Friday, March 29, 2024
Home » பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும்

பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும்

-தொடரும் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உறுதி

by sachintha
October 13, 2023 7:11 am 0 comment

ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை காசாவில் செயற்படுத்தப்படும் முழு முற்றுகை கைவிடப்படாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் உள்ள மருத்துவமனைகள் பிணவறைகளாக மாறுவதை தவிர்க்க எரிபொருளைத் தரும்படி செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே இஸ்ரேல் நேற்று (12) இந்த நிபந்தனையை விடுத்தது.

ஏற்கனவே இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில் நீர, மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை (09) தொடக்கம் துண்டித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்கு ஊடுருவிய பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.

சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை 1,300ஆக அதிகரித்துள்ளது. பொதுப்பாலானவர்கள் தமது வீடுகள், வீதிகள் மற்றும் நடன நிகழ்ச்சி ஒன்றில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்போது பலஸ்தீன போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட 97 பணயக்கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காசா எல்லையில் இருக்கும் இஸ்ரேலிய நகரங்களை பலஸ்தீன போராளிகளிடம் இருந்து விடுவித்து அங்கு மேற்கொண்ட தேடுதல்களின்போது மேலும் சடலங்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் முழு முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவு சரமாரி வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மோதலின் 75 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தத் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதோடு பல குடியிருப்புப் பகுதிகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குண்டு தாக்குதல்களில் 1,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 5,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக காசா நிர்வாகம் நேற்று தெரிவித்தது. எனினும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

அங்குள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டதோடு மருத்துமனைகளின் அவசரமின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருளும் தீர்ந்து வருகிறது.

இந்த அவசர மின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள் விரைவில் தீர்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

“இந்த மோதலில் மனிதத் துயரங்கள் வெறுக்கத்தக்க வகையில் இருப்பதோடு பொதுக்களின் துன்பத்தை குறைக்க (மோதலில் ஈடுபடும்) தரப்புகளை கேட்டுக்கொள்கிறோம்” என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிராந்திய பணிப்பாளர் பப்ரிசியோ கர்போனி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“காசாவில் மின்சாரம் இல்லை என்பது, மருத்துவமனைகளிலும் மின்சாரம் இல்லாமல்போகும், பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பது மற்றும் வயதான நோயாளர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதில் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, சீறுநீரக இரத்தமாற்று சிகிச்சை நிறுத்தப்பட்டு, எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை ஏற்படும். மின்சாரம் இல்லை என்பது மருத்துவமனைகள் பிணவறைகளாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுக்காவிட்டால் முற்றுகைக்கு விலக்கு அளிக்க முடியாது என்று இஸ்ரேலிய வலுசக்தி அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

“காசாவுக்கான மனிதாபிமான உதவிகளா? இஸ்ரேலிய பணயக்கைதிகள் வீடு திரும்பும்வரை மின்சார பொத்தான்கள் திறக்கப்படாது, நீர் விநியோகம் திறக்கப்படாது மற்றும் எரிபொருள் டிரக்குகள் அனுமதிக்கப்படமாட்டாது. மனிதாபிமானத்திற்காக மனிதாபிமானம். யாரும் ஒழுக்கத்தை மீற முடியாது” என்று காட்ஸ் ட்விட்டர் என்று முன்னர் அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் காசாவில் இஸ்ரேல் 2,600க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதோடு காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 5000க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதேவேளை காசாவின் எகிப்து எல்லையான ரபா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி எகிப்து வெளியுறவு அமைச்சு இஸ்ரேலை கேட்டுள்ளது. இந்த எல்லைக் கடவை திறந்திருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் முழு முற்றுகையை அமுல்படுத்தி இருக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாக எகிப்துடனான ரபா எல்லை உள்ளது. எனினும் இஸ்ரேலின் வான் தாக்குதல்களால் அந்த எல்லைப் பகுதி நேற்று முன்தினம் மூடப்பட்டிருந்தது. அது திறக்கப்பட்டாலும் எல்லைக் கடவையை கடந்து செல்வதற்கான பட்டியல் நீண்டுள்ளது. சாதாரணமாக இந்த எல்லை வழியாக நாளொன்றுக்கு சுமார் 400 பேர் பயணிப்பதற்கே அனுமதி உள்ளது.

தரைவழி தாக்குதல் பற்றி முடிவில்லை

காசா பகுதியின் தெற்கில் உள்ள பிரதான நகரான கான் யூனிஸ் மருத்துவமனையில் தனது வீடு தாக்கப்பட்ட நிலையில் அழும் சிறுமி ஒருவரை பெண் ஒருவர் சமாதானம் செய்து வருகிறார். அந்த சிறுமி “எனக்கு எனது தாய் வேண்டும்” என்று கூச்சலிட்டு அழுகிறார்.

