கொழும்பு - பதுளை ரயில்சேவை தடையின்றி முன்னெடுப்பு | தினகரன்

கொழும்பு - பதுளை ரயில்சேவை தடையின்றி முன்னெடுப்பு

ஹட்டன் - கொட்டகலைக்கு இடைப்பட்ட,60 அடி பாலத்தில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதால், மாற்று ஏற்பாடுகள் மூலம் கொழும்பு - பதுளை ரயில் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே செயற்பாட்டு அதிகாரி விஜய சமரசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையான அனைத்து ரயில் சேவைகளும் வழமைப்போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சேதமடைந்திருக்கும் 60 அடி பாலம் மக்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றது என்பதனால் அக்குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விசேட இலவச பஸ் இணைப்புச் சேவை ஏற்பாடு செயப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன்படி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் ஹற்றன் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்கு பயணிகள் இறக்கிவிடப்படுவர். அதன் பின்னர் ரயில் மேற்படி பாலத்தைக் கடந்து கொட்டகலை ரயில் நிலையத்தில் தரித்து நிற்கும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் விசேட இலவச பஸ் இணைப்புச் சேவை மூலம் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்கு சுமார் 10 நிமிடங்களே தாமதமாகும். அதனையடுத்து பயணிகள் மீண்டும் அதே ரயிலில் ஏறி பதுளை வரை செல்ல முடியுமென்றும் விஜய சமரசிங்க விளக்கமளித்தார்.

இந்த விசேட இலவச பஸ் இணைப்புச் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதுடன் அதற்கான மொத்த செலவீனத்தையும் திணைக்களம் பொறுப்பேற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இம்மாற்று ஏற்பாடு எவ்வளவு காலத்துக்கு நடைமுறையிலிருக்குமென கேட்கப்பட்ட கேள்விக்கு,பாலத்தை திருத்தும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதனை உறுதியாக கூறமுடியாது என்றும் சில வேளைகளில் இரண்டு வாரங்களுக்கு மேற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.சேதமடைந்த பாலத்தை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து விசேட அதிகாரிகள் குழு நேற்று அங்கு சென்றிருந்தன.

தண்டவாளம் உடனடியாக திருத்தப்பட்டதையடுத்தே ரயில் சேவைகள் வழமைப்போன்று பதுளை வரை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...