Home » வரலாற்று முக்கியத்துவம் மிக்க மூன்று ஒப்பந்தங்கள் சைச்சாத்து

வரலாற்று முக்கியத்துவம் மிக்க மூன்று ஒப்பந்தங்கள் சைச்சாத்து

by sachintha
October 13, 2023 6:00 am 0 comment

இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் மாநாடு கடந்த 9 முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், பிரதி வெளிவிவகார அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட இராஜதந்திரிகளும் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும் அடங்கி இருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இம்முறை இலங்கை விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியத்துவம் மிக்க மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அந்த ஒப்பந்தங்களில், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 1.026 மில்லியன் ரூபாவை 2.8 மில்லியன் ரூபாவாக அதிகரித்துக் கொள்வதற்கான உடன்படிக்கையும் ஒன்றாகும். இந்த உடன்படிக்கையானது இந்திய வீடமைப்பு திட்டத்தின் நான்காம் கட்டத்தை விரைவுபடுத்துவதற்கு வழிவகுக்கும். அதனால் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் வீட்டை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இந்த உடன்படிக்கை புதிய நம்பிக்கைகளை அளிக்கும்.

அதேநேரம் இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதற்கு அவசியமான மேலதிக ஒதுக்கீடுகளை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இதுவாகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் 27 பாடசாலைகளை மேம்படுத்தல், மன்னார் மற்றும் அநுராதபுரம் வீடமைப்புத் திட்டங்கள், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் புஸ்ஸலாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்திப் பணிகள், பொலன்னறுவையில் பல்லின – மும்மொழிப் பாடசாலையொன்றை நிர்மாணித்தல், யாழ்ப்பாணத்தில் மழைநீரை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழான 2889 நிர்மாணிப்புகள், தம்புள்ளையில் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் பழுதடையாமல் பாதுகாப்பதற்கான 5000 மெற்றிக் தொன் கொள்ளளவுடைய குளிரூட்டி வசதிகள் அமைத்தல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு புதிய சத்திரசிகிச்சை பிரிவொன்றை நிறுவுதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதன் ஊடாக நாட்டின் பல பிரதேசங்களதும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடையும்.

மேலும் இந்நாட்டின் தேசிய பாலுற்பத்தியை பலப்படுத்தும் வகையில் இந்தியாவின் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனமான அமுல் குழுமம் இலங்கையின் காகில்ஸ் கூட்டு வர்த்தக நிறுவனம், இந்திய தேசிய பாலுற்பத்தி ஊக்குவிப்பு சபை ஆகியன இணைந்து கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. அது தொடர்பான ஒப்பந்தமும் கைத்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக முதல் ஐந்து வருடங்களில் பால் உற்பத்தியை 53 சதவீதத்தினால் அதிகரித்துக் கொள்ளவும் 15 வருடங்களில் பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனால் கால்நடை வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளும் அளிக்கப்படவிருக்கின்றன.

இந்த ஒப்பந்தங்கள் இந்நாட்டின் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பாரிய பங்களிப்பு நல்கும். இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்தியா அளித்துவரும் உதவி ஒத்துழைப்புகளில் இவையும் ஒரு பகுதியே ஆகும். ‘அயல்நாடு முதலில்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருவது தெரிந்ததே.

அந்த வகையில் கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் இந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது இந்தியா அளித்த உதவி, ஒத்துழைப்புக்கள் இந்நாட்டு வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளன. அந்த வரலாற்றுத் தடத்தோடு இந்த உதவி ஒத்துழைப்புகளும் நிச்சயம் சேர்ந்து கொள்ளும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT