காந்தியின் பேரனை நிறுத்தியது ஏன்? பின்னணியில் காங்கிரசின் திட்டம் | தினகரன்

காந்தியின் பேரனை நிறுத்தியது ஏன்? பின்னணியில் காங்கிரசின் திட்டம்

வெற்றி வாய்ப்பு இல்லை என நன்றாக தெரிந்தும், மஹாத்மா காந்தியின் பேரனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த, காங்கிரஸ் முன்வந்ததன் பின்னணி குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

மஹாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி துணை ஜனாதிபதி தேர்தலில் காங். தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் போட்டியிட உள்ளார். பா.ஜ. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வின் போதே, எதிர்க் கட்சிகள் மத்தியில் பலமாக அடிபட்ட பெயர் கோபாலகிருஷ்ண காந்தி; காரணம் இவர் பெயரை முதன்முதலில் பரிந்துரைத்தவர், பீஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தான்.

கடந்த மாதம் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்காக சென்னை வந்திருந்த எதிர்கட்சி தலைவர்கள் நடத்திய ஆலோசனையில் 'ஜனாதிபதி வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்தலாம்' என, நிதிஷ் குமார் கூறினார். இதை, திரிணமுல் தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க., என அனைத்து கட்சிகளுமே ஏற்றுக் கொண்டன.

காங். துணைத் தலைவர் ராகுல் மட்டும் 'இது குறித்து இப்போது பேச வேண்டாம். இன்னும் நாட்கள் இருக்கின்றன. வேறு ஒரு நாளில், டில்லியில் கூடி முடிவெடுக்கலாம்' என, கூறிவிட்டதாக ஐக்கிய ஜனதா தள மூத்த, எம்.பி. தியாகி கூறியிருந்தார்.

காங்கிரசில் உள்ள ஒருசில மூத்த தலைவர்களும், கோபாலகிருஷ்ண காந்தியின் தேர்வை விரும்ப வில்லை. இதனால் இதுகுறித்த கருத் தொற்றுமை ஏற்படாமல் இருந்தது. இதன்பின் சோனியா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திடீரென மீரா குமார் பெயர் ரகசியமாக தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதை இடதுசாரிகள் உட்பட சில தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் தங்கள் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் பெயரை அதிரடியாக பா.ஜ., அறிவிக்க அவருக்கு முதல் ஆளாக நிதிஷ்குமார் ஆதரவு அளித்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இதை, சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதிஷ் குமாரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் போன்றோர் கடுமை யாக விமர்சித்தனர்.

இதனால், 2 தரப்பு உறவுகளும் மோசம் அடைந்தது. வெளிநாட்டிலிருந்து திரும்பிய ராகுல், இதைசீர்செய்யும் பணியில் இறங்கினார். அடுத்த லோக்சபா தேர்தல் வரை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சீர்குலையாமல் இருக்க வேண்டுமென, ராகுல் விரும்புகிறார். இதனால், நிதிஷ் குமாரிடம் போன் மூலம் பேசி இயல்பு நிலையை ஏற்படுத்தினார்.

இதையடுத்தே, நிதிஷ் குமாரின் தேர்வான கோபால கிருஷ்ண காந்தியை, துணை ஜனாதி பதி தேர்தலில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது; இதன் மூலம், நிதிஷ் குமாரை சமாதானம் செய்துள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது.

இந்த பின்னணியில் தான், வெற்றி வாய்ப்பு இல்லை என தெரிந்தும், துணை ஜனாதிபதி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்தும் முடிவுக்கு, காங்கிரஸ் வந்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


Add new comment

Or log in with...