Friday, March 29, 2024
Home » அநாதைகளை அரவணைப்போம்!

அநாதைகளை அரவணைப்போம்!

by sachintha
October 13, 2023 11:27 am 0 comment

பெற்றோரில் இருவரையுமோ அல்லது ஒருவரையோ இழந்து விட்ட குழந்தை ‘அநாதை குழந்தை’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. அநாதை என்பதற்கு தமிழ் அகராதியில் வரும் பொருள் ‘திக்கற்றவன்’, ‘ஆதரவற்றவன்’ ஆகும். ‘ஆதரிப்பார் அற்றவன் அநாதை’, ‘ஆதரிக்கும் பெற்றோரை இழப்பவன் அநாதை ஆவான் என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு குழந்தை தன் பெற்றோரின் அரவணைப்பிலும் ஆதரவிலும், அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வளர்கிறது.

அல்லாஹுதஆலா அல் குர்ஆனில், அநாதைகளின் பாதுகாப்பு, அவர்களது மறுவாழ்வு, பராமரிப்பு, உரிமைகள், அவர்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம், இல்லறம் போன்ற அடிப்படையான உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தமாக 22 இடங்களில் எடுத்தியம்பியுள்ளான். அந்தளவுக்கு அநாதைகளின் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் அளித்திருக்கிறது.

‘(நபியே…) அவன் உம்மை அநாதையாகக் கண்டு அவன் உமக்குத் தங்குமிடம் அளி(த்து ஆதரி)க்கவில்லையா?, திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான். உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்’. உம்மை வறுமையில் கண்ட அவன் (உம்மைத்) தன்னிறைவு பெற்றவராக்கினான். (அல் குர்ஆன் 93-6,7,8)

அநாதைகளின் முக்கியமான மூன்று அம்சங்கள் குறித்து மேற்படி வசனங்கள் எடுத்தியம்புகின்றன. அநாதைகளின் அரவணைப்பு, அவர்களது அறியாமையை போக்கி அவர்களை அறிவுசார்ந்த சமூகமாக மேம்படுத்துதல், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக அவர்களை மேம்படுத்துதல் என்பன அடிப்படை அம்சங்களாகும்.

அதேநேரம் பெற்றோரை இழந்த குழந்தை, பருவ வயதை அடையும் வரைதான் அநாதை. பருவ வயதை அடைந்த பின்னர் எவரும் அநாதை இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. அதனால் அநாதை பருவ வயதை அடையும் வரை நன்மை தரும் செயலாக உள்ளது.

இதற்கு நபி(ஸல்) அவர்களின், ‘நானும், அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறி, தங்களது சுட்டு விரலாலும், மற்றொரு விரலாலும் (இடைசற்றே இடைவெளிவிட்ட விரல்) சைகை செய்தார்கள்’ என்பது நல்ல எடுத்துக்காட்டாகும். (நபிமொழி)

அதேநேரம் பருவ வயதை அடைந்த எவரும் அநாதையாக இருக்கமுடியாது. மேலும் மாதவிடாய் ஏற்பட்ட ஒருத்தியும் அநாதையாக இருக்க முடியாது’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதேவேளை அலி (ரழி) அவர்கள், ‘பெற்றோரை இழந்தவன் உண்மையான அநாதை இல்லை. கல்வியையும், ஒழுக்கத்தையும் இழந்தவன் தான் உண்மையான அநாதையாவான்’ என்றுள்ளார்கள். அதனால் கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையும் இழந்தவன் நிரந்தரமான அநாதை ஆவான்.

நபித்தோழர்களில் அபூ ஹுரைரா (ரழி), ஜுபைர் பின் அவ்வாம் (ரழி) ஆகியோர் அனாதைகளாவர். அவர்கள் இழந்தது பெற்றோரைத்தான். கல்வியையும் ஒழுக்கத்தையும் அல்ல. அபூஹுரைரா (ரழி) அவர்கள் 5374 நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள். அன்னார் அநாதையாகப் பிறந்த போதிலும் கல்வியில் முன்னணியில் திகழ்ந்துள்ளார் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு பல அறிஞர்கள் இஸ்லாமிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்கள். அவர்களில் இமாம் புஹாரி, இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மது பின் ஹன்பல், இமாம் சுயூதி, இப்னுஹஜர் உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

ஆகவே அநாதைகளைப் பராமரிப்பதில் அக்கறை கொள்வோம். அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வோம்.

அபூமதீஹா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT