‘அபூ பக்கர் அல் பக்தாதி மரணம்’ ஐ.எஸ் முன்னணி தலைவர் தகவல் | தினகரன்

‘அபூ பக்கர் அல் பக்தாதி மரணம்’ ஐ.எஸ் முன்னணி தலைவர் தகவல்

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி மரணித்துவிட்டதாக கடந்த செவ்வாயன்று செய்தி வெளியாகியுள்ளது. ஐ.எஸ்ஸின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றான ஈராக்கின் மொசூல் நகர் வீழ்த்தப்பட்டு ஒருநாள் கழித்தே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பக்தாதியின் மரணத்தை ஐ.எஸ்ஸின் முன்னணி தலைவர் ஒருவர் உறுதி செய்ததாக சிரிய உள்நாட்டு யுத்தத்தை நீண்ட காலமாக கண்காணித்து வரும் சிரிய மனித உரிமைகள் அமைப்பு தகவல் அளித்துள்ளது.

பக்தாதி கொல்லப்பட்டதாக இதற்கு முன்னரும் பல தடவைகள் செய்திகள் வெளியான நிலையில் இந்த தகவலும் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.

அவரது மரணம் குறித்த செய்தி உறுதியாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் மொசூல் தோல்விக்கு பின்னர் ஜிஹாத் குழுவுக்கு மற்றொரு பெரும் பின்னடைவாக அமையும். பல மாதங்கள் நீடித்த யுத்தத்திற்கு பின்னர் மொசூல் நகர் வெற்றி கொள்ளப்பட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி கடந்த திங்கட்கிழமை பிரகடனம் செய்தார்.

“டைர் எஸ்ஸோர் மாகாணத்தின் ஐ.எஸ் முன்னணி தளபதி ஒருவர் அபூபக்கர் அல் பக்தாதியின் மரணத்தை உறுதி செய்தார்” என்று சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் இயக்குனர் ரமி அப்தல் ரஹ்மான் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

“இது பற்றி இன்றைய தினத்திலேயே (செவ்வாய்க்கிழமை) எமக்கு தெரியவந்தது. அவர் எப்போது, எப்படி மரணித்தார் என்பது தெரியவில்லை” என்றும் அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

சிரியாவின் ஏனைய பகுதிகள் மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் தனது கட்டுப்பாட்டு பகுதிகளை இழந்துவரும் நிலையிலும் கிழக்கு சிரியாவின் டைர் எஸ்ஸோர் மாகாணத்தின் பெரும்பகுதி அந்த குழுவின் வசமே தொடர்ந்து இருந்து வருகிறது.

டைர் எஸ்ஸோர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பக்தாதி அண்மைய மாதங்களில் இருந்துள்ளார் என்று அப்தல் ரஹ்மான் கூறினார். எனினும் அவர் அந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் மரணித்தாரா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

எனினும் இந்த செய்தியை சமூகதளத்தை பயன்படுத்தும் ஐ.எஸ் வட்டாரங்கள் இதுவரை மறுக்கவோ ஏற்கவோ இல்லை.

தொடரும் வதந்தி

கண்காணிப்புக் குழுவின் தகவலை உறுதி செய்ய முடியாமல் இருப்பதாக அமெரிக்கா தலைமை கூட்டுப் படை குறிப்பிட்டுள்ளது.

“எம்மால் இந்த செய்தியை உறுதி செய்ய முடியாதபோதும் அது உண்மையாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று கூட்டுப்படை பேச்சாளரான கொலனல் ரியான் டில்லோன் குறிப்பிட்டார்.

“தேவைப்படின் மாற்றம் கொண்டுவர ஐ.எஸ் வலுவான அடுத்த தலைமை வரிசையை அமைத்திருப்பது எமக்கு உறுதியாக தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் பக்தாதியின் மரணம் குறித்து அண்மைய மாதங்களில் தொடர்ந்து வதந்திகள் வந்தன. சிரியா மீது மே மாதத்தில் நடந்த வான் தாக்குதல் ஒன்றில் ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டது குறித்து உறுதி செய்யப்பட வேண்டி இருப்பதாக ரஷ்ய இராணுவம் கடந்த ஜுன் நடுப்பகுதியில் கூறி இருந்தது.

ரஷ்ய தாக்குதலில் பக்தாதி கொல்லப்பட்டதை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்கா தலைமை கூட்டுப்படையும் அப்போது கூறியிருந்தது.

பக்தாதியின் தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டொலர் நிர்ணயித்திருக்கும் நிலையில் அவர் தலைமறைவாக இருந்து சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தொடர்ச்சியான சென்று வருவதாக வதந்திகள் வெளியாகின.

மொசூல் அல் நூரி பள்ளிவாசலில் 2014 இல் கலிபத் பிரகடனம் செய்ய முதல் முறை தோன்றிய 46 வயதான ஈராக்கில் பிறந்த பக்தாதி அது தொடக்கம் பொதுமக்கள் முன் தோன்றவில்லை.

மொசூல் நகரில் ஈராக் படை முன்னேறிவரும் நிலையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த அல் நூரி பள்ளிவாசலை ஐ.எஸ் இடித்து தகர்த்தது.

எனினும் அமெரிக்கா தலைமை கூட்டுப்படை ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்ஸுக்கு எதிரான வான் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் அந்த குழுவின் பல தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பக்தாதிக்கு அடுத்து துணைத் தலைவரான அபூ அலி அல் அன்பாரி, ஐ.எஸ் யுத்த துறைக்கான அமைச்சர் அபூ ஒமர் அல் ஷிஷானி, பக்தாதியின் நெருங்கிய இராணுவ ஆலோசகர் மற்றும் ஐ.எஸ்ஸின் நீண்டகால மற்றும் முன்னணி தலைவர் அபூ முஹமது அல் அத்னானி ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...