டுமே கொண்டிருக்கக்கூடியது என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது வீட்டுக்கு நேரடியாக வந்து அதன் பரப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...