14 வயது மகள் துஷ்பிரயோகம்; தந்தை கைது | தினகரன்

14 வயது மகள் துஷ்பிரயோகம்; தந்தை கைது

 
பொலிஸ் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு!
 
வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கர்ப்பமுற்றமை தொடர்பில், இடம்பெற்ற விசாரணையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியமை தெரிய வந்துள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பில் வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
 
கடந்த ஜூலை 03 ஆம் திகதி பூவரசங்குளம் பகுதி வைத்தியசாலைக்கு சுகவீனமுற்ற சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கற்பம் தரித்துள்ளதாகவும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார். 
 
இதையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையம் செல்லாது, அப்பகுதியில் செயற்படும் சிறுவர் பாதுகாப்புக் குழுவினரால் வன்னிப்பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர். 
 
இதையடுத்து தமிழ் மொழி சேவைப் பொலிசார் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்கு பொலிசார் சென்றுள்ளனர். 
 
இதன்போது சிறுமியின் வீட்டில் எவரும் இருக்கவில்லை இதையடுத்து அருகிலுள்ளவர்களிடம் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதற்கு அடுத்த நாளான 04 ஆம் திகதி, சிறுமியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தாயார், தனது கணவரே பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து பொலிசார் குறித்த நபரின் ஊரான அங்குறுவத்தோட்ட பகுதி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கி, சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 
 
தற்போது வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி தொலைபேசி முறைப்பாடு (0766224949) சேவைப்பிரிவிற்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும். அதற்கான உடனடி நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 

 

 

Add new comment

Or log in with...