சுற்றாடல் பாதுகாப்புக்கு அவசியமான நடவடிக்ைக! | தினகரன்

சுற்றாடல் பாதுகாப்புக்கு அவசியமான நடவடிக்ைக!

பொலித்தீன், லஞ்ச் சீற், பிளாஸ்ரிக் பீங்கான் போன்றவற்றுக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் தடை போடப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் உணவுப் பொருட்கள் பொலித்தீன்களில் சுற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பிளாஸ்ரிக் பொருட்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்து செப்டம்பர் முதலாம் திகதி முதல் இது அமுலுக்கு வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 6ம் திகதி நியமிக்கப்பட்ட பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனை குறித்த தேசியக் கொள்கையொன்றை உருவாக்கும் குழுவின் அறிக்கையை மூன்று கட்டங்களாக அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. அரசாங்கம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் வரவேற்கப்படக் கூடியதொன்றாகும். குப்பைகள் அகற்றப்படுவது மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ரெஜிபோர்ம், பொலித்தீன் பைகள், பொலித்தீன் உணவுப் பொதிகள், லஞ்ச் சீற்களை பயன்படுத்துவது, கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் அரசினால் தடை செய்யப்பட்டுள்ளன.

பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்கள் மூலம் ஏற்படக் கூடிய சூழல் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டே இந்த முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. இதற்குரிய தேசியக் கொள்கையை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் நிபுணர்கள் குழு குறுகிய கால, மத்திய கால, நீண்ட காலத் திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய திட்டத்தை தயாரித்து ஜனாதிபதிக்கு விதந்துரை வழங்கியுள்ளது. இதனை ஆராய்ந்த பின்னர் இந்த யோசனையை அமைச்சரவைக்குச் சமர்பித்த வேளையில் அமைச்சரவை அதனை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

எந்தவொரு பொது நிகழ்விலோ, தனிப்பட்ட நிகழ்வுகளிலோ பொலித்தீன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தேசிய, சமயம், சமூகம், கலாசாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட சகல நிகழ்வுகளின் போதும் இது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய செயற்பாடுகளின் பொருட்டு 20 மைக்ரோனுக்குக் குறைவான பொலித்தீனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொலித்தீன் பாவனைக்கு தடை விதித்துள்ள அரசு, அதற்கு மாற்றீடாக சூழலுக்கு உகந்த துணி, கடதாசிப் பைகள் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்கமளிக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம் உக்கக் கூடியதான பிளாஸ்ரிக் உற்பத்திகளை மேற்கொள்ள ஊக்கமளிக்கவும் தீர்மானித்துள்ளது.

உலகமயமாக்கல், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் யுகம் மனிதனுக்கு பல நன்மைகளையும் சொகுசையும் ஏற்படுத்தியுள்ள அதேசமயம் மறுபுறத்தில் விரும்பத்தகாத மனித இனத்துக்கே வேட்டு வைக்கும் பல தீமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலங்கள் இன்று நேற்று ஆரம்பமானதொன்றல்ல. அனர்த்தங்கள், அழிவுகள் என பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வரும் நாம் அவற்றை கடவுளின் ஏற்பாடு என கூறி சமாளிக்கின்றோம். ஆனால் இந்த அனர்த்தங்கள், அழிவுகளுக்கு மனிதர்களின் செயற்பாடுகளும் காரணம்தான் என்பதை ஏற்க மறுக்கின்றோம்.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தைத் தொடர்ந்து கழிவுகளை அப்புறப்படுத்தி குவிக்க இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதிக்கு போனாலும் குப்பை கொட்ட இடமில்லை என்ற குரலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கிராமப் புறங்களில் கூட இந்த குப்பை விவகாரம் தலைதூக்கியுள்ளது. இதற்கு பிரதான காரணம் பொலித்தீன், ரெஜிபோம் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையே ஆகும். இந்தப் பொருட்கள் உக்காதவை மட்டுமல்ல மக்களின் தேகாரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதுமாகும் என்பதை எண்ணிப் பார்க்க மறுக்கின்றோம்.

காலம் தாழ்த்தியாவது அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது வரவேற்கப்படக் கூடியதும், பாராட்டத்தக்கதுமாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் நாம் கரிசனை காட்ட வேண்டும். பொலித்தீன் பாவனைக்கு தடை போட்டவுடன் மாற்று வழிக்கு மக்களை பயிற்றுவிக்க, ஊக்கமளிக்க வேண்டும். மாற்றுவழிகள் பக்கம் மக்களை திருப்பத் தவறினால் வேறுவிதமான சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

இந்த விடயத்தில் மக்களைச் சிந்திக்க வைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். நீண்ட கால பாவனையை ஒரேயடியாக தடை செய்வது கஷ்டமான காரியமாகும். எனினும் உண்மையை மக்கள் உணரச் செய்ய வேண்டும். மக்கள் அதிருப்தியடைவதற்கு முன்னர் யதார்த்தத்தின் பக்கம் மக்கள் திருப்பப்பட வேண்டும்.

பொலித்தீன் பாவனை எமக்கு சௌகரியமாகக் கருதப்பட்ட போதிலும் அதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தில் மக்கள் தவறாக வழிநடத்தப்படாத வகையிலும் அவதானிக்க வேண்டியுள்ளது. அரசு இது விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...