நடிகர்கள் 8 பேர் மீதான அவதூறு வழக்கு இரத்து | தினகரன்

நடிகர்கள் 8 பேர் மீதான அவதூறு வழக்கு இரத்து

சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த 2009ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி செய்திகள் வெளியானது. இதற்கு திரைப்பட நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்கு நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை பற்றி அவதூறாக பேசினார்கள். இதுதொடர்பாக ஊட்டியை சேர்ந்த ரோசாரியோ மரியசூசை, சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள் மீது ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில், கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

பல ஆண்டாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் செந்தில்குமார் ராஜவேல், நடிகர்கள் சூர்யா உட்பட 8 பேரும் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். நடிகர்கள் யாரும் ஆஜராகாததால், பிடிவிறாந்து பிறப்பித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து ஊட்டி நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதன்படி நடிகர்கள் சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இது போன்ற அவதூறு வழக்கை மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்ததை சுட்டிக்காட்டி வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...