பாக்கு நீரிணை கடல் வளத்துக்கு இழுவை மடிவலையினால் ஆபத்து! | தினகரன்

பாக்கு நீரிணை கடல் வளத்துக்கு இழுவை மடிவலையினால் ஆபத்து!

இழுவை மடிவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறைக்குத் தடைவிதித்துச் சட்டம் இயற்றியிருக்கிறது இலங்கை அரசு. இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்க இழுவை மடிவலை மீன்பிடி முறையைப் பயன்படுத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் இலங்கை மதிப்பில் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டத் திருத்தம் தெரிவிக்கிறது.

இது இந்திய மீனவர்களைக் குறிவைத்து இயற்றப்படும் சட்டம் என்று கூறி விட முடியாது. இலங்கை மீனவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

இழுவை மடிவலை மீன்பிடி முறை என்பது பாக். ஜலசந்தியில்(பாக்கு நீரிணை) நீண்ட நாள்களாகவே இருந்துவரும் பிரச்சினை. இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது, இலங்கை மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவில்லை. பாக் ஜலசந்தியில் மிக அதிகமான மீன்கள் கிடைப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் அங்கே போய் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இப்போது இலங்கை மீனவர்களும் அங்கே மீன் பிடிப்பதால் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை மடிவலை என்று கூறப்படும் மீன்பிடி முறையில் கொத்துக் கொத்தாக மீன்களை அள்ளி எடுத்து விடலாம்.

இழுவை மடிவலை மீன்பிடிப்பின் மூலம் பெரிய படகுகளுக்கு கீழே ஆழமாக வலைகளை இறக்கி அதிக அளவிலான மீன்களைப் பிடிக்க முடியும். அதில் பெரிய, சிறிய என்கிற வேறுபாடு இல்லாமல் மீன்குஞ்சுகள் உள்பட அந்தப் பகுதியிலுள்ள எல்லா மீன்களும் அள்ளப்படும். இதனால் வெகுவிரைவிலேயே அந்தப் பகுதியிலுள்ள மீன் வளம் குறைந்துவிடும் ஆபத்து அதிகம் உள்ளது. இழுவை மடிவலை மீன்பிடிக்கும் முறைக்குத் தடை விதிப்பதன் மூலம் மீன் வளம் பாதுகாக்கப்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கை மீனவர்களும் இப்போது மெல்ல மெல்ல இழுவை மடிவலை மீன்பிடிக்கும் முறைக்கு மாறத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் இழுவை மடிவலை மீன்பிடிப்புப் படகுகளுக்குத் தடைவிதிப்பது போலவே, இழுவை வலை மூலம் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும்.

இந்த மீன்பிடிப்பு முறை பாக் ஜலசந்தியில் பரவலாக இரு தரப்பினராலும் பயன்படுத்தப்படுமேயானால் வெகு விரைவிலேயே இந்திய_ - இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்களின் வளம் குறைந்து விடும் என்பதை தமிழக மீனவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் இந்த சட்டத் திருத்தத்திற்கு உடனடி எதிர்வினையாக தமிழகத்திலிருந்து கவலையும் எதிர்ப்பும் எழுப்பப்படுகிறது. தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான இழுவை மடிவலை மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் தமிழக மீனவர்களுக்கு எதிரானது என்று குரல் எழுப்பப்படுகிறது.

பாக் ஜலசந்தியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தங்கள் பகுதியில் அமைதியான முறையில் வாழ்வாதாரத்திற்கான வருவாய் ஈட்டும் வகையில் தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறதே தவிர, அது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்த தெளிவான விவரம் எதுவும் இல்லை. மத்திய அரசு அனுமதியளித்துள்ள முகையூர் மீன்பிடித் துறைமுகக் கட்டுமானம், இராமேஸ்வரம், எண்ணூர் மீன்பிடித் துறைமுகங்கள் ஆகியவை நடைமுறைக்கு வரும்போது தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் கணிசமாகக் குறையக் கூடும்.

மத்திய அரசு இந்திய மீனவர்களுக்கான புதிய திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடைமுறைகளை ஆலோசித்து வருவதாக, மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்ற இந்திய_ - இலங்கை வெளியுறவுத் துறை, வேளாண் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

அந்தத் திட்டத்தின்படி தமிழகத்தின் கடலோரப் பாரம்பரிய மீனவர்கள், இலங்கையின் பிரச்சினைக்குரிய பாக் ஜலசந்தியை நாடாமல் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வழிவகை செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இழுவை மடிவலை மீன் பிடிப்பு முறையிலிருந்து ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மீனவர்களைத் தயார் செய்யும் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் 500 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை வழங்க மத்திய ,- மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கின்றன. மூன்று ஆண்டுகளில் இப்போது பயன்படுத்தப்படும் சுமார் 2,000 இழுவை மடிவலை படகுகளுக்கு மாற்றாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை வழங்குவது என்று மத்திய - மாநில அரசுகள் முனைப்புக் காட்டுகின்றன. இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்குள் இலங்கை அரசு இழுவை வலை மீன்பிடிப் படகுகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றி இருக்கிறது.

இழுவை மடிவலை மீன்பிடிப் படகுகளைத் தடை செய்யும் திட்டம் இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையால் முன்வைக்கப்பட்ட போதே தமிழ்நாடு விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அதேபோல, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கடந்த ஆண்டு கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இலங்கை அரசும் இந்தச் சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கு முன்னால் அந்தக் குழுவில் விவாதித்திருக்க வேண்டும். சட்டத்திருத்தத்தின்படி இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படுவதும் அதிகரிக்குமேயானால் அது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இராஜதந்திர உறவுகளை பாதிப்பதுடன் கூட்டுக் குழுவின் செயல்பாட்டையும் பாதிக்கக் கூடும்.

இலங்கை அரசும், இந்திய அரசும் இழுவை மடிவலை மீன்பிடிப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து பாக் ஜலசந்தியில் மீன்வளத்தை பாதுகாப்பது வரவேற்புக்குரியது. ஆனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் சட்டத்திருத்தத்தை இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடுவதுதான் மனிதாபிமான அடிப்படையில் நியாயமானதாக இருக்கும்.

தினமணி ஆசிரிய தலையங்கம்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...