“அவள் தனது தாயை தேடி அழுகிறாள். தாய் எங்கே என்று எமக்குத் தெரியவில்லை” அந்த சிறுமியை கைகளில் சுமந்துகொண்டிருக்கும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.

காசாவின் அல் ஷட்டி அகதி முகாம் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் உயிர்தப்பியோரை தேடி வெறுங் கைகளால் கற்குவியல்களை அகற்றி வருகின்றனர். போதுமான எரிபொருள் மற்றும் இந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் கருவிகள் இல்லை என்று மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் காசாவில் குறைந்தது 340,000 காசா மக்கள் வீடுகளை இழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 220,000 பேர் ஐ.நாவினால் நடத்தப்படும் 92 பாடசாலைகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மறுபுறம் தெற்கு இஸ்ரேலின் அஷ்கோல் நகரில் காசாவில் இருந்து நேற்று வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேலை சென்றடைந்தார். போர் பரவுவதை தடுப்பது, அமெரிக்கப் பிரஜைகள் உட்பட பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் பிளிங்கன் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் இன்று (13) ஜோர்தான் சென்று ஜோர்தானிய மன்னர் அப்துல்லா மற்றும் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்திக்கவுள்ளார்.

பலஸ்தீனர்களின் அவலங்களை புறக்கணித்ததே வன்முறை அதிகரிக்கக் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கும் அப்பாஸ், காசாவுக்கு வெளியில் இருக்கும் பலஸ்தீனர்களும் இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்க்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் போர் காலத்திற்கான அவசர ஐக்கிய அரசு ஒன்று கடந்த புதன் அன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் எதிர்க்கட்சியினரும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

காசா மீதான தரைவழித் தாக்குதல் ஒன்றுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான மேலதிக படைகளை குவித்து வைத்துள்ளது. எனினும் அவ்வாறான ஒரு படையெடுப்பு பற்றி இன்னும் இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படவில்லை. ஆனால் நாம் அதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் ரிச்சார்ட் ஹெட்ச் நேற்று தெரிவித்தார்.

இந்தப் போர் பிராந்தியத்தில் இராஜதந்திர முயற்சிகளையும் சீர்குலைத்துள்ளது. சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சித்து வந்த நிலையிலேயே இந்த மோதல் ஏற்பட்டது.

இதேவேளை இஸ்ரேல்–காசா சண்டை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டு மென்று ஐக்கிய நாட்டு சபை வலியுறுத்தியுள்ளது.

சண்டையில் பலஸ்தீன வட்டாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பாடசாலையைச் சேர்ந்த ஊழியர்களும் மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறைந்தது 11 ஊழியர்களும் 30 மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாட்டு அமைப்பு உறுதிப்படுத்தியது.

காசாவில் சிக்கியுள்ள பலஸ்தீனர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வழிகளை அமெரிக்கா, எகிப்து, இஸ்ரேல் ஆகியவை ஆராய்ந்துவருகின்றன.

காசா நெருக்கடி குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நாளை இன்று (13) கூடவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் ஆன்ட்டோனியோ குட்டெரஸ் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். இஸ்ரேலும் காசாவும் வன்செயல் சூழலில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காசாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார். எல்லா நேரமும் சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டுமென குட்டெரஸ் கேட்டுக்கொண்டார்.

காசாவிலுள்ள ஐக்கிய நாடுகள் கட்டடங்களில் சுமார் 220,000 பலஸ்தீனர்கள் தங்கியுள்ளதாக அவர் சொன்னார். அந்தக் கட்டடங்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

பலஸ்தீன வட்டாரங்களுக்கு மனிதாபிமான உதவி சென்று சேருவதைத் தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

தென் லெபனானிலிருந்து தாக்குதல் நடக்கும் சாத்தியம் குறித்து அவர் அச்சம் தெரிவித்தார்.

சிரியா மீது தாக்குதல்

மறுபுறம் சிரிய தலைநகர் டமஸ்கஸ் விமானநிலையம் மற்றும் அலப்போ நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதல்களால் விமானநிலையம் சேதமடைந்திருப்பதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு பதில் நடவடிக்கை எடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அலெப்போவில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சிரியா பயணிக்கவுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிரியா மற்றும் ஈரான் இரு நாடுகளும் இஸ்ரேலை எதிரி நாடாக கருவதுவதோடு ஈரான், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு அது பற்றி அரிதாகவே வெளிப்படையாக கூறிவருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT