இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மீராகுமார்? | தினகரன்

இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மீராகுமார்?

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (17) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 
 
குறித்த வாக்களிப்பில், 776 எம்.பிக்கள் மற்றும்  4,120 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவுள்ளனர். 
 
சற்று முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பாராளுமன்றத்தில் வைத்து தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
 
இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள் என மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
வாக்குப்பதிவை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் 33 பேர் மேற்பார்வையிடுகிறார்கள். மாலை 5 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைகிறது.
 
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று (17) வருவதாலும், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியாகும். வெற்றி பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக 25 ஆம் திகதி பதவியேற்பார்.
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...