Thursday, March 28, 2024
Home » இலங்கை-இந்திய நட்புறவை வலுப்படுத்தும் கப்பல் சேவை

இலங்கை-இந்திய நட்புறவை வலுப்படுத்தும் கப்பல் சேவை

by damith
October 16, 2023 6:00 am 0 comment

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாற்பது வருடங்களுக்கு பின்னர் இக்கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு வரையும் கொழும்புக்கும் – தூத்துக்குடிக்கும் இடையிலும், தலைமன்னாருக்கும் இரமேஸ்வரத்துக்கும் இடையிலும் என இரு கப்பல் போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வந்தன. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1982 இல் இக்கப்பல் போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டது.

ஆனாலும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இக்கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இக்கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவென ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ​போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் நாகபட்டினம்_- காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைக்கான ஒப்பந்தமும் ஒன்றாகும்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 08 ஆம் திகதி இக்கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான வெள்ளோட்டமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் இருந்து இச்சேவையை நிகழ்நிலையில் நேற்றுமுன்தினம் தொடக்கி வைத்தார். நாகப்பட்டினத்தில் இருந்து காலையில் புறப்பட்ட ‘செரியாபாணி’ என்ற இக்கப்பல், பிற்பகல் 12.20 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இப்பயணிகள் கப்பலை துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கட்றறொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா உள்ளிட்ட அமைச்சர்களும் அதிதிகளும் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை அங்குரார்ப்பணம் செய்த வைத்து உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் இக்கப்பல் சேவையின் ஊடாக ஆரம்பமாவதோடு, இருதரப்பு நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடியதுமான முக்கிய மைல்கல்லாகவும் இச்சேவை உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இக்கப்பல் சேவை தொடக்க வைபவத்தின் போது காணொளி ஊடாக வழங்கிய செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கடல்வழி இணைப்பை ஏற்படுத்தியமை தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவாக்குவதற்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை முக்கியபடியாக அமையும்’ என்றுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பாடல் பல ஆயிரம் வருடங்களாக நீடித்து வருகின்றது. அதன் ஊடாக கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றை இருநாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன. நாகப்பட்டினமும் அதன் அருகிலுள்ள நகரங்களும் இலங்கை உட்பட பல நாடுகளுடன் நீண்ட காலமாக கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களிலும் கூட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழி போக்குவரத்துகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசாரம், வர்த்தகத் தொடர்புகள் வளர்ச்சியடைந்து நீடித்து நிலைக்கின்றன. சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இப்பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டது. ஆன போதிலும் யுத்தம் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இக்கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இரு நாடுகளுக்கும் நன்மைகள் கிடைப்பதாகவே அமையும். மக்கள் அங்கும் இங்கும் சென்று வரவும், தொடர்பாடல்களை மேலும் மேம்படுத்தி வலுப்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கும். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறை மேலும் முன்னேற்றமடையத் துணைபுரியும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதனால் இப்பயணிகள் கப்பல் சேவை மூலம் உச்சபயனை அடைந்து கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன் ஊடாக சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டுக்கு மாத்திரமல்லாமல் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பாடலின் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் இக்கப்பல் சேவை பக்கத்துணையாக அமையும். அதனை மக்கள் உறுதிபட நம்பவும் செய்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT