டெங்கு 269 பேர் மரணம் குழந்தைகளே கூடுதல் பாதிப்பு | தினகரன்

டெங்கு 269 பேர் மரணம் குழந்தைகளே கூடுதல் பாதிப்பு

இவ்வருடம் இதுவரை 89,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 30 வீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். இதுவரை 269 பேர் மரணமாகியுள்ளதுடன் இதில் 15 வீதமானோர் குழந்தைகள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 15 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் ஆஸ்பத்திரி தரவுகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏழு வருடங்களாக முதலாவதும் நான்காவதும் பிரிவிலான டெங்கு வைரஸ் பரவி இருந்தன. எனினும் இந்த வருடம் இரண்டாவது பிரிவிலான டெங்கு வைரஸ் செயற்பட ஆரம்பித்துள்ளது என குடம்பிகள் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தற்போது வீடுகளுக்குள்ளும் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

12 மாவட்டங்களில் 60 பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு வேகமாக பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுளம்புத் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் மருத்துவர்களும் பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

பீ.ரி.ஐ. என்ற பக்றீரியாவை பயன்படுத்தி நுளம்புகளை ஒழிப்பதற்கு இலங்கையில் சாத்தியமில்லை. இந்த பக்றீரியாவை பயன்படுத்துவதன் மூலம் வேறு பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே வேறு வழிகள் மூலம் நுளம்புகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பின் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய டெங்கு நோயை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 4 நாட்களாக டெங்கு நோயாளிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது குறைவடைந்துள்ளது. ஜுலை மாதம் இறுதியில் டெங்குநோய் குறைவடைந்தாலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் மீண்டும் தீவிரமாக தலைதூக்கும். இதற்கு முகம்கொடுப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட ஆயத்தமாகவுள்ளனர். அரசியல்வாதிகள் என்ற வகையில் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதே எமது கடமையாக உள்ளது. உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட டெங்கு ஒழிப்புத்திட்டம் இன்று 15 ஆம் திகதி சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...