ஐ.எஸ் குழுவுக்கு எதிராக மொசூல் வெற்றிக்கு தயாராகும் ஈராக் படை | தினகரன்

ஐ.எஸ் குழுவுக்கு எதிராக மொசூல் வெற்றிக்கு தயாராகும் ஈராக் படை

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிராக மொசூல் நகரில் ஈராக் இராணுவம் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி அந்த நகருக்கு விஜயம் செய்துள்ளார்.

ஒன்று அல்லது இரண்டு சிறு பகுதிகள் மாத்திரம் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நகரம் விடுவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 17 தொடக்கம் மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதலின் உதவியுடன் ஈராக்கிய படை போராடி வருகிறது. 2014 ஜுன் மாதம் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ் ஈராக் மற்றும் சிரியாவை உள்ளடங்கிய கலிபத் ஒன்றை பிரகடனம் செய்தது.

நகரை மீட்கும் கடினமான யுத்தத்தில் குர்திஷ் பஷ்மர்கா போராளிகள், சுன்னி அரபு பழங்குடியினர் மற்றும் ஷியா போராளிகளும் பங்கேற்றனர்.

மொசூலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் வீழ்த்தப்பட்டதை அடுத்து பிரதமர் அந்த நகருக்கு விஜயம் செய்து ஆயுதப் படையினர் மற்றும் ஈராக்கிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

“ஐ.எஸ் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் நிலையில் வெற்றி உறுதியானது. எமது மக்களின் சிறப்பான வெற்றி குறித்த அறிவிப்புக்கு சிறிது நேரமே எஞ்சி உள்ளது” என்று அபதி குறிப்பிட்டார்.

அபதியின் வருகையை ஒட்டி வீதிகளில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றபோதும் இறுதி வெற்றிப் பிரகடனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மொசூலின் பழைய நகரை ஒட்டி ஐ.எஸ் நிலை கொண்டிருக்கும் சிறு பகுதி ஈராக்கிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பின் வெற்றி பிரகடனம் வெளியிடப்படும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அங்கு தொடர்ந்து வான் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதோடு துப்பாக்கிச் சண்டையும் நீடிக்கிறது. அங்கிருந்து வானை நோக்கி புகை வெளியேறி வருகிறது.

மொசூல் நகரில் வீழ்ந்தாலும் ஈராக்கில் ஐ.எஸ் ஆக்கிரமிப்பு முழுமையாக முடிவடையாது. அந்த குழு தலா அபா மற்றும் மேற்கு மாகாணமான அன்பாரின் மூன்று சிறு நகரங்கள் போன்ற பகுதிகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன்மூலம் அரச கட்டுப்பாட்டு பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்ஸினால் முடியுமாகியுள்ளது. 


Add new comment

Or log in with...