Friday, March 29, 2024
Home » முஹம்மத் (ஸல்) இறைத்தெரிவு பெற்ற மனிதர்

முஹம்மத் (ஸல்) இறைத்தெரிவு பெற்ற மனிதர்

by sachintha
October 13, 2023 11:34 am 0 comment

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு, அன்னாரதும் அவர்களது தோழர்களதும் வாழ்வில் இடம்பெற்ற மிகப்பெரும் திருப்புமுனையாக விளங்கும் மதீனாவை நோக்கிய புலம்பெயர்வு போன்ற பல முக்கிய நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டதே ரபிஉல் அவ்வல் எனும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாம் மாதம் ஆகும்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் செய்த சமூகப் புரட்சி வருடம் முழுவதும் நினைவுகூரப்பட்டாலும் அதில் போதாமையே இருக்கும். என்றாலும் அன்னார் என்றென்றும் நினைவுகூரப்படுவது அவசியம். அதனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய சில புரிதல்களை பகிர்ந்துகொள்வதற்கு மிகவும் பொறுத்தமான மாதமே இது.

இறைவனிடமிருந்து வஹி (இறைசெய்தி) தொடராக வந்துகொண்டிருந்த அதே காலப்பகுதியில் தான் விபசாரம் செய்த சில ஸஹாபாக்களும் சமூகத்தில் காணப்பட்டனர். பின்னர் தமது பாவத்திற்காக அவர்களே முன்வந்து அதற்கான இறைமன்னிப்பைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்தினர். தொழுகையின் போது தனக்கு பின்னால் நிற்கும் பெண்ணை பார்ப்பதற்காக இறுதி ஸப்பில் நிற்கும் ஓரிரு ஸஹாபாக்களும் இருந்தனர்.

இறைத்தூதர் இருக்கின்ற சமூகத்திலே எப்படி இவ்வாறான பாவங்களும் தவறுகள் நிகழ முடியும்? என் கேள்விக்கான பதில் கிடைத்தது. இறைத்தூதரே அனுப்பப்பட்டிருந்தாலும் அச்சமூகம் ஒரு மனித சமூகம் தானே. அதன் இயல்பு பாவம் செய்வதுதான். ஆனால் அப்பாவத்திலிருந்து மீண்டு பின் அதில் மீண்டும் ஈடுபடாமல் இருக்க அவர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். இவர்களது இந்நிலை ஸஹாபா சமூகத்தை நோக்கி என்னை நகர்த்தி அவர்களை நெருங்கச் செய்தது. எமது பாவங்களை விட்டும் நாம் விலகவும் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளவும் இந்நிலை நகர்த்தியது.

ஸஹாபாக்கள் என்றாலே தவறிழைக்க மாட்டார்கள் என்ற பிழையான விம்பம் உடைந்து மனிதப் பலவீனங்களால் பாவத்தில் ஈடுபட்டுவிட்டால் அதிலிருந்து எப்படி முழுமையாக மீட்சியடைந்தார்கள் என்ற சம்பவங்கள் என்னை அவர்களை நோக்கி நெருக்கமாக்கியது. இந்நிலையே இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான் என்ற நிலையை நோக்கி அவர்களை நகர்த்தியது என்ற புரிதலை எனக்கு தந்தது.

“மேலும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள். இன்னும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் தயார்படுத்தி இருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 9:100)

இந்நிலையை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் நாம் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனால் அவனது தூதை சுமப்பதற்காக தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இறைவனின் இறுதித் தூதை எத்திவைக்கும் பேற்றையும் பொறுப்பையும் பெற்றாலும் அவை அவரை எப்போதும் மனித நிலையிலிருந்து நீக்கி விடவில்லை.

அல்குர்ஆன் தொடராக பல இடங்களில் அவரது மனித நிலையை உறுதிப்படுத்தியும் வலுப்படுத்தியுமே வந்துள்ளது. “அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா?” (அல்குர்ஆன் 10:2)

“என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீங்கள் பதில்) கூறுங்கள். மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. (நபியே!) நீங்கள் “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று கூறுங்கள். (அல்குர்ஆன் 17:93-95)

இவ்வாறாக எண்ணற்ற வசனங்களில் இறைவன் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித நிலையிலிருந்து நீங்கிவிடவில்லை என்பதை ஆழமாக பதிப்பதோடு மட்டுமல்லாமல் அதுதான் வழிகாட்ட பொருத்தமானது என்பதையும் உறுதிபடக் கூறுகிறான். இதனால் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்வான சந்தர்ப்பத்தில் சிரித்தார்கள். சிலபோது கவலைப்பட்டார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் கோபமுற்றார்கள்… ஏன்?… மனிதன் என்ற காரணத்தால் தான். இவ்வியல்பு இறைத்தூதரை நோக்கி என்னை நகர்த்தியது. அவரது வழிகாட்டல்களை பின்பற்ற உந்துதலளித்தது. மாற்றமாக, ஒரு மலக்கை தூதராக அனுப்பியிருந்தால் எமக்கு இஸ்லாம் பின்பற்ற முடியாததொரு அம்சமாக இருந்திருக்கும். அதனால் தான் சர்வம் அறிந்த இறைவனின் தெரிவு மனித சமூகத்திலிருந்தே தொடராக அமைந்தது. முன்னைய சமூகங்கள் மனிதர் என்ற காரணத்திற்காக தூதர்களை மறுத்தாலும் இறைவனின் தெரிவு மாறவில்லை. காரணம், சர்வம் அறிந்த படைப்பாளன் மனித இயல்பையா அறியாமலிருப்பான்…!

‘(நபியே!) நீங்கள், “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுங்கள் ‘(அல்குர்ஆன் 18:110)

இவ்வாறு அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனித நிலை பற்றி கலாநிதி முஹம்மத் ஹமீதுல்லாஹ், “ஒரு தூதர் மனித வரம்பிற்குள் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் சரியான முன்மாதிரியாகவும் இருக்க முடியும், அதாவது, மற்ற மனிதர்கள் என்ன செய்ய முடியுமோ அதை அவர் செய்கிறார். மாறாக, அவர் ஒரு சூப்பர்மேன் ஆகிவிட்டால், அவர் மனிதர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பது இயலாது.

ஆகவே, மிகவும் அரிதாக இருந்தாலும் நாம் வரலாற்று ஆவணங்களில் இதை பார்க்க இயலும், அதாவது அவர் காலைத் தொழுகைக்கு போதுமான அளவு சீக்கிரம் எழுந்திருக்காத போது அல்லது வழங்கப்படும் ரக்அத்களின் எண்ணிக்கையில் மறதியின் காரணமாக தவறு ஏற்படும் நிகழ்வுகளை நாம் அறிவது மூலம், அல்லாஹ் தமது நபி ஒரு மனிதர் என்பதை மனிதர்கள் உணர வேண்டும் என விரும்புகிறான்!” என்று கூறுகின்றமை குறிப்படத்தக்கது.

ஷம்லான் ஜாபிர்…
மாணவன், ஜாமிஆ நளீமிய்யா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT