வியூகத்தை நோக்கி இரு நாடுகளின் நட்பு | தினகரன்

வியூகத்தை நோக்கி இரு நாடுகளின் நட்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றோ, முன்னோடியானது என்றோ சிலர் பாராட்டக் கூடும். இது மோடியின் தனிப்பட்ட இராஜதந்திரச் செயல்முறையாலும், இஸ்ரேல் பதிலுக்கு அளித்த சிறப்பான உபசரிப்பாலும்தான் சாத்தியமானது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து, அனைத்து மதங்களின் ஆன்மிகத் தலைவர்களையும் உடன் வைத்துக் கொண்டு பிரதமர் மோடியை வரவேற்றார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், போப்பாண்டவர் போன்ற பிரமுகர்களுக்கு மட்டுமே இப்படி வரவேற்பளிப்பது வழக்கம். விமான நிலையத்திலேயே மோடியை மும்முறை கட்டித் தழுவினார் நெதன்யாகு. மொத்தம் எத்தனை முறை மோடி தழுவப்பட்டார் என எண்ணிச் சொல்ல முடியாதபடிக்குத் தழுவல்கள் தொடர்ந்தன! இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவு ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ என்று நாணத்துடன் குறிப்பிட்டார் நெதன்யாகு.

இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. தேவைப்பட்டபோதெல்லாம் இந்தியாவுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்கி உதவியுள்ளது இஸ்ரேல். இருந்தாலும், இஸ்ரேலுடனான உறவைப் பகிரங்கப்படுத்தாமல் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட்டது.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ், 1993- இல் இந்தியா வந்தார். ஜஸ்வந்த் சிங் 2000-ம் ஆண்டில் பதிலுக்கு அங்கு சென்றார். ஜனாதிபதி எசர் வெய்ஸ்மேன் 1997-இல் இந்தியா வந்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015-இல்தான் இஸ்ரேலுக்குச் சென்றார். 2003-இல் முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் (ஏரியல் ஷரோன்) இந்தியா வந்தார்.

ஆனால், அதிகாரிகள் மட்டத்தில் தீவிரப் பரிமாற்றம் இருந்து வருகிறது. 1993-இல் இந்திய வெளியுறவுச் செயலர் ஜோதீந்திர நாத் தீட்சித் இஸ்ரேல் சென்றார். 1999 இ-ல் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, இஸ்ரேலிய ஜெனரல் (ஓய்வு) டேவிர் ஐவிரி ஆகியோர் 1999இ-ல் நேரடியாகப் பேசினர். ஒசிராக் என்ற இடத்தில் ஈராக் அமைத்திருந்த அணு உலை மீது 1981இ-ல் தாக்குதல் நடத்திய விமானப்படைத் தளபதி ஐவிரி என்பது குறிப்பிடத்தக்கது. 1998- இல் அணுகுண்டை வெடிக்க வைத்து சோதனை நடத்தப் போகும் இந்தியாவின் முடிவைத் தெரிந்து கொண்ட இஸ்ரேல், அதை இரகசியமாகக் காத்து ஒத்துழைத்தது.

தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறக்கும் இலக்கை அழிக்கும் ‘பராக்-1’ ரக ஏவுகணைகளையும் ஆள் இல்லா வேவு விமானங்களையும் 2000 -இல் வழங்கியது இஸ்ரேல். மேம்படுத்தப்பட்ட ‘மிக்-21’ ரக விமானத்தில் இஸ்ரேலின் அதி நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டன. 1999 கார்கில் போரின் போது, லேசர் உதவியுடன் பாய்ந்து புவிஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழுந்து வெடிக்கும் குண்டுகளை இஸ்ரேல் அளித்தது.

எதிரிகளின் நிலைகளையும், நாம் தாக்க வேண்டிய இலக்குகளையும் முன்கூட்டியே கணித்து தெரிவிக்கக் கூடிய ‘ஃபால்கன்’ எச்சரிக்கை சாதனங்களையும் இஸ்ரேல் அளித்தது. அது அமெரிக்காவின் அதி நவீன ‘அவாக்ஸ்’ ரக விமானத்துக்கு ஈடான வலிமையை இந்தியா வைத்திருந்த ரஷ்யப் போர் விமானங்களுக்கு அளித்தது. தாங்கிகளைத் தகர்க்கும் ஏவுகணை, தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் பறந்து நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கக் கூடிய ஏவுகணை ஆகியவற்றையும் அளித்தது இஸ்ரேல். இந்தியாவின் தேவைக்கு அதிக இராணுவ ஆயுதங்களையும் சாதனங்களையும் வழங்கும் நாடு இஸ்ரேல். இஸ்ரேலின் இராணுவ ஏற்றுமதியில் 40% இந்தியாவுக்குத்தான்.

குஜராத்தின் வைர வியாபாரிகளுக்கும் இஸ்ரேலுக்கும் 1992- இற்கு முன்பிருந்தே வணிகத் தொடர்புகள் இருந்தன. இப்போது 500 கோடி ​ெடாலர்கள் மதிப்புக்கு தங்க நகைகள், நவரத்தினக் கற்கள் விற்பனையாகின்றன. அறிவியல் -தொழில்நுட்பம், வேளாண்மை, உயிரியல் தொழில்நுட்பம், விண்வெளியியல் ஆகிய துறைகளிலும் இப்போது ஒத்துழைப்பு பெருகி வருகிறது.

இளம் இஸ்ரேலியர்கள் விரும்பிப் பார்க்கும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம்பிடித்துள்ளது. வாரணாசி, மணாலி, கோவா ஆகிய இடங்களுக்கு இஸ்ரேலியர்கள் அதிகம் விரும்பிச் செல்கின்றனர்.

மோடியின் இந்தப் பயணம் பலன் தர வேண்டும் என்று இரு நாடுகளும் முன்கூட்டியே திட்டமிட்டன. இஸ்ரேல் செல்வதற்கு முன்னதாகவே ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவுதி அரேபியா, கட்டார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு மோடி சென்று வந்தார். பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை டெல்லியில் கடந்த மே மாதம் வரவேற்றுப் பேசினார். எனவே இஸ்ரேல் சென்ற போது ரமல்லா செல்வதைத் தவிர்க்க முடிந்தது.

வேளாண்மைத் துறை, நீர்மேலாண்மை, விண்வெளித் துறை ஆகியவற்றில் ஒத்துழைக்க இப்போது புதிய உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டன. பிரதமரின் அலுவலகம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்தது.

இஸ்ரேல் தரப்பில், 11 அரசுத் துறைகளிடமிருந்து கிடைத்த தரவுகள் அடிப்படையில் 7.96 கோடி ​ெடாலர்கள் மதிப்புக்கு இந்தியாவுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் விளைவாக, ‘வியூகரீதியிலான கூட்டு’ என்ற அளவுக்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பு உயர்ந்து உள்ளது. இராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் தவிர அறிவியல் -தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளிலும் இணைந்து செயல்பட ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

அவற்றில் மூன்று விண்வெளி ஆராய்ச்சிக்கானது. இரண்டு நீர் மேலாண்மை - சுகாதாரம் தொடர்பானது. ஒன்று, வேளாண் துறை தொடர்பிலானது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தோட்டக்கலை மற்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற உதவும் 15 நிலையங்களை இந்தியாவில் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல். அது தனக்குக் கிடைக்கும் நீரில் 90%ஐ மறுசுழற்சி மூலம் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறது. அதன் கழிவு நீரில் 95% அளவு வேளாண்மைக்கே பயன்படுகிறது.

அறிவுசார் தொழில்களைத் தொடங்கவும் ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் இணைந்து தலா 2 கோடி ​ெடாலர்களை முதலீடு செய்து புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியத்தை ஏற்படுத்தியுள்ள.

இஸ்ரேலில் இப்போது 4,500 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களும் 140 அரவணைப்பு நிலையங்களும் உள்ளன. புதிய பொருட்களைத் தயாரிப்பவை அல்லது சேவையை அளிப்பவை ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களாகும். இவை மிகச் சில முதலீட்டாளர்களால், குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்டு, பிறகு பிரம்மாண்டமாக வளர்த்தெடுக்கப்படும். இந்தியாவுடன் இஸ்ரேல் பங்கேற்கும் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மூலம் ஐந்தாண்டுகளுக்கு 500 கோடி ​ெடாலர்கள் மதிப்புக்கு விற்றுமுதல்கள் ஏற்படும் என்று ‘நாஸ்காம்’, ‘அக்செஞ்சர்’ ஆகிய நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன.

ஒப்பந்தங்கள் தொடர்பாக செய்த அறிவிப்புகளை நிறைவேற்ற பணிக் குழுவை ஏற்படுத்த இந்தியாவும் இஸ்ரேலும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராக வளர்ச்சி பெறவும், பெஞ்சமின் நெதன்யாகு அடுத்து இந்தியாவுக்கு அரசு விருந்தினராக வரவும் இது பெரிதும் உதவும்.-

ராகேஷ் சூட்
(இந்திய முன்னாள்
வெளியுறவுத் துறை அதிகாரி)


Add new comment

Or log in with...