காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசியல் பின்னணி எதுவுமில்லை | தினகரன்


காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசியல் பின்னணி எதுவுமில்லை

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்கவை எதிர்வரும் ஓகஸ்ட் 02 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க கைது செய்யப்பட்டார். கடந்த 2007 ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று(19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஓகஸ்ட் (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த அரசியல் பின்னணியும் இருக்கவில்லை.கப்பம் பெறும் நோக்கிலேயே அவர்கள் கடத்திச் சென்று கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

மஹிந்தவின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக குழுவொன்று எனது தலைமையில் நியமிக்கப்பட்டது. இதன் மூலம் புலிகளின் பெயரால் கப்பம் பெறுவதற்காக கடத்தப்படும் முயற்சிகளை நிறுத்தி பல உயிர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மாணவன் முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவுக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்தவராவார்.

அவுஸ்திரேலியா செல்ல இருந்த இம் மாணவர் நண்பர்களுக்கு விருந்துபசாரம் வழங்கிய போதே கடத்தப்பட்டார்.

இவரிடம் கப்பம் கோரப்பட்டதோடு கப்பப்பணம் தாமதமானதால் கொல்லப்பட்டார். திருகோணமலை பகுதி பங்கர் ஒன்றிலே இவர் கடைசியாக மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த கடற்படை வீரர்கள் சிலர் கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு பெற்றோருடன் தொலைபேசியில் பேச இடமளித்திருந்தார்கள். 4 இளைஞர்கள் கொல்லப்பட்டதை அறிந்த நான் தந்தை என்ற வகையில் பெரும் கவலையடைந்தேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இது பற்றி பேசினேன். புலிகளின் பெயரால் இவ்வாறு கப்பம் பெறுவதற்காக காணாமல் ஆக்குவதற்கு இடமளிக்க முடியாது என்று அவரிடம் எடுத்துரைத்தேன். இதன் படி காணாமல் போனோர் தொடர்பில் குழுவொன்றை எனது தலைமையில் நியமிக்க மஹிந்த நடவடிக்கை எடுத்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 50 குடும்பங்களை அழைத்து பேசினேன். இவர்கள் எந்த அரசியல் பின்னணி காரணமாகவும் கடத்தப்பட்டிருக்கவில்லை. 2005 ஜனாதிபதி தேர்தலில் பலாலியில் வைத்து மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மாலை அணிவித்த ஒருவரின் மகனும் கடத்தப்பட்டவர்களிடையே இருந்தார்.

கப்பம் பெறும் நோக்கத்துடன் கடத்தப்படும் நடவடிக்கைகளை நாம் நிறுத்தினோம். இந்த காலத்தில் சிவாஜிலிங்கமும் என்னோடு பேசி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சம்பவங்கள் குறித்தும் விசாரிக்குமாறு கோரினார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதுபற்றி என்னுடன் பேசினார்.கப்பத்துக்காகவே கடந்த ஆட்சியில் காணாமல் போதல்கள் இடம்பெற்றன என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

எம்.எஸ்.பாஹிம் 


Add new comment

Or log in with...