சசிகலா இலஞ்சம் கொடுத்தது குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமனம் | தினகரன்

சசிகலா இலஞ்சம் கொடுத்தது குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமனம்

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி இலஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக உள்துறை முன்னாள் அதிகாரி வினய் குமார் இலஞ்சப் புகாரை விசாரிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறை டிஐஜி தெரிவித்துள்ளார்.

இதற்காக சிறைத்துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த பெப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் அவரது அண்ணியான இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோரும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் விஐபிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதனை மறுத்து வந்தது. இந்நிலையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.என்.ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து ரூ.2 கோடி இலஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது மேல் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் சசிகலா மற்றும் பல தண்டனை கைதிகளுக்கு இலஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். சசிகலாவுக்கு ஸ்பெஷல் சமையலறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது சிறை விதிகளை மீறிய செயல் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி என கூறப்பட்டது. ஆனால் அவை இன்னும் தொடர்கிறது. சிறையில் சில வசதிகளை பெற சசிகலா தரப்பு ரூ.2 கோடி இலஞ்சம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான விசாரணையில் தான் இறங்கியது முதல் சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.என்.ராவ் தனது வேலையில் குறுக்கிட்டு வருவதாகவும், கடந்த 11ஆம் திகதி தனக்கு மெமோ கொடுத்ததாகவும் ரூபா தனது உயர் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா இலஞ்சம் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க கர்நாடக உள்துறை முன்னாள் அதிகாரி வினய் குமார் விசாரிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Add new comment

Or log in with...