பவுசர்களில் எரிபொருள் வெளியேற்றம்; 2 இலட்சம் பெற்றோல், 40 ஆயிரம் டீசல் | தினகரன்

பவுசர்களில் எரிபொருள் வெளியேற்றம்; 2 இலட்சம் பெற்றோல், 40 ஆயிரம் டீசல்

 
கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய பகுதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய ஊழியர்களுக்கும் பாதுகாப்பு பிரிவிற்கும் இடையே குழப்ப நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 10 இற்கும் மேற்பட்டோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
எரிபொருள் வழங்குவது அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த பணியை மேற்கொள்ள முற்பட்ட வேளையில், அவர்களது பணிக்கு இடைஞ்சல் விளைவித்த போராட்டக்காரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
பின்னர் குறித்த நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 
இதேவேளை, கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து 15 பவுசர்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.
 
இன்று பிற்பகல் 2.00 மணி வரை, இராணுவத்தினரால் 230,000 லீற்றர் பெற்றோல் மற்றம் 40,000 லீற்றர் டீசலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
பெற்றோலிய சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (26) மாலை 6.30 மணிக்கு பேச்சுவார்த்தையொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
கொலன்னாவையிலிருந்து கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு அவசியமான எரிபொருளை கொண்டு செல்ல முற்பட்ட வேளையில், அதனை கொண்டு சென்ற புகையிரதத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைமறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
திருகோணமலை துறைமுகத்திலுள்ள சீனாவின் எரிபொருள் தாங்கி தொகுதி மற்றும் ஹம்பாந்தோட்டை எரிபொருள் தாங்கி தொகுதியை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவருதல், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மிக விரைவாக நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய சங்க ஊழியர்கள் தமது பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...