மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்தும் முன்மாதிரி | தினகரன்

மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்தும் முன்மாதிரி

 

மனித நேயம் என்பது ஒரு இனத்தையோ, மொழியையோ, மதத்தையோ வைத்து அளவிடக்கூடியதொன்றல்ல. இனம், மதம், மொழி கடந்து காட்டப்படுவதே மனித நேயமாகும்.

அன்பு, கருணை, காருண்யம் அனைத்தும் மானிட நேயத்துக்குள் உள்வாங்கப்பட்டவையாகும். மனித நேயத்தை வெளிப்படுத்துகின்ற போது தமிழன் ஏன்றோ, முஸ்லிம், சிங்களவர் என்றோ பார்ப்பதில்லை. அங்கு மனிதம் மட்டுமே மேலோங்கி நிற்கின்றது. இரண்டொரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வு எமது நாட்டில் இன்னமும் மனிதம் வாழ்கின்றது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். அந்த அதிகாரி ஹேமச்சந்திர சிலாபம் பங்கதெனியவைச் சேர்ந்த சிங்களவராவார். அவர் 24 மணி நேரமும் நீதிபதியுடனேயே இருந்து கண்காணித்து வருபவராவார். மிகவும் நேர்மையான அதிகாரியாகவே இருந்து வந்தவர்.

கொலையாளி நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்த போது நீதிபதியை காருக்குள் தள்ளிவிட்டு துப்பாக்கி வேட்டுக்களை தானே எதிர்கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாது போயிற்று, இதனால் நீதிபதி இளஞ்செழியன் மிகவும் வேதனையடைந்து கண்ணீர் விட்டழுது புலம்பினார். தன்னைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அதிகாரியை தன் உடன்பிறந்தவராகக் கருதி குடும்பத்தவர் ஒருவரை இழந்த வேதனைக்குள் அவர் தள்ளப்பட்டார்.

மரணமான ஹேமச்சந்திரவின் பங்கதெனிய இல்லத்துக்கு பூதவுடலுடன் வந்த நீதிபதி இளஞ்செழியன் ஹேமந்திரவின் மனைவியின் காலில் விழுந்து அழுது மன்னிப்புக் கேட்டதைக் கண்ட பிரதேச மக்கள் மெய்சிலிர்த்துப் போய் திக்குமுக்காடிப் போனார்கள். ஹேமச்சந்திரவின் இறுதிச் சடங்குக்கான சகல ஏற்பாடுகளையும் அவரே தலையில் சுமந்து இரவு பகல் பாராது செயற்பட்டார்.

இறுதிச் சடங்கு இடம்பெற்ற கடந்த புதன்கிழமை சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் யாழ் மாவட்ட நீதிபதிகள் பலரும், சட்டத்தரணிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு அழுதழுது உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன் தனது உயிரைப் பணயமாக வைத்து என்னைக் காப்பாற்றிய இந்த மனிதனுக்கு நான் என்னதான் கைம்மாறு செய்தாலும் அவரது தியாகத்துக்கு ஈடாகமாட்டாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தான் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் ஆண்கள் ஹேமச்சந்திரவுக்கும் இரண்டு பிள்ளைகள் ஒருவர் ஆண், மற்றவர் பெண். அந்த இரண்டு பிள்ளைகளும் இனிமேல் எனது பிள்ளைகள் தான் அவர்களை இன்று முதல் நான் தத்தெடுத்துக் கொண்டுவிட்டேன். அவர்களது எதிர்காலம் இருளடையாமல் வாழ வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த உரை அங்கு கூடியிருந்த அனைவரையும் பிரமிப்படையச் செய்தது.

தனது பிள்ளைகளுக்காக என்னென்ன செய்வேனோ அவை அனைத்தும் ஹேமந்திரவின் பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுப்பேன். இன்று முதல் அந்த இரண்டு செல்வங்களும் எனது பிள்ளைகளாவார்கள். அவர்களுக்கு தந்தை இல்லாத குறையை நான் நிவர்த்தி செய்வேன்! நீதிபதியின் உரையை கேட்ட அங்கு கூடிநின்ற சிங்கள மக்கள் கண்கலங்கி நின்றனர்.

நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் இந்த யதார்த்த பூர்வமான முன்மாதிரி எமது நாட்டில் மனிதம் சாகவில்லை. இன்னமும் வாழ்கிறது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது. இன்னமும் எங்கள் மத்தியில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழரோ, சிங்களவோ, முஸ்லிம்களோ அனைவரது உடம்பிலும் ஓடுவது ஒரே இரத்தம்தான் என்பதை இது உணர்த்துகின்றது.

நாம் மொழியால், மதத்தால், இனத்தால் வேறுபட்டுக் காணப்பட்டாலும் மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்பதை நீதிபதி இளஞ்செழியனின் முன்மாதிரி எமக்குக் காட்டுகின்றது. நாட்டில் 30, 40 வருடங்களாக இனங்கள் மிக மோசமாக மோதிக்கொண்டனர். இரண்டு பக்கத்திலும் பேரிழப்புகளை எதிர்கொண்டோம். தமிழன் என்றால் சிங்களவர்கள் வெறுப்புடனேயே நோக்கினர். இன்றும் கூட தெற்கில் அத்தகையதொரு மனநிலையே காணப்படுகிறது.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் தெற்கில் பங்கதெனிய என்ற சிங்களப் பகுதியில் வாழும் ஒரு சிங்களவர் வடக்கில் ஒரு தமிழ் மகனைக் காப்பாற்றி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இது இனவாதத்தில் குளித்துக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு நல்லதொரு பாடமாக அமையப் பெற்றுள்ளது. இனிமேலும் நாம் இனவாதத்தினுள் வாழ முற்பட்டால் நாட்டுக்கு விமோசனமே கிட்டப் போவதில்லை.

அதேபோன்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் முன்மாதிரி அனைவரது கண்களையும் திறந்து விட்டுள்ளது. எமது இதயங்கள் இனியாவது விரிய வேண்டும். நாம் மனிதர்கள், சகோதரர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். என்ற மனநிலை அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அன்பு, கருணை, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி மானுட நேயம் தழைத்தோங்க வேண்டும். அதற்கான உறுதிப்பாட்டினை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் இருக்கவே கூடாது. நாம் இலங்கை மக்கள் என்ற உணர்வே எம்மில் ஏற்பட வேண்டும்.


Add new comment

Or log in with...