சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும் | தினகரன்

சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்

வட மாகாணத்தின் யாழ். குடா நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் வட பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு தென் பகுதியிலும் இந்நிலைமை தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இந்த சம்பவங்கள் வட பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பலவீனங்கள் ஏற்பட்டுள்ளதா? யாழ். குடா நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைகின்றதா? என்ற கேள்விகளையும் இன்னொரு புறம் ஏற்படுத்தியுள்ளது.

அதன் காரணத்தினால் இந்த சம்பவங்கள் தொடர்பிலும் அவற்றின் பின்னணிகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையை பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாள்வெட்டு சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. அக்குற்றச்செயலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அது குழுக்களுக்கு இடையிலான சண்டை எனக் கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு மு-ன்னர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைத் திடீரெனப் பறித்த நபர் அவரைச் சுட்டுப் படுகொலை செய்தார்.

இச்சம்பவம் ஏற்படுத்தி இருந்த அதிர்வலைகள் நீங்குவதற்குள் நேற்று முன்தினம் கொக்குவில் பகுதியில் பட்டப்பகலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூர்க்கத்தனமான வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். தம் முகங்களைத் துணித்துண்டுகளினால் மூடிக் கொண்ட கும்பலொன்றினால் இவர்கள் துரத்தி துரத்தி வெட்டப்பட்டுள்ளனர். இதன் காரணத்தினால் கை, கால் மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோத்தர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிக்சிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணை செய்வதற்காக கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இச்சமயம் இக்கோயிலுக்கு பின்புறமாக உள்ள பற்றைக்காட்டில் சில இளைஞர்கள் மது அருந்தி குழப்பத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டன. இதனைப் பொலிஸாரும் அவதானித்துள்ளனர். அத்தோடு அவர்களிடம் வாள்கள் போன்ற ஆயுதங்கள் காணப்பட்டமையும் பொலிஸார் பார்த்துள்ளனர். அதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நிலைமையை உணர்ந்து மீண்டும் அலுவலகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதனை அவதானித்த அக்கும்பல் குறித்த இரு பொலிஸ் உத்தியோத்தர்களையும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்று துரத்தி துரத்தி வாள்களால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் பிரதேசத்தில் பதற்றத்தையும் அச்சம் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

என்றாலும் இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதலில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களும் ஆவா குழு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. யாழ் குடா நாட்டில் மீண்டும் இயல்பு வாழ்வை சீர்குலைப்புதற்கான முயற்சியாகவே இந்த வன்முறைச் சம்பவங்களை நோக்க வேண்டியுள்ளது. வடபகுதி மக்கள் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் அண்மைக் காலத்தில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை சிறிதளவேனும் விரும்பாதவர்களாக உள்ளனர். அச்சம் பீதியில்லாத அமைதி சமாதான சூழலையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் ஒரு சிலர் தம் நலன்களுக்காக யாழ் குடாநாட்டு மக்களின் இயல்பு நிலையைச் சீர்குலைக்க முயற்சி செய்வதாகவே தெரிகின்றது. ஆனால் இவ்வாறானவர்களின் பிழையான செயற்பாடுகளால் எல்லோரதும் இயல்பு வாழ்வுமே பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்புலத்தில் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று அங்கு விஜயம் செய்தார். அங்கு பொலிஸ் உயரதிகாரிகளை குறிப்பாக சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.இதனடிப்படையில் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து அச்சம் பீதியில்லாத அமைதிச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும், மக்களின் இயல்பு வாழ்வைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தினதும் குறிப்பாக பொலிஸாரின் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பையும் கடமையையும் உரிய ஒழுங்கில் நிறைவேற்றுவதில் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

அதனால் இதன் நிமித்தம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும், ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டியது சட்டம் ஒழுங்கையும், அமைதி சமாதானத்தையும் விரும்பும் சகலரதும் பொறுப்பாகும். 


Add new comment

Or log in with...