Saturday, April 20, 2024
Home » சீனன்கோட்டையில் 91 ஆவது வருட ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ்

சீனன்கோட்டையில் 91 ஆவது வருட ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ்

by sachintha
October 13, 2023 4:14 pm 0 comment

பேருவளை சீனன்கோட்டை பிட்டவளை அல்மிர்அதுஷ்ஷாதுலிய்யா ஸாவியாவில் 91 ஆவது வருட புனித ஸஹீஹூல் புஹாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். ஸைனுலாப்தீன் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறுவதோடு, ஷாதுலிய்யா தரீக்காவின் கலீபதுல் குலபா மௌலவி எம்.இஸட் முஹம்மத் ஸூஹூர் (பாரி) விஷேட சொற்பொழிவாற்றுவார்.

அல்குர்ஆனை நன்கு விளங்கிக் கொள்ளவும் இஸ்லாமிய திட்டங்களை நன்கு விளங்கிக் கொள்ளவும் ஹதீஸ்கள் தேவைப்பட்டன. இதனால் காலக்கிரமத்தில் நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புக்கள் வெளிவர ஏதுவாயின. இவற்றுள் தலையாயதும், முக்கியம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது ‘ஸஹீஹூல் புஹாரி’ என்னும் ஹதீஸ் பேழையாகும்.

அபூ அப்துல்லாஹ் முஹம்மதிப்னு இஸ்மாயில் புகாரி (ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்ட மேற்படி நூல் அல் குர்ஆனுக்கு அடுத்தபடியாக கருதப்பட்டுப் போற்றப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் வாய்வந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களைத் தொகுத்து, 7275 ஹதீஸ்களை மட்டுமே இமாம் புஹாரி அவர்கள் தமது ஸஹீஹூல் புஹாரியில் எழுதியுள்ளார்.

இவ்வளவு சிறப்புப் பொருந்திய இந்த அரிய புகாரி ஷரீபை மக்கள் சரிவரக் கேட்டு அதன்படி நடந்து மேம்பாடு அடைய வேண்டுமென்ற நோக்கில் இற்றைக்குச் சுமார் 91 ஆண்டுகளுக்கு முன்னர் பேருவளை சீனன்கோட்டை பிட்டவளையில் அமைந்துள்ள ‘அல் மிர்அதுஷ் ஷாதுலிய்யா’ ஸாவியாவில் ஓர் அரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிராம் பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஷாதுலிய்யாத் தரீக்காவின் கலீபதுல் குலபாவும், அத்தரீகத்துல் ரிபாயிய்யா நக்ஷபந்தியா தரீக்காவின் கலீபாவுமான அஹமது லெப்பை ஆலிம் சாகிப் (ரஹ்) (சேகுனா அப்பா) அவர்கள் இந்த ஸாவியாவில் இந்த உயரிய புகாரி மஜ்லிஸை ஆரம்பித்து ஆன்மிக ஒளிதரும் மங்காத தீபத்தை ஏற்றி வைத்தார்.

சேகுனா அப்பா அவர்கள் பேருவளை மாளிகாஹேனை புகாரி தைக்காவிலும் சிலகாலம் தங்கியிருந்து அங்கு நடைபெற்று வரும் மேற்படி மஜ்லிஸையும் முன்னின்று நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னார் ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து, மக்களையும் தீனின்பால் நெறிப்படுத்தினார்.

சீனன்கோட்டைப் பள்ளிவாசலில் அடங்கப்பட்டுள்ள சாச்சப்பா ஆலிம் (ரஹ்) உதுமான் லெப்பை ஆலிம் (ரஹ்) அபூஸாலி ஆலிம் (ரஹ்) ஹனீபா ஆலிம் (ரஹ்) எம்.ஐ.எம். மன்ஸூர் ஆலிம் (ரஹ்) இம் மஜ்லிசின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றினார்.

30 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மேற்படி மஜ்லிசுக்கு சாவியாவின் பிரதம இமாம் கதீப் கலீபதுஷ் சாதுலி மௌலவி எம்.எம். செய்னுலாப்தீன் (பஹ்ஜி) தலைமை வகித்தார்.

புனித ரபியுல் அவ்வல் மாதம் 30 தினங்களாக சீனன்கோட்டை பகுதியில் நடைபெற்றுவந்த மௌலுத் மஜ்லிஸ் தமாம் வைபமும் 14.10.2023 ஆம் திகதி மாலை அஸர் தொழுகையையடுத்து இதே சாவியாவில் நடைபெறும். மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா யாக்கூத்தியாவும் இஷாத் தொழுகையை தொடர்ந்து வலீபா ஹாக்கூத்தியாவும் இஷாத் தொழுகையை அடுத்து திக்ர் மஜ்லிசும் முஸாக்கராவும் இடம்பெறும்.

சீனன்கோட்டை ஜாமஜயதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட பணிப்பாளர் மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) முஸாக்கரா நிகழ்த்துவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT