யாழ். ஊடகவியலாளர் விசாரணைக்காக CID அழைப்பு | தினகரன்


யாழ். ஊடகவியலாளர் விசாரணைக்காக CID அழைப்பு

 
யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர், குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
 
தொலைக்காட்சிச் சேவையொன்றின் யாழ். மாவட்ட ஊடகவியலாளராகக் கடமையாற்றும் த. பிரதீபனை எதிர்வரும் திங்கட்கிழமை (10) காலை 08.30 மணியளவில் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காக  முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். 
 
கடந்த மே மாதம் 08 ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த குறித்த ஊடகவியலாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்  அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தின் ஊடாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். 
 
மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்களின்  சிங்களம் மற்றும் தமிழிலான ஒளிப்பதிவு நாடாக்களுடன் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
குறித்த விசாரணைக்கான அழைப்பு நேற்று (07)  விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் விபத்துக்குள்ளாகி உடல் ரீதியான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையால் குறித்த விசாரணைக்குத் தன்னால் முன்னிலையாக முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
 
இந்த விசாரணைக்குத் தன்னால் முன்னிலையாக முடியாதுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் நேற்றைய தினம் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் தகவல் வழங்கியுள்ளார்.
 
அச்சுவேலிப் பொலிஸார் அதனை ஏற்க மறுத்துள்ள நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு குறித்த விசாரணைக்கு முன்னிலையாக முடியாதுள்ளதாக குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் எழுத்துமூலமாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு மேற்படி ஊடகவியலாளரைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். 
 
இதேவேளை,  'என்னைக் கைது செய்து சிறையிலடைக்கவே, யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
மே 08 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மே 12-18 வரையான காலப் பகுதியை இன அழிப்பு நாளாக வட, கிழக்கில் அனுஷ்டிக்குமாறு, சிவாஜிலிங்கம் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
(செல்வநாயகம் ரவிசாந்)
 

Add new comment

Or log in with...