சிம்பாப்வே - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டம் இன்று கொழும்பில் | தினகரன்

சிம்பாப்வே - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டம் இன்று கொழும்பில்

சிம்பாப்வே -- இலங்கை அணிகள் மோதும் முதலாவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆர்பமாகும்.

சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமான ஒரு நாள் தொடர் முடிவடைந்திருக்கின்றது. இத்தொடரின் மூலம் முதற்தடவையாக இலங்கையின் சொந்த மண்ணில் அவர்களை 3--2 என வீழ்த்தி, வரலாற்று சிறப்பு மிக்க பதிவுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றி, தமது முதலாவது இலக்கினை அடைந்துள்ளது சிம்பாப்வே அணி.

ஒரு நாள் தொடர் இலங்கைக்கு வெற்றிகரமாக அமையாத காரணத்தினால் அணி மீதும் தேர்வாளர்கள் மீதும் பலவாறான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவதோடு, அணியில் சில மாற்றங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில், தமது விருந்தாளி அணியுடன் இலங்கை மோதும்

இலங்கை, டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக சிம்பாப்வே அணியினை அவர்களது சொந்த மண்ணில் கடந்த வருடம், நவம்பர் மாதத்தில் சந்தித்திருந்தது. அதில், ரங்கன ஹேரத்தின் சிறந்த ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினையும் 2--0 என கைப்பற்றியிருந்தது.

இதுவரையில் இரண்டு அணிகளும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, 5 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன. எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் ஜிம்பாப்வே அணியானது இதுவரை இலங்கையை வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியானது, இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தன.

இவ்வருடத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அணியானது அதில் ஒரு போட்டியில் (அதுவும் பங்களாதேஷ் அணிக்கெதிரான) மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.

மெத்திவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது

டெஸ்ட் தரவரிசையில், எட்டாம் இடத்தில் இருக்கும் இலங்கை சங்கா, மஹேல, முரளிதரன் போன்ற முக்கிய வீரர்களின் ஓய்விற்குப் பின்னர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் நல்லதொரு நிலையினை எட்ட தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். டெஸ்ட் போட்டியொன்றில், கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷ் அணியுடன் முதற்தடவையாக பெற்ற தோல்வி, தென்னாபிரிக்கா அணியுடனான தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்டமை என்பவற்றை இலங்கை அணியின் அண்மைய மோசமான ஆட்டங்களுக்கு உதாரணங்களாக குறிப்பிட முடியும்.

எனினும், சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டி தமது சொந்த மைதானத்தில் இடம்பெறவுள்ள காரணத்தினாலும், சிம்பாப்வே வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட இன்னிங்சுகளை வெளிப்படுத்துவதில் பொதுவாகவே சிரமம் கொள்பவர்கள் என்பதனாலும், இந்த டெஸ்டின் வெற்றி வாய்ப்பு இலங்கை அணிக்கு சாதமாகவே அமைந்திருக்கின்றது.

சிம்பாப்வே அணியினை பொறுத்தவரை, இது அவர்கள் இவ்வருடத்தில் விளையாடவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியாகும். இறுதியாக இலங்கை அணியுடனான தொடரிலேயே அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடனான அத்தொடரிற்கு முன்பாக, டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியினை எதிர்கொண்டிருந்த அவர்கள் அத்தொடரினையும் 2-0 என பறிகொடுத்திருந்தனர்.

இறுதியாக, 2013 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியை சுவைத்திருந்த சிம்பாப்வே அணியினர், தற்போது சிறப்பான முறையில் ஆட்டத்தினை வெளிக்காட்டி வருவதனால், இலங்கை அணிக்கு ஒரு நாள் தொடர் போன்று, டெஸ்ட் போட்டியிலும் அதிர்ச்சியளிக்க முடியும்.

அஞ்செலோ மெதிவ்ஸ், சிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் பெற்ற தோல்வியினை அடுத்து தனது தலைமைப் பொறுப்பினை இராஜினாமா செய்த காரணத்தினால், இத்தொடரில் இலங்கை புதிய டெஸ்ட் தலைவரான தினேஷ் சந்திமாலுடன் களமிறங்குகின்றது. சந்திமால், திறமைமிக்க துடுப்பாட்ட வீரர் எனினும் தனது அண்மைய மோசமான ஆட்டங்களின் காரணமாக இலங்கை அணியின் ஒரு நாள் குழாத்தில் சேர்க்கப்படாது போயிருந்தார்.

எனினும், டெஸ்ட் போட்டிகளில் 42.33 என்கிற சிறப்பான ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் இவர் அணியின் தலைவர் என்பதால் துடுப்பாட்டத்தினை மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.

அணித் தலைவராக இல்லாவிடினும் இலங்கை அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பாக காணப்படும் அஞ்சலோ மெதிவ்ஸ், இதுவரையில் சிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடியதில்லை. எனினும், 46.08 என்னும் டெஸ்ட் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் அவர், இம்முறை அணியின் தலைவர் இல்லை என்பதனால் அழுத்தங்கள் ஏதும் இன்றி தனது அணிக்காக சிறந்த முறையில் ஆடுவார் என எதிர்பார்க்க முடியும்.

மேலும், இளம் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் அறிமுக டெஸ்ட போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் இலங்கை அணியின் மேலதிக துடுப்பாட்ட பெறுமதிகள் ஆகும்.

சிம்பாப்வே – இங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில், அதிக ஓட்டங்கள் (323) குவித்த வீரரான தனுஷ்க குணத்திலக்க, நடைபெறப்போகும் டெஸ்ட் போட்டியிலும் ஆரம்ப வீரராகவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதோடு இவரது சுழல் பந்து வீச்சும் இலங்கைக்கு கைகொடுக்கும்.

இலங்கை அணியின் பந்து வீச்சினை நோக்குமிடத்து சிரேஷ்ட சுழல் வீரரான ரங்கன ஹேரத் அணியினை பலப்படுத்தும் முக்கிய வீரர்.

ஜிம்பாப்வேயுடன் இலங்கை இறுதியாக மோதியிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2--0 எனக் கைப்பற்ற, ஹேரத்தின் பந்து வீச்சே மிகப் பெரிய துணையாக காணப்பட்டிருந்தது.

ஹேரத் அத்தொடரின் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 13 விக்கெட்டுக்களை சாய்த்ததுடன் அந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 19 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு சகல துறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோரும் சிறப்பான பந்து வீச்சாளர்களாக செயற்பட்டு இலங்கைக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி

“ தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்திவ்ஸ், அசேல குணரத்ன, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர “ 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...