தொடரை பறிகொடுத்தது இலங்கை | தினகரன்

தொடரை பறிகொடுத்தது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3--2 என தொடரை வெற்றி கொண்டு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது சிம்பாப்வே அணி.இலங்கை அணிக்கு எதிரான முதல் தொடர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

204 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய சிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து 3 விக்கெட்டால் அபார வெற்றி பெற்றது.

அவ்வணி சார்பாக பின் வரிசையில் சிறப்பாக ஆடிய சிக்கந்தர் ராசா 27 பந்துகளை எதிர் கொண்டு 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஒரு நான்கு ஓட்டங்கள் சகிதம் 27 ஓட்டங்களை குவித்து ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினார்.மஸகட்ஷா 73 ஓட்டங்களையும் மிர் 43 ஓட்டங்களையும் முஸகன்டா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய 4 விக்கெட்டையும் மலிங்க இரு விக்கெட்டையும் குணரத்தன ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.தெடரின் நாயகனாக மஷகட்ஷாவும் தெரிவானார்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கிரீமர் முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தார். இந்த போட்டிக்காக சிம்பாப்வே அணியில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படாத நிலையில், இலங்கை அணி சார்பாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அசித்த பெர்னாண்டோ மற்றும் சூழல் பந்து வீச்சாளர் லக்ஷன் சண்டகனுக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர மற்றும் அகில தனஞ்சய இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இலங்கை அணி முதலாவது விக்கெட்டினை இரண்டாவது ஓவரிலேயே வெறும் மூன்று ஓட்டங்களுக்கு பறி கொடுத்தது. கடந்த இரு போட்டிகளிலும் அடுத்தடுத்து சதங்களை விளாசியிருந்த நிரோஷன் திக்வெல்ல, டெண்டாய் சட்டராவின் அபார பந்து வீச்சின் மூலம் விக்கெட் காப்பாளர் பீட்டர் மூர்ரிடம் பிடி கொடுத்து ஓய்வறை திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் உபுல் தரங்க ஆகியோர் சிம்பாப்வே அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் முறையே 1 மற்றும் 6 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இக்கட்டான சூழ்நிலையில் தனுஷ்க குணதிலக்கவுடன் இணைந்து கொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ், நான்காவது விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களை பெற்ற நிலையில், அணித் தலைவர் கிரேம் கிரீமரின் சூழல் பந்து வீச்சில், ஹமில்டன் மசகட்சாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் மறுமுனையில், இந்த போட்டித் தொடரில் ஆகக்கூடிய ஓட்டங்களை குவித்துள்ள தனுஷ்க குணாதிலக்க நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதம் கடந்த போதிலும், துரதிஷ்டவசமாக சீன் வில்லியம்ஸ்சின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனையடுத்து களமிறங்கிய பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும் இறுதிவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடித் துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன நான்கு பௌண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், அவருக்கு ஓட்டங்களை பெறுவதற்கு பங்களிப்பு வழங்கிய துஷ்மந்த சமீரா 18 ஓட்டங்களையும் பதிவு செய்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதேநேரம், இலங்கை அணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்திய சிக்கந்தர் ராஷா மற்றும் அணித் தலைவர் கிரேம் கிரீமர் ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14ம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது 


Add new comment

Or log in with...