எங்கள் கோரிக்கை இல்லாத அரசியலமைப்பு தேவையில்லை | தினகரன்

எங்கள் கோரிக்கை இல்லாத அரசியலமைப்பு தேவையில்லை

 
சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம் 
 
உண்மையில் எங்கள் கோரிக்கைகள் உள்ளடங்காத ஓர் அரசியல் அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை, அதனால் எந்தவிதப் பலனுமில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
புதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என அண்மையில் கண்டியில் பெளத்த மகாநாயக்க தேரர்கள் ஒன்றுகூடித் தீர்மானித்திருப்பது தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
 
இந்த நாட்டுக்குப் புதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என மகாநாயக்க தேரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைத்து விடக் கூடாது என்பதனாலேயே பெளத்த துறவிகள் வழமை போன்று புதிய அரசியல் அமைப்பையும் எதிர்க்கிறார்கள். 
 
புதிய அரசியலமைப்புத் தமிழ்மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதாக அமைய வேண்டும். இந்த அரசியல் அமைப்பு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்புக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை.
 
 அரசியல் சாசனக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதனையடுத்துப் பாராளுமன்றத்தை ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றினார்கள். அந்த அரசியல் சாசன சபையில் வழிகாட்டல் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த வழிகாட்டல் குழுவில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கிறார்களே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு, வட- கிழக்கு இணைப்பு போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவுக்கு வராமை துரதிஷ்டவசமானது. 
 
ஒற்றையாட்சி மூலமான தீர்வு தான் முடிந்த முடிவு, இணைப்பாட்சி என்பது கிடையாது. பெளத்த மதத்திற்கு முதலிடம் போன்ற விடயங்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சுமந்திரன், சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் குறித்த விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்மக்கள் இதற்காக ஆணை வழங்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர். 
 
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை மாற்றுவது, தேர்தல் நடைமுறைகளை மாற்றுவது போன்றவற்றால் தமிழ்மக்களின் இனப்பிரச்சினை முடிவுக்கு வராது. தமிழர் தரப்புடன் அரசாங்கம் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தாத நிலையில், தமிழர் தரப்பின் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் அவ்வாறான அரசியலமைப்பு எமக்கு எதுவித நன்மையையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பது தான் யதார்த்தம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார். 
 
(செல்வநாயகம் ரவிசாந்)
 

Add new comment

Or log in with...