Tuesday, April 16, 2024
Home » பொருளாதார நெருக்கடியை தீர்த்து அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதே அரசின் நோக்கம்

பொருளாதார நெருக்கடியை தீர்த்து அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதே அரசின் நோக்கம்

- ஆய்வு கொடுப்பனவு அதிகரிப்பு, அதற்கு வரி விடுவிப்பு கோரிக்கை முன்வைத்த பல்கலை விரிவுரையாளர்கள் சம்மேளனத்திடம் ஜனாதிபதி

by Rizwan Segu Mohideen
October 14, 2023 1:45 pm 0 comment

– 3 வாரத்திற்குள் சுற்றுநிருபம் வெளியிடும் இயலுமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் வருமானம் ஈட்டும் போது அறவிடப்படும் வரியிலிருந்து விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதெனவும், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ​நோக்கமெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மேற்படி கல்வி ஆய்வுகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தற்போதுள்ள சுற்று நிருபங்கள் ஊடாக போதிய ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும், தற்போதுள்ள வரி விதிப்புக்களிலிருந்து விடுப்பதற்கான சுற்று நிருபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிந்து 03 வாரங்களுக்கு தனக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்காக கல்வி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் அலுவலகத்துடன் ஒத்துழைத்து சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிய FUTA உறுப்பினர்களை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை இரத்துச் செய்து பல்கலைக்கழக நிருவாகச் செயற்பாடுகளை கலினோனியா மற்றும் பீஜிங் பல்கலைக்கழக முறைமைகளுக்கமைய தயாரிப்பதற்கான இயலுமை தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பரண ஜயவர்தன, செயலாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் உட்பட சம்மேளத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT