கலைஞனின் உள்ளத்தினுள் காட்டுமிராண்டி! | தினகரன்

கலைஞனின் உள்ளத்தினுள் காட்டுமிராண்டி!

நடிகை பாவனா கடத்தல் வழக்கு பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது.திங்கட்கிழமை நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று நீதிமன்றம் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

தன் மனைவியுடனான விவாகரத்துக்குக் காரணமானவராக பாவனா இருந்திருப்பார் என்ற முன்பகையின் காரணமாகவே தான் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததாக திலீப் வாக்குமூலத்தில் தெரிவித்ததை அடுத்து அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியது. அதையொட்டி நடிகர் திலிப்புக்கு பிணை அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு நடிகையை, உடன் நடித்த பிரபல நடிகர் ஒருவரே முன்பகை காரணமாக கூலிப்படையை ஏவி கடத்தச் செய்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இந்த விவகாரம் தற்போது கேரள திரைத்துறையில் கடும் கண்டனத்திற்குரிய பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக திங்களன்று நடிகர் மம்முட்டியின் இல்லத்தில் கூடிய நடிகர், நடிகைகள் அனைவரும் ஒருமனதாக விவாதித்து திலீப்பை ‘அம்மா’ அமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் வெளிவருவதாக இருந்த திலீப் நடித்த திரைப்படங்களின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல நடிகர்கள் இப்படியான சதிச் செயல்களில் ஈடுபடுவது அவர்களது ரசிகர்களைப் பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக கேரள ரசிகர்கள் மலையாள ஊடகங்களில் இவ்விவகாரம் குறித்த தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நடிகர்களின் திரைப்படங்களைக் காண தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தைச் செலவிடுவதை காட்டிலும், பேசாமால் அந்தப் பணத்தை ஒரு ​ேசர்க்கஸ் பார்க்கவோ, அல்லது மிருகக்காட்சி சாலைக்குச் சென்று சுற்றிப் பார்க்கவோ செலவிடலாம் என்று சில ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தனது முதல் மனைவியான, மஞ்சு வாரியருடனான விவாகரத்துக்கு முதற்காரணமாக நடிகை பாவனாவே இருந்திருக்கக் கூடும் என திலீப் நம்பினார். அந்த முன்பகை காரணமாகவே பல்சர் சுனி மூலமாக கூலிப்படையை ஏவி, பாவனாவைக் காரில் கடத்தி மானபங்கம் செய்து அதை வீடியோ பதிவாக்கி அவரை மிரட்டும் முயற்சிகளை மேற்கொள்ள தனது நண்பரும் தயாரிப்பாளருமான நாதிர்ஷா மூலமாக திலீப் முயன்றுள்ளார் என்பதே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. சமீபத்திய ஊடகச் செய்திகளில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை திலீப் ஒப்புக் கொண்டதாகவே காட்டப்படுகின்றன.

திலீப் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க 19 விதமான சாட்சியங்களை காவல்துறை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாம். இதன் அடிப்படையில் நோக்கும் போது திலீப் ஆதாரங்களின் அடிப்படையில் வகையாக சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டார் என்றே கூறலாம். இதற்கு நடுவில் கடந்த வருடம் திலீப், நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். தற்போது பாவனா கடத்தல் வழக்கை ஒட்டி, திலீப்பின் மனைவியான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கக் கூடுமா? என காவல்துறை விசாரணை நீள்கிறது.

மேலும் ‘பாவனா கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரை குற்றவாளிகள் யாரும் விடுபடப் போவதில்லை, குற்றம் நிரூபணமானால் ஒருவர் பாக்கியின்றி அனைவருக்குமே தண்டனை உறுதி’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

திலீப், மஞ்சு வாரியர் திருமணமும் காதல் திருமணமே! அந்தக் காதல், விவாகரத்தில் முடியக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்பது குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்துகளையும் பதிந்திருக்கவில்லை. அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட யூகங்களே இதுவரை ரசிகர்களுக்கான பதில்களாக இருந்து வருகின்றன. திலீப் உடனான தனது திருமணத்தின் போது நடிகை மஞ்சு வாரியர் உச்சத்தில் மின்னிக் கொண்டிருந்த பரபரப்பான முன்னணி நடிகையாக இருந்து வந்தார். அச்சமயத்தில் திலீப்பை திருமணம் செய்து கொள்ள மஞ்சு எடுத்த முடிவுக்கு அவரது பெற்றோரின் சம்மதம் இருக்கவில்லை. பெற்றோரை எதிர்த்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியே மஞ்சு 1998 இல் திலீப்பை மணந்தார். அவர்களுக்கு மீனாட்சி என்றொரு மகள் இருக்கிறார்.

தனது முதல் திருமண வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது திலீப் "5 ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு மிக அழகான, அருமையான குடும்பம் இருந்தது’ ஆனால் இன்று அதெல்லாம் இல்லாமலாகி விட்டது. என் முதல் மனைவியான மஞ்சு வாரியர் எனக்கு மனைவி மட்டுமல்ல, எனது எல்லாப் பிரச்சினைகளையுமே நான் பகிர்ந்து கொள்ளக் கூடிய மிகச் சிறந்த தோழியாகவும் அவர் இருந்தார்.

எங்களுக்குள் பிரச்சினை வரக் காரணமாக மலையாளத் திரையுலகின் உச்சத்திலிருக்கும் சில பிரபலங்களும்தான் காரணம். அவர்களது பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. ஏனெனில் எனக்கு அதை விட எங்களது மகள் மீனாட்சியின் எதிர்கால வாழ்க்கை அமைதியாகவும், தெளிவாகவும் அமைய வேண்டுமே என்ற கவலையும், அக்கறையும் இருந்ததால் நான் எங்களது விவாகரத்திற்கு இவர்கள் தான் காரணம் என யாரையுமே குறிப்பிட விரும்பவில்லை" என்று தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...