இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் | தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். தினகரன் உள்ளிட்டவர்கள் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 90 நாட்கள் ஆக உள்ள நிலையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு அதிகாரி சஞ்சய் ஷெராவத் தலைமையிலான பொலிசார் டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. ஆனால் டிடிவி தினகரனின் பெயர் இடம் பெறவில்லை. வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமை (17ம் திகதி)க்கு டெல்லி தீஸ்ஹாசரி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மீதமுள்ள 4 குற்றவாளிகளான தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் 2 ஹவாலா ஒப்ரேட்டர்கள் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகை இன்னும் ஒருசில வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் இருந்து தினகரன் எளிதாக விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியானது, ஆனால் அத்தகவலை டெல்லி காவல்துறையினர் திட்டவட்டமாக மறுத்துள்னர். இந்த வழக்கில் தினகரனுக்கு க்ளீன் ஷீட் கொடுக்கப்படவில்லை என டெல்லி காவல்துறை உயரதிகாரி விளக்கமளித்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக விசாரணை அதிகாரி சஞ்சய் ஷெராவத், மீதமுள்ள 4 குற்றவாளிகள் மீது சில வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளார். 


Add new comment

Or log in with...