தர்மம் தலைகாக்கும் | தினகரன்

தர்மம் தலைகாக்கும்

 புதிய அரசியலமைப்பு விடயத்தில் பௌத்த மகாசங்கத்தினர்கள் எடுத்திருக்கும் புதிய நிலைப்பாடு நாட்டு மக்களிடம் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றது. அரசாங்கம் இந்தவிடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றது. எதிர்ப்புகள் எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அதனைச் சவாலாக எதிர்கொண்டு புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவோம் என அரசு உறுதிபட தெரிவித்திருக்கின்றது. அரசியலமைப்புச் சபையில் இயங்கி வந்த மகிந்த தரப்பினர் திடீரென பல்டி அடித்து அரசியலமைப்புக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையிலேயே பௌத்த மகா சங்கமும் திடீர் தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை தோற்றுவித்திருக்கின்றது.

இனவாதிகளின் பின்னால் சேர்ந்துகொண்டு பௌத்த பீடங்கள் புதிய தீர்மானத்தை எடுத்திருக்கின்றன. நாட்டில் புதிய அரசியலமைப்போ, யாப்புத் திருத்தமோ இப்போதைக்குத் தேவைப்படவில்லையென நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தலைமைகள் ஒன்றுகூட்டி இப்படியொரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர பீடங்களும் பௌத்த மகா சபையும் இரண்டு தினங்களுக்கு முன்னர் கண்டியில் கூடி இத்தகையதொரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. அந்தத் தீர்மானம் உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து கையளித்து புதிய அரசியலமைப்பு யோசனையை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பௌத்த மகா சங்கத்தினர்களின் சந்திப்பு இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பொது எதிரணி தரப்பினர் மகா சங்கத்தினரை சந்தித்திருப்பதாக தெரிய வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் மகா சங்தக்தினரை சந்தித்து புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை சமூகத்துக்கு பாதகமான விளைவுகளைக் கொண்டுவரும் எனச் சுட்டிக்காட்டி இதனை எப்படியேனும் தடுக்குமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகின்றது. இனவாதத்தோடு தொடர்புபட்ட ஒரு குழு மகிந்த ராஜபக்ஷ அணிக்கு ஆதரவு தெரிவித்து சதித் திட்டத்தை முன்வைத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

ஆனால் அரசாங்கம் அரசியலமைப்பை கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதை அறிந்து கொண்டதன் பயனாக மகிந்த தரப்பு இனவாதச் சக்திகளுடன் இணைநது நாட்டில் குழப்பத்தை தோற்றுவிக்கும் கைங்கரியத்தில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து அரசாங்கம் இவ் விடயத்தில் உஷார் நிலையில் இருக்கின்றது. அரசியலமைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து மகா சங்கத்தினர்களுடன் பேசி இணக்கப்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசியலமைப்பு நாட்டில் இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என புதுக் கருத்தை மகா சங்கத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். உண்மையிலேயெ கடந்த கால அரசுகளும், தலைமைகளும் தத்தமது தேவைகளுக்கேற்ப அரசியலமைப்பை மாற்றியமைத்துக் கொண்டனர். அதன் விளைவாக இன்று புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை உருவானது. இனப்பூசலுக்கு தீர்வுகாண முடியாமல் நாம் காலம் கடத்திக்கொண்டிருக்கின்றோம். இவ்விடயம் தொடர்கதையாக நீண்டு போவதற்கு இடமளித்துக் கொண்டிருக்க முடியாது.

இதனை மனதில் கொண்டே கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலின் போது புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களாணையைக் கோரினார்.இ தற்கமைய 62 இலட்சம் மக்கள் இதற்கு ஆணை வழங்கியுள்ளனர். 62 இலட்சம் பேரின் ஆணைக்கு மதிப்பளிப்பதா? இனவாதிகளின் தாளத்துக்கு ஆடும் சிலரது யோசனைக்கு தீர்ப்பளிப்பதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மகா சங்கத்தின் பேச்சு குறித்து அரசு பெரும் அதிருப்தி கொண்டுள்ளது. கடந்த இரண்டு வருட காலமாக அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. இவ்வளவு காலமும் மௌனமாக இருந்துவிட்டு உரிய காலத்தில் தமது யோசனைகளைத் கூறாமலிருந்ததோடு ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்புக்கு சாதக சமிக்​ை ஞயை காட்டிய மகா சங்க்தினர் திடீரென பல்டி அடிப்பதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டியதொன்றாகும்.

இருக்கும் அரசியலமைப்பால் நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்த நிலையிலேயே புதிய யாப்பின் அவசியம் முன்மொழியப்பட்டுள்ளது. இன்று புதிய யாப்பை எதிர்க்கும் பௌத்த பீடங்கள் அன்று மகிந்த ராஜபக்ஷ சாகும் வரை ஜனாதிபதியாக