'கட்சி ரீதியில் பிரிந்து நின்று நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது' | தினகரன்

'கட்சி ரீதியில் பிரிந்து நின்று நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது'

 

* கடந்த கால அனுபவங்களே தேசிய அரசுக்கு வழிவகுத்தது
* மத்தள விமான நிலையமும் விரைவில் இலாபமீட்டும்

ஜே. ஆர். ஜயவர்தன 1977ல் ஆரம்பித்த மகாவலித் திட்டத்திற்குப் பிறகு முன்னெடுக்கப்டும் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டம் கண்டியிலிருந்து வெல்லவாய, மொனராகலை வரை முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டமாகுமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அளுத்கம கந்த விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கூறியதாவது:

கடந்த காலங்களில் கட்சி ரீதியில் பிரிந்து நின்று சுயநல அரசியல் செய்ததால் நாடு பின்னடைந்ததை உணர்ந்ததாலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பல கட்சிகளுடன் இணைந்து தாம் தேசிய அரசை ஏற்படுத்தினோம்.

தேசிய அரசு மூலம் தான் ஒரு நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப முடியும். தேசிய நெருக்கடிகளுக்கு நாம் ஒன்றுபட்டுத் தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த ஆசீர்வாதப் பூஜையை நடத்துவது தொடர்பாக கந்த விஹாரையின் தலைமை தேரர் உள்ளிட்ட அனைத்து தேரர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க அனைத்து பக்கதர்களும் இங்கு வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது தேசிய அரசாங்கம் களுத்துறை மாவட்டத்திலும் இதுபோன்ற பூஜையை நடத்தவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது அபேட்சகராக கொண்டு வந்து அவரின் ஒத்துழைப்புடன் நாம் தேசிய அரசாங்கத்தை அமைத்து, நாட்டை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவும், அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

வரட்சி, வெள்ளம் மற்றும் டெங்கு போன்ற பாதிப்புகளால் நாட்டின் அபிவிருத்தி வேகம் குறைந்துவிடும் எனப் பயந்தோம். ஆனால் கடந்த வருடத்தை விட சமமாகவோ அல்லது அதனிலும் அதிகமாகவோ பொருளாதார அபிவிருத்தி ஏற்படுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி கூறுவதோடு வரட்சி காரணமாகப் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு எனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். சரியான வேளையில் மழை கிடைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் இதைவிட அதிகரித்திருக்கும்.

துறைமுக அதிகார சபையும், சைனா மஞ்சன்ட் நிறுவனமும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் நாட்டின் பாரிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக பாதிப்புக்காக கடந்த சில வருடங்களாக 46- 47 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதி அரசுக்கு எஞ்சியிருந்தால் அனைவருக்கும் இலவசமாக சுகாதார சேவையை வழங்கி இருக்கலாம். அவ்வாறில்லாவிட்டால் நாட்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் அறுபது வீதத்தை அதிகரிக்கச் செய்திருக்கலாம். ஆனால் 40- 47 பில்லியனை விழுங்கிய வெள்ளை யானையால் எமக்கு எதுவும் செய்ய முடியாது போயுள்ளது.

1.1 பில்லியன் டொலரை நாம் பெற்றுள்ளதால் கடனை அடைக்க எம்மால் முடிந்துள்ளது.

மத்தல விமான நிலையத்தையும் சரியான முகாமைத்துவத்தின் கீழ்கொண்டு வந்தால் விமான சேவைகள் அதிகார சபையினது வருமானமும் அதிகரிக்கும். எமது புதிய திட்டங்களின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபம் பெறும் துறைமுகமாக மாற்றிய பின் அதனால் பெறப்படும் இலாபம் அனைத்து பிரதேசங்களுக்கும் கிடைக்கும். அதில் பெறும் இலாபம் களுத்துறைக்கும் காலிக்கும் கிடைக்கும்.

பாரிய நகர் கொள்கையின்படி கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்ய நாம் திட்டமிட்டுள்ளதால் கொழும்புக்கு அப்பால் களுத்துறை அவிசாவளை, இங்கிரிய, ஹொரண, பண்டாரகம போன்ற பிரதேசங்களிலும் கைத்தொழில் மயமாக்கல் நடைபெறும்.

அதேபோல் தெற்கு அதிவேகப் பாதையை நீடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். ருவன்புர அதிவேகப் பாதையை ஆரம்பிக்கவும் உத்தேசித்துள்ளோம். கைத்தொழில் வலயங்களை ஆரம்பிக்கும் நிகழ்ச்சியை மிலனிய பிரதேசத்தில் ஆரம்பிக்க உள்ளோம். எதற்காக பதில் அமைச்சர் அஜித் பீ. பெரேராவுக்கு நன்றி கூறவேண்டும்.

மில்லனிய போன்று 600 தொடக்கம் 700 ஏக்கர் காணியை கைத்தொழில் வலயத்துக்காக அவிசாவளை பிரதேசத்திலும் ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் றைகமவிலும் ஆரம்பிக்க உள்ளோம். கைத்தொழில் மயமாக்கலை அடிப்படையாக் கொண்டு அபிவிருத்தியை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

அதேபோல் பேருவளையிலிருந்து மாத்தளை வரை பாரிய உல்லாசப் பயண பிராந்தியமொன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றோம். அது பெந்தர, சேதுவ, பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படும். உல்லாசப் பயண பிரதேசங்களை உருவாக்குவதன் மூலம் பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் வணக்கஸ்தலங்களும் முன்னேற்றம் அடையும்.

ஜனாதிபதி தலைமையில் பொலன்நறுவை, மொறகஹகந்த மல்வத்து ஓய திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக மாகாண முதலமைச்சருடன் நான் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினேன். கண்டி அபிவிருத்தியினூடாக மாத்தளை நகரையும் அபிவிருத்திச் செய்யவுள்ளோம்.


Add new comment

Or log in with...