அநீதி மறுக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது! | தினகரன்

அநீதி மறுக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது!

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது முன்னைய இருப்பிடங்களில் மீளக்குடியேற முடியாத நிலைமை இன்னும் தொடருமானால் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதெல்லாம் ஒருபோதும் யதார்த்தமாகப் போவதில்லை. சொந்த இடங்களில் மீளக்குடியேறி வாழ வேண்டுமென்ற ஏக்கம், எப்போதும் அம்மக்களின் உள்ளத்தில் யுத்தத்தின் அவலங்களை நினைவுபடுத்தியபடியே இருக்கும்.

வடக்கில் கேப்பாபிலவு மக்களின் மன ஏக்கமும் இவ்வாறானதுதான். அம்மக்கள் தங்களது காணிகளெல்லாம் முழுமையாக விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையில் இருந்தார்கள். அமைச்சர் டி. எம். சுவாமிநாதனும் அதேவித நம்பிக்கையையே கொண்டிருந்தார். எனினும் கேப்பாபிலவில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் எஞ்சியுள்ளவற்றை மக்களிடம் மீளக்கையளிப்பதற்கு இராணுவம் முன்னர் மறுத்து விட்டது.

தங்களது காணிகள் மீளக் கையளிக்கப்படுமென நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்ததுடன், கேப்பாபிலவுக்குச் சென்றிருந்த அமைச்சர் சுவாமிநாதனும் ஏமாற்றத்துடனேயே திரும்ப வேண்டியிருந்தது.

எனினும் கேப்பாபிலவு மக்களின் நம்பிக்கைகள் வீண் போகவில்லை. அவர்களது காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் மறுத்ததையடுத்து, கொழும்பு திரும்பிய அமைச்சர் சுவாமிநாதன். இராணுவ உயரதிகாரிகளுடனும் அரசாங்க மட்டத்திலும் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து தற்போது சாதகமான நிலைமையொன்று உருவாகியிருக்கிறது. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில், வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசியிருந்தார். அச்சந்திப்பின் போது, கேப்பாபிலவு காணிகளை மீள ஒப்படைப்பதென்ற முடிவை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இராணுவத் தளபதி வெளிப்படுத்தியிருக்கின்றார்.

இவ்வாறான சாகதமானதொரு முடிவு எட்டப்படுவதில் அமைச்சர் சுவாமிநாதன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. அதேசமயம் யுத்த காலத்தில் பொதுமக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் இதன் மூலம் தெரிகின்றது.

முப்பது வருட காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களில் காணி விவகாரமும் ஒன்றாகும். இராணுவத்தின் பயன்பாட்டுக்கென கபளீகரம் செய்யப்பட்ட காணிகள் ஒருபுறமிருக்க, தனிநபர்களின் அத்துமீறல்களாலும் அங்கு பலரது காணிகள் பறிபோயுள்ளன. தனிப்பட்ட நபர்களின் அடாவடித்தனங்களால் கிழக்கிலேயே அதிக காணிகள் பறிபோயுள்ளன. கிழக்கில் காணி அபகரிப்பு இன்றும் தொடருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிறாவோடை தமிழ்க் கிராமத்தில் மக்கள் பலரின் காணிகள் இவ்வாறு பலாத்காரமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, அங்குள்ள தமிழ்ப் பாடசாலைக்குரிய மைதானக் காணியையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். பாடசாலையின் மைதானக் காணியை மீட்டுக் கொடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ அலட்சியமாக இருப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர். இறுதியில் பாடசாலைக் காணியை மீட்பதற்காக அங்குள்ள மக்களே சுயமாக போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

இவ்வாறுதான் ஏறாவூர், தளவாய் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றின் மைதானக் காணியும் அண்மையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதிகளுக்கு இவ்விடயத்தில் அக்கறை கிடையாதென்றே அங்குள்ள மக்களும் கூறுகின்றனர். பெரியநீலாவணை தமிழ்ப் பாடசாலையின் காணிக்கும் இதே கதிதான் நேர்ந்துள்ளது. எனவே மக்கள் தங்களது காணியையும் பாடசாலைக் காணியையும் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தாமாகப் போராட வேண்டிய பரிதாப நிலைமையொன்று அங்கு ஏற்பட்டிருக்கின்றது.

காணிப் பிரச்சினையை நாட்டில் எந்தவொரு இனம் எதிர்நோக்கினாலும் அதனை அலட்சியப்படுத்தி விட முடியாது. அரச காணியாகட்டும் அல்லது தனியாரின் காணியாகட்டும்... அவற்றை அத்துமீறி ஆக்கிரமிப்பதற்கு எவராவது முற்பட்டால் அது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறான காணி ஆக்கிரமிப்புகளே இனங்களுக்கிடையே வீணான பூசல்களை வளர்க்கின்றன.

வடக்கு – கிழக்கு மக்களின் பறிபோன காணிகளை மீட்டெடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லையென்பது பொதுவான குற்றச்சாட்டு ஆகும்.

அதேசமயம் காணி விவகாரத்தை துரும்பாகப் பயன்படுத்தியபடி வடக்கு, கிழக்கில் எவராவது அரசியல் நடத்த முற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. அவ்வாறு மக்களை முட்டாளாக்கி அரசியல் இலாபம் பெற முயற்சிப்பது இறுதியில் பாதகமான விளைவையே ஏற்படுத்தக் கூடும்.

மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற காணிப் பிரச்சினைகளை நியாயமாகத் தீர்த்து வைப்பதில் சட்டத்தின் பங்களிப்பு போதாமல் இருக்கின்றது. காணிகளைப் பறிகொடுப்போர் வறியவர்களாக இருப்பதனால் அவர்கள் சட்டத்தின் உதவியை நாட முடியாதவர்களாக உள்ளனர். கேப்பாபிலவில் காணிகளை இழந்தோரும் வறிய நிலையில் உள்ளவர்களாவர். எனவே இத்தகைய மக்களுக்கு நீதி கிடைப்பதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்துவது அவசியம். அரசியல் செல்வாக்குகளாலோ, பண பலத்தினாலோ மக்களுக்கான அநீதி மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது! 


Add new comment

Or log in with...