உயிரை கையில் பிடிக்கும் ரயில் பயணங்கள்! | தினகரன்

உயிரை கையில் பிடிக்கும் ரயில் பயணங்கள்!

கொழும்பு – பதுளை ரயில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலையில் கொட்டகலை பாலத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொட்டகலையில் உள்ள 60 அடி பாலத்தின் மீது வைத்தே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகளுக்கும் தண்டவாளத்துக்குமே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனினும் மூவர் மட்டும் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு தபால் சேவை வண்டியே பாலத்தின் அருகில் வைத்து தடம்புரண்டுள்ளது. பாலம் மோசமாக சேதமடைந்துள்ளதால் கொழும்பிலிருந்து செல்லும் ரயில் சேவை ஹட்டன் வரைக்கும், பதுளையிலிருந்து வரும் வண்டிகள் கொட்டகலை வரைக்குமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொட்டகலை பாலத்தில் இதற்கு முன்னரும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பாலத்தை சீர்செய்து விரிவுபடுத்துவதில் ரயில்வே திணைக்களம் கரிசனை காட்டுவதாக தெரியவில்லை. 60 அடி பாலம் என்பது இன்றைய போக்குவரத்துச் சூழலில் மிகச் சிறியதாகும். நவீன போக்குவரத்துச் சூழலில் இப்பாலம் பயணச் சேவைக்கு தகுதியற்றதாகவே கருதப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் இது விடயத்தில் அக்கறை காட்டாதிருப்பது குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் ரயில்சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 153 வருடங்களாகின்றன. முதலில் கண்டிக்கும் கோட்டைக்குமிடையில் 1864 இல் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. மலையகத்திலிருந்து கொழும்புக்கு கோப்பி, தேயிலை போன்றவற்றை எடுத்து வரவே இது ஆரமபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பயணிகள் சேவைக்கு இந்த ரயில் சேவை பயன்படுத்தப்படவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட சேவையாக கண்டி – கொழும்பு பொருட்கள் (சரக்கு) வண்டியே சேவையிலீடுபடுத்தப்பட்டன. காலப் போக்கில் மலையகப் பகுதிகளில் கொழும்பு – நானுஓயா வரையிலும் அடுத்து மாத்தளை, ஒப்பநாயக்க இரத்தினபுரி வரையிலும் ரயில்சேவை விஸ்தரிக்கப்பட்டது. இதில் களனிவெளிப் பாதை சிறிய வண்டிகள் ஓடுவதற்கான பாதை அமைக்கப்பட்டது.

150 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட தண்டவாளங்களும் ரயில் பெட்டிகளுமே இன்றுவரை சேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பழுதடையும் போது திருத்த வேலைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. எந்தவொரு பகுதியிலும் புதிய பாதைகள் அமைக்கப்படவில்லை. 30 வருட கால யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு ரயில் சேவை முற்றாக செயலிழந்தன. 2009ல் யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு – யாழ்ப்பாணம், கொழும்பு மட்டக்களப்பு சேவைகளுக்காக அதேபோதையில் புதிய தண்டவாளங்கள் போடப்பட்டு மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தவிர மலையகப் பகுதியிலோ, தென் பகுதியிலோ ரயில் பாதைகள் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி ரயில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலத்தில் மலையகப் பகுதியில் பாரிய ரயில் விபத்துக்கள் இடம்பெற்று பெரும் எண்ணிக்கையிலான உயிர்ச் சேதங்களும இடம்பெற்றுள்ளன. அப்படி இருந்தும் கூட ரயில்வே திணைக்களம் இன்றுவரை நவீன ரயில் சேவையின் பக்கம் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

நாட்டின் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ரயில் சேவை மிக முக்கியமானதொன்றாக இன்று காணப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு காரியாலயங்களுக்கும், தொழிலுக்கும் வரும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். காலையிலும், மாலையிலும் பயணிக்கும் ரயில்களில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதையும், ஒவ்வொரு பெட்டியிலும் மக்கள் மூச்சுவிட முடியாமல் பயணிப்பதையும் பார்க்கும் போது இந்த ரயில் சேவையின் முக்கியத்துவத்தை நன்கு உணர முடிகிறது..

இவ்வாறான நிலைமைகள் நன்கறிந்த நிலையிலும் அரசாங்கம் ரயில் சேவையை மாற்றாந்தாய் மனப் போக்கிலேயே நடத்திக் கொண்டிருக்கின்றது. பஸ் சேவையை அரசாங்க, தனியார் சேவை என முக்கியத்துவம் கொடுத்து காலத்துக்குக் காலம் கூடுதல் வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்து செயற்படுத்தும் அரசு ரயில் சேவை விடயத்தில் கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. மாதாந்தம் நட்டக் கணக்குக் காட்டுவதில்தான் காலம் கடத்தப்படுகின்றது.

போலிக் காரணம் கற்பித்து பொறுப்பிலிருந்து அரசு தப்பிக்க முயலக்கூடாது. ரயில் சேவையை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உலக நாடுகளில் ரயில் சேவை என்பது விமான சேவையின் தரத்துக்கு உயர்த்தி நவீன வசதிகளைச் செய்துள்ளது. முன்னேற்றமடைந்துவரும் நாடுகளில் நிலத்துக்கடியில் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் சேவைகள் கூட நடக்கின்றன. எமது நாடடில் 150 வருடங்களாக பழைய பாணியிலேயே சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ரயில்வே நிலையங்களை புதிதாக கட்டுவதால் மட்டும் ரயில் சேவையை தரமுயர்த்திவிட முடியாது. ரயில் பாதைகள், எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு ரயில் சேவையை நவீனமயப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் இன்றைய சனத்தொகையின் பிரகாரம் பாதைகளில் பயணிக்கும் வாகனங்கள் மிக அதிகமாகக் காணப்படுவதால் வீதி விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை மட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படடுள்ளது.

ரயில் சேவையை நவீனமயப்படுத்துவதன் மூலம் மக்களை ரயில் பயணத்தின் மீது ஆர்வம் காட்டச் செய்ய முடியும். இதன் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரலாம். போக்குவரத்து அமைச்சு ரயில் சேவை குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழைய முறைகளை படிப்படியாக மாற்றியமைத்து நவீன யுகத்தின் பக்கம் திரும்புவதன் மூலம் விபத்துக்கள், சேதங்கள், அழிவுகளை மட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அரசும் போக்குவரத்து அமைச்சரும் இது விடயத்தில் அக்கறை காட்ட வேண்டுமென்ற யோசனையை முன்வைக்கின்றோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...