நாட்டின் இன்றைய பெரும் சவால் டெங்கு வியாதி! | தினகரன்

நாட்டின் இன்றைய பெரும் சவால் டெங்கு வியாதி!

இலங்கையில் அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட கறை படிந்த வரலாற்றைக் கொண்டிருக்கும் நுளம்புகளால் காவப்படும் நோயான டெங்கு நோய் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு இம்முறை தீவிரமடைந்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதத்தின் 10 ஆம் திகதி வரையும் இந்நோய்க்கு சுமார் 85 ஆயிரம் பேர் உள்ளாகியுள்ளனர். அத்தோடு சுமார் 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது 1934 _- 1935 காலப் பகுதியில கோரத்தாண்டவமாடிய மலேரியாவை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. அதுவும் நுளம்பினால் காவப்படும் ஒரு நோயாகும்.

இம்முறை டெங்கு நோயின் பரவுதல் குறைந்ததாக இல்லை. அது தொடர்ந்தும் தீவிரநிலையில்தான் காணப்படுகின்றது, ஆண், பெண்,சிறுவர்கள், வளர்ந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா வயது மட்டத்தினரையும் பாதித்து வரும் இந்நோய்க்கு வைத்தியசாலை ஊழியர்களும் தாதியரும் மாத்திரமல்லாமல் டொக்டர்களும் கூட அதிகளவில் உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான முன்னணி வைத்தியசாலைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. இதன் காரணத்தினால் சில வைத்தியசாலைகள் நோயாளர்களை அனுமதிப்பதிலும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளன.

டெங்கு நோயின் இந்தத் தீவிர நிலை மருத்துவத் துறையினர் மத்தியில் மாத்திரமல்லாமல் ஏனைய சமூக, அரசியல் துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் தற்போது டெங்கு என்பது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் விளைவாக டெங்கு நோயை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியமும் பரவலாக உணரப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் இலங்கையில் டெங்கு நோய் தீவிரமடைந்திருப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விஷேட கவனம் செலுத்தியுள்ளதது. அதனடிப்படையில் இலங்கை, இந்தியா, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து டொக்டர்களை உள்ளடக்கி இந்நாட்டின் பல பிரதேசங்களுக்கும் நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து டெங்கு ஒழிப்புக்கான விஷேட செயல் திட்ட அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை சுகாதாரம் போஷாக்கு மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிடம் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளால் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையைக் கையேற்ற அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, 'நாட்டில் தீவிர நிலையில் காணப்படும் டெங்கு நோயை நான்கு வாரங்களுக்குள் ஐம்பது வீதமாகக் குறைக்கக் கூடிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது பெரிதும் வரவேற்கத்தக்க அறிவிப்புத்தான். முப்படையினரதும், பொலிஸாரினதும் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை டெங்கு நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷேட வேலைத்திட்டமும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் டெங்கு ஒழிப்புக்கான வேலைத் திட்டங்களை முழுமையாக செயற்படுத்துவது சவால் மிக்க காரியமாக உள்ளது. அதன் விளைவாகவெ டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்நோயைப் பரப்பும் நுளம்புகள் தெளிந்த நீரில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டிருக்கின்றன. அதனால் தற்போ​ைதய சூழலில் திண்மக் கழிவுப்பொருட்கள் ஒழுங்குமுறையாக முகாமைத்துவம் செய்து அகற்றப்படாமை நுளம்புகளின் பெருக்கத்திற்கு நல்ல வாயப்பாக அமைந்திருக்கின்றது.

ஏனெனில் மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவையடுத்து திண்மக் கழிவுப் பொருட்களை ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்தவென நிலத்தைத் தேடிக் கொள்வதில் நெருக்கடி நிலை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் தான் உலக சுகாதார ஸ்தாபனம் டெங்கு ஒழிப்புக்கான இந்த விஷேட அறிக்கையைத் தயாரித்து சுகாராத அமைச்சுக்கு கையளித்திருக்கின்றது. அத்தோடு சுகாதார அமைச்சரும் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார்.

இலங்கை மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை அடைந்து கொள்வதற்கு, டெங்கு ஒழிப்புக்காக மு-ன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும். ஏனெனில் பொதுமக்களின் சுற்றுச்சூழலுடன் சம்பந்தப்பட்டதாகவே டெங்கு நோய் விளங்குகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு ஏற்பதான் டெங்கு அச்சுறுத்தலை முழுமையான கட்டுப்பாட்டு நிலைக்குக் கொண்டு வரக் கூடியதாக இருக்கும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...