உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிக்காவிலிருந்து விலகியது | தினகரன்

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிக்காவிலிருந்து விலகியது

இதுவரை பதிவானதில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிக்காவில் இருந்து உடைந்து விலகியுள்ளது. இந்த இராட்சத பனித்துண்டு சுமாராக 6,000 சதுர கிலோமீற்றர் பகுதியை கொண்டதாகும். இது ஐரோப்பாவின் மிகச்சிரிய நாடான லக்சன்பேர்க்கை விடவும் இரு மடங்கு பெரிதாகும்.

அமெரிக்க செய்மதி கடந்த புதன்கிழமை அண்டார்டிக்காவின் லார்சன் சி பிராந்தியத்தை கடந்து செல்லும்போது அதில் ஏற்பட்டிருக்கும் பனித்துண்டு வெடிப்பை அவதானித்துள்ளது. இந்த பனிப்பாறை விலகிச் சொல்வதை விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த பனிப்பாறை வெடிப்பை விஞ்ஞானிகள் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக அவதானித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

200 மீற்றருக்கும் அதிக பருமனான பனித்துண்டு குறுகிய காலத்தில் மிக வேகமாகவும், நெடுந்தூரமும் நகரக்கூடியதல்ல. எனினும் அது தொடர்ந்து அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. நீரோட்டம் மற்றும் காற்று காரணமாக இந்த பனிப்பாறை அண்டார்டிக்கின் வடக்கை நோக்கி தள்ளக்கூடியதாக உள்ளது. அது கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் அக்வா செயற்கைக் கோள் அதன் அகச்சிவப்பு உணரி கொண்டு அவதானித்ததில் பனித்தட்டுக்கும் பனித்துண்டுக்கும் இடையில் உள்ள விரிசலில் நீர் இருப்பதை தெளிவாக காண முடிகிறது. நீரானது அங்குள்ள பனி மற்றும் காற்றை விடவும் வெப்பமானதாகும்.

ஐரோப்பாவின் சென்டினல்–1 ராடார் கட்டமைப்பு செய்மது போன்ற ஏனைய செய்மதிகளும் இந்த நிகழ்வை உறுதி செய்துள்ளன. இந்த பனிப்பாறை விலகும் பட்சத்தில் லார்சன் சி பனித்தட்டு தனது 10 வீத பகுதியை இழந்துவிடும்.

இந்த பனிப்பாறை கடல் நீரில் மிதக்கும்போது அது கடல் போக்குவரத்துகளில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்பாறை அந்தாட்டிக்கா பெருங்கடலில் சிந்தும்போது கடல் மட்டம் சுமார் 10 சென்டிமீற்றர்கள் (4 அங்குலம்) உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்டார்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக் தீபகற்பம் முழுவதும் தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். 


Add new comment

Or log in with...