நீதிபதி மீதான சூடு; முன்னாள் போராளி சரண் | தினகரன்

நீதிபதி மீதான சூடு; முன்னாள் போராளி சரண்

 
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பிலா பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
 
இன்று (25) காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்துள்ளார்.
 
சந்தேகநபர் சிவராசா ஜெயந்தன் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
 
கடந்த சனிக்கிழமை (22) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஹேமரத்ன (58) என்பவர் உயிரிழந்ததோடு, மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சந்தேகநபர் 1994ஆம் ஆண்டு (16 வயதில்) விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதிலுமுள்ள சட்டத்தரணிகள் நேற்றைய தினம் (24) பணி பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபட்டதோடு, யாழிலுள்ள தனியார் பஸ் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
 
இச்சம்வத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, குறித்த சம்பவத்தில் உயிர் நீத்த ஹேமரத்ன, உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டதோடு, அவருக்கான பதவி உயர்வு இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
(படம்: புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

Or log in with...