பழி சுமத்தும் தருணமல்ல இது: உயிர்ப் பாதுகாப்பே முக்கியம்! | தினகரன்

பழி சுமத்தும் தருணமல்ல இது: உயிர்ப் பாதுகாப்பே முக்கியம்!

இலங்கையில் முன்னொரு போதுமே இல்லாதவாறு டெங்கு நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. சுகாதார அமைச்சின் கடந்த கால பதிவுகளின்படி 2012 ஆம் ஆண்டிலேயே நாட்டில் டெங்கு நோய் மோசமாக அதிகரித்திருந்தது. அக்காலப் பகுதியில் இந்நோயினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 33 ஆயிரமாகவும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 300 ஆகவும் காணப்பட்டது.

2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வருடத்திலேயே டெங்கு நோய் மிகத் தீவிரமாக அதிகரித்திருக்கின்றது.

இவ்வருடத்தின் ஆறு மாத காலப் பகுதியில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 88 ஆயிரம் ஆகும். 225 பேர் உயிரிழந்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அத்தகவலை நிராகரித்துள்ளது.

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கு மேலானதெனவும், மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் 225 ஐ விட அதிகமெனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது. அரசாங்கம் தவறான தகவல்களை வழங்கியுள்ளதென்பதே இச் சங்கத்தின் குற்றச்சாட்டு ஆகும்.

‘சைற்றம்’ தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சமீபத்தில் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தையடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முறுகல் நிலைமை தீவிரமடைந்திருக்கிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக அரசாங்க தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளிப்பட்டதையும் காணக் கூடியதாக இருந்தது.

இவ்வாறானதொரு முறுகல் சூழ்நிலைக்கு மத்தியிலேயே அரசாங்கத்தின் மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. அதாவது, டெங்கு நோய் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தத் தவறி விட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டில் டெங்கு நோய் மோசமாக அதிகரித்திருந்த வேளையில், அரசாங்க வைத்தியசாலை டொக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதனால் மக்கள் மத்தியில் வைத்தியர்கள் மீதான வெறுப்பு மேலோங்கியிருந்ததென்பது உண்மை. வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தின் போது, மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீது முழுப் பழியையும் சுமத்துவது அரசாங்கத்துக்கு அவ்வேளையில் சுலபமாக இருந்தது.

அரசாங்க வைத்தியர்கள் மீது ஒட்டுமொத்த எதிர்ப்பும் குவிந்திருக்கும் இவ்வேளையில், மருத்துவர் சங்கம் தன் மீதான பழியை இப்போது அரசு மீது தூக்கிப் போட்டிருக்கின்றது.

நாடு டெங்கு ஆபத்தில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில் எதிரும் புதிருமான கண்டனக் கணைகளோ, வாதப்பிரதிவாதங்களோ பொருத்தமானவையல்ல. 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 225 பேருக்கு மேல் மரணமடைந்து விட்டனர். இதனை இனிமேலும் உதாசீனப்படுத்துவது புத்திசாலித்தனமல்ல. அவ்வாறு அலட்சியப்படுத்த முற்படுமிடத்து டெங்கு நோயினால் ஏற்படுகின்ற மரணங்கள் மேலும் அதிகரிப்பதற்குரிய அபாயம் உண்டு. இன்றைய வேளையை தேசிய இடர்மிகு காலப் பகுதியாக அறிவித்து, தேவையான துரித வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

டெங்கு நோய் விடயத்தில் அரசாங்கம் இன்னுமே போதியளவு விழிப்படையவில்லையென்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் தற்போது நிலவுகின்றது. மக்களின் இக்குற்றச்சாட்டுக்கு உரமூட்டும் வகையிலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அரசு மீது பழியைப் போட முற்படுவதனால், டெங்கு நோய் ஆபத்தை இனிமேலும் உதாசீனப்படுத்துவது முறையல்ல.

இந்நோய் தொடர்பாக மக்கள் இப்போது உண்மையிலேயே அச்சம் அடைந்திருக்கின்றார்கள். சாதாரண காய்ச்சல் என்றதுமே விசேட வைத்திய நிபுணரிடம் சென்று பெருந்தொகைப் பணத்தைச் செலவிடும்படியாக மக்கள் மத்தியில் ஒரு வகை பீதி நிலவுகின்றது. தனிப்பட்ட சேவையில் ஈடுபடும் டொக்டர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இக்காலப் பகுதியில் அதிக வருமானம் கிடைக்கின்றது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டாமலிருக்க முடியாது.

மக்களின் இன்றைய டெங்கு நோய் பீதி பலவீனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒருபுறத்தில் அச்சம் காரணமாக பணம் வாரியிறைக்கப்படுகின்றது. மறுதரப்பினருக்கு பணம் வந்து குவிந்து கொண்டிருக்கின்றது.

மக்கள் என்னதான் செய்ய முடியும்? நாட்டில் இத்தனை மரணங்கள் சம்பவித்த பின்னர், அவர்கள் அஞ்சுவதில் நியாயம் உண்டு. அரசாங்க வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதனால், மக்கள் இப்போது தனியார் வைத்தியசாலைகளையே நாட வேண்டிருக்கின்றது.

இன்று ஏற்பட்டிருப்பது நெருக்கடியானதொரு நிலைமையாகும். டெங்கு நோயானது நாட்டுக்கே பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. இச்சவாலை எவ்வாறாயினும் முறியடித்தே தீர வேண்டும். மக்களின் ஒத்துழைப்புடன் பாரிய திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...