Home » காசா மீது விரைவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் முஸ்தீபு

காசா மீது விரைவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் முஸ்தீபு

ஈரானின் எச்சரிக்கைக்கு மத்தியில் அமெரிக்காவின் மற்றொரு விமானதாங்கிக் கப்பல் விரைவு: வெபனான் எல்லையிலும் போர் பதற்றம்

by damith
October 16, 2023 6:41 am 0 comment

ஹமாஸ் கட்டுப்பாட்டு காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தனது துருப்புகளை தயார்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால், ‘பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 2,300ஐ தாண்டியுள்ளது. இதில் கால் பங்கினர் சிறுவர்கள் என்பதோடு மேலும் 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர் எண்ணிக்கை 1,300ஆக அதிகரித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகங்கள் துண்டித்து இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு முகம்கொடுத்திருக்கும் காசா பகுதி பெரும் அழிவுகளை சந்தித்துள்ளது. காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் அங்குள்ள மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நிலையில் அவர்களை சமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு நடந்த வான் தாக்குதல்களில் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை தேடும் மீட்புப் பணிகள் நேற்றும் இடம்பெற்றன. காசாவின் வடக்கில் இருந்து சுமார் 1.1 மில்லியன் மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட நிலையில் ஒரு மில்லியன் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

காசா எல்லைப் பகுதிகளில் இலட்சக்கணக்கான படைகளை குவித்திருக்கும் இஸ்ரேல், விரைவில் தரைவழி தாக்குதல் ஒன்றுடன் தரை, வான் மற்றும் கடல் வழியான தாக்குதல்கள் முன்னெடுப்பது பற்றி எச்சரித்துள்ளது.

இராணுவ மேலங்கியை அணிந்தபடி கடந்த சனிக்கிழமை (14) முன்னரங்கு பகுதிக்குச் சென்று துருப்புகளைச் சந்தித்த இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ‘அடுத்த கட்டம் வரப்போகிறது’ என்று எச்சரித்தார்.

ஹமாஸ் அமைப்பினால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கும் சுமார் 150 இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியிலேயே இஸ்ரேலியப் படை ஈடுபடவுள்ளது. 120 பணயக் கைதிகளை இஸ்ரேல் அடையாளம் கண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் 22 பணயக்கைதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா மீதான தரைவழித் தாக்குதல் வீட்டுக்கு வீடும் இடம்பெறும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக பலஸ்தீன போராளிகளின் பரந்த சுரங்கப்பாதை கட்டமைப்பு இந்த மோதலை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவை அடுத்து வடக்கு காசாவில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் வாகனங்களிலும், கால்நடையாகவும் தெற்கை நோக்கி பயணித்து வருகின்றனர்.

எனினும் 40 கிலோமீற்றர் நீண்ட 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் உலகின் அதிக சனநெரிசல் கொண்ட பகுதிகளில் ஒன்றான காசாவில் இடம்பெயரும் அதிக மக்களுக்கு ஒரே நேரத்தில் அடைக்கலம் வழங்கும் இட வசதி இல்லாத சூழலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

‘நிலைமை பயங்கரமாக உள்ளது’ என்று வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் இருந்து தனது மனைவி, தாய் மற்றும் ஏழு குழந்தைகளுடன் இடம்பெயர்ந்துள்ள ஜுமா நாசர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாம் உணவு அல்லது உறக்கம் இல்லாமல் இருக்கிறோம். என்ன செய்வது என்று எமக்குத் தெரியவில்லை. இறைவனையே நம்பியுள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

காசாவில் இஸ்ரேலின் செயற்பாடு தற்பாதுகாப்பை தாண்டிவிட்டதாகவும் காசா மக்கள் மீதான தனது கூட்டுத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வான் யி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலைத் தவிர்த்து காசாவின் தெற்கு எல்லையை எகிப்து கட்டுப்படுத்தி வருகிறது. எனினும் பலஸ்தீன அகதிகளுக்கான அந்த எல்லையை திறக்க எகிப்து மறுத்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேலிய படையினர் மற்றும் குடியேற்றவாசிகள் இடையிலான மோதல்கள் தொடரும் நிலையில் கடந்த எட்டு நாட்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்திருப்பதோடு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத்தின் சுற்றிவளைப்புகளில் மேலும் பல நூறு பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் மற்ற

எல்லைகளிலும் போர் பதற்றம்

இந்நிலையில் முஸ்லிம் உலகம் மற்றும் அதற்கு வெளியிலும் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருவதோடு, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கொடிகள் எரிக்கப்பட்டு மக்கள் கோபத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் எதிரி நாடான ஈரான் ஆதரவுடைய போரட்டக் குழுக்கள் இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனான் மற்றும் சிரியாவில் வலுப்பெற்றிருக்கும் சூழலில் இந்த மோதல் இஸ்ரேலின் மற்ற எல்லைப் பகுதிகளுக்கும் பரவும் அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புடன் அடிக்கடி மோதல் இடம்பெற்று வந்ததோடு அந்த அமைப்பு சிறிய போராட்டக் குழு ஒன்றை எல்லை கடந்து இஸ்ரேலுக்குள் அனுப்பவும் முயன்றதாக கூறப்படுகிறது.

பிரச்சினைக்குரிய ஷெபா பண்ணைகள் பகுதிகளில் ஐந்து இஸ்ரேலிய முகாம்கள் மீது ஏவுகணை மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவ முகம் ஒன்றின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதையும் இஸ்ரேலில் இருந்து ஷெல் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் வருவதைக் கேட்டதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லெபனானில் இருந்து ஊடுருவல்கள் இடம்பெற்ற சந்தேகத்தில் ஐந்து எல்லைக் கிராமங்கள் முடக்கப்பட்டதாக இஸ்ரேலின் கேன் வானொலி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மற்றொரு முனையில் போரை ஆரம்பிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் லெபனானை அழிப்பதாகவும் இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது.

சிரியாவில் அல்லது அதன் ஊடாக ஆயுதங்களை அனுப்பி ஈரான் அவ்வாறான இரண்டாவது முனை ஒன்றை திறக்க முயல்வதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் எக்ஸ் சமூகதளத்தில் நேற்று எச்சரித்திருந்தார்.

ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதரகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலின் போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்புகள் உடன் நிறுத்தப்படாவிட்டால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லக் கூடும் என்றும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தது.

ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே கடந்த சனிக்கிழமை கட்டாரில் ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.

இதன்போது இஸ்ரேலில் பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஹமாஸ் இலக்கை அடைவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரான் உறுதி அளித்ததாகவும் ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பது மற்றும் பொதுமக்கள் மீதான வன்முறைகள் மற்றும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிப்பது தொடர்பான தீர்மானம் ஒன்றின் மீது பாதுகாப்புச் சபையில் இன்று (16) வாக்கெடுப்பை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

2ஆவது அமெரிக்க விமானதாங்கிக்

கப்பல் விரைவு

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமெரிக்காவின் கடப்பாட்டின் அடையாளமாக கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு இரண்டாவது விமானதாங்கி கப்பல் ஒன்றை நிலைநிறுத்துவதாக அமெரிக்க பாதுகாப்புச் செலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

தற்போது அனுப்பப்பட்டிருக்கும் யு.எஸ்.எஸ் கர்ரியர் ட்வைட் ஐசன்ஹோவர் விமானதாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் படைகள் ஏற்கனவே பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் யு.எஸ்.எஸ் கெரால்ட் ஆர் போர்ட் விமானதாங்கி கப்பலுடன் இணையவுள்ளது. ‘இந்தப் போரை பெரிதுபடுத்த முயற்சிக்கும் எந்த ஒரு அரசு அல்லது அரசு சாராத தரப்புகளையும் தடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று லொயிட் குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேலுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான’ முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களும், ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள மூன்று அமெரிக்க விமானப்படை படைப் பிரிவுகளுடன் இணையும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோதல் வெடித்த பின் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை தொலைபேசியில் அழைத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை கண்டித்துள்ளார்.

இதேவோளை இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை சவூதி அரேபியா இடைநிறுத்தி இருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பிராந்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கடன், சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹானை ரியாதில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்குப் பின்னர் சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், காசாவில் போர் நிறுத்தம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் இரு புனிதத் தலங்களை கொண்டிருக்கும் சவூதி அரேபியா, இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மொரோக்கே அண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய நிலையில் சவூதியும் அதே வழியை பின்பற்ற அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT