கச்சதீவை மீட்டே தீருவோம்; சட்டசபையில் அமைச்சர் உறுதி | தினகரன்

கச்சதீவை மீட்டே தீருவோம்; சட்டசபையில் அமைச்சர் உறுதி

எப்பாடுபட்டாவது கச்சதீவை மீட்டே தீருவோம் என தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்றுமுன்தினம் சட்டசபையில் உறுதி அளித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை யில் நேற்றுமுன்தினம் நடந்த விவாதத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய உறுப்பினர் கே.பி.பி.சாமி (திமுக), "இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. தற்போது 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 140-க்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் உள்ளன. கடந்த திமுக ஆட்சியில் மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படும் தகவல் அறிந்ததும் உடனடியாக மத்திய அரசிடம் பேசி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தமிழக முதல்வரும் பிரதமரை சந்தித்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் "கடந்த 1974-ம் ஆண்டில் கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இது தமிழகத்தின் ஒரு பகுதி என்று உச்ச நீதிமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார். அதைப் பின்பற்றி, கச்சதீவை மீட்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

இந்தியா_ - இலங்கை இடை யிலான சர்வதேச கடல் எல்லை வரையறுக்கப்படாத நிலையில், அங்கு தெரியாமல் மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர். தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, ரெட்டை மடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 144 படகுகள் இலங்கையில் உள்ளன. மற்றும் 53 மீனவர்கள் இலங்கையில் உள்ளனர். அவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

துரைமுருகன் (திமுக):

கச்சதீவை தாரைவார்த்தது நாங்கள் அல்ல. அப்போதைய மத்திய அரசுதான். இந்த விஷயம் அறிந்ததும் அப்போதைய முதல்வர் கருணாநிதி, பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சந்தித்து விளக்கினார். அவர் உறுதி அளித்தும் எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதிமுக வெளிநடப்பு செய்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):

அப்போது இருந்த சூழலில் மத்திய அரசு அவ்வாறு நடந்து கொண்டது. தற்போது மீனவர்களை மீட்க என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார்:

கச்சதீவு நம்மிடம் இல்லாததால் எல்லை சுருங்கி விட்டது. இலங்கையின் எல்லை விரிவாகி விட்டது. எனவே, எப்பாடுபட்டாவது கச்சதீவை மீட்டே தீருவோம். 1974- இல் போடப்பட்ட ஒப்பந்தம் தெரியாது என கூறும் எதிர்க்கட்சியினர், டெசோ மாநாட்டில் 1976-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று கூறியுள்ளதை விளக்க வேண்டும்.

துரைமுருகன்:

ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கச்சதீவில் வலைகளை உலர்த்துதல், தங்குதல் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமாவது அனுமதி தாருங்கள் என்று தெரிவித்தோம்.

இவ்வாறான விவாதத்தைத் தொடர்ந்து கச்சதீவு குறித்து யாரும் பேச வேண்டாம் என விவாதத்தை பேரவைத் தலைவர் முடித்து வைத்தார்.

திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி பேசி முடித்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எழுந்து, ‘‘திமுக நடத்திய கூட்டத்தில் அதிமுக சார்பில் அரங்கநாயகம் பங்கேற்றார். கச்சதீவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு திமுக ஒப்புக்கொள்ளாததால் அவர் வெளிநடப்பு செய்தார்’’ என்றார். 


Add new comment

Or log in with...