வளைகுடா பிரச்சினையை தீர்க்க டில்லர்ஸன் குவைட்டுக்கு விரைவு | தினகரன்

வளைகுடா பிரச்சினையை தீர்க்க டில்லர்ஸன் குவைட்டுக்கு விரைவு

கட்டார் மற்றும் நான்கு அரபு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர முறுகலுக்கு தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் நேற்று குவைட்டை சென்றடைந்தார்.

டில்லர்ஸன் வளைகுடா பிரச்சினையை தீர்க்கும் தற்போதைய முயற்சிகள் குறித்து குவைட் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அவரது வருகை பிரச்சினை தொடர்பில் அண்டை நாடுகளுக்கு இடையில் ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் கட்டாரின் தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களையும் மூடியது.

கட்டார் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதாக இந்த நாடுகள் குற்றம் சாட்டியபோதும், அடிப்படை அற்றது என அதனை கட்டார் நிராகரிக்கிறது.

இந்த தடைகளை தளர்த்த கடந்த ஜுன் 22 ஆம் திகதி நான்கு நாடுகளும் கட்டாருக்கு 13 நிபந்தனைகள் கொண்ட பட்டியலை முன்வைத்தது. இதில் அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

எனினும் இந்த நிபந்தனைகளை கட்டார் நிராகரித்தது. இந்நிலையில் பிரச்சினையை தீர்க்க வளைகுடா நாடான குவைட் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த மத்தியஸ்த முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு அளித்த நிலையில், டில்லர்ஸனின் வருகை அமெரிக்காவின் பங்களிப்பை அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினை பல வாரங்கள் அல்லது மாதங்கள் இழுத்துச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் அதனை விடவும் மோசமடையும் சாத்தியம் உள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த வியாழக்கிழமை எச்சரித்திருந்தது.

“தற்போதைய தருணத்தில் இந்த பிரச்சினை ஸ்தம்பித்து விடும் நிலை குறித்து நாம் கவலை அடைகிறோம். இது பல வாரங்கள் இழுத்துச் செல்லும் சாத்தியம் இருப்பதாக நாம் நம்புகிறோம். அது பல மாதங்கள் இழுத்துச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அதனை விடவும் மோசமடையவும் வாய்ப்பு உள்ளது” என்று இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹீதர் நவுவர்ட் குறிப்பிட்டார்.

எவ்வாறான சூழல் குறித்து அச்சமடைவது என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஆனால் பங்களிப்பு நாடுகளுடன் டில்லர்ஸன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கட்டார் மீதான தடைகளை தளர்த்தும் படி சவூதி தலைமையிலான நாடுகளிடம் டில்லர்ஸன் கடந்த மாதம் கோரி இருந்தார். இந்த தடைகள் எதிர்பாராத மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போரில் பாதிப்பை செலுத்தும் என்றும் டில்லர்ஸன் குறிப்பிட்டிருந்தார்.

கட்டாரின் அல் உதைத் விமானத் தளத்தில் 11,000 க்கும் அதிகமான அமெரிக்கா மற்றும் கூட்டுப் படையினர் நிலைகொண்டிருப்பதோடு 100க்கும் அதிகமான விமானங்கள் செயற்படுகின்றன. 


Add new comment

Or log in with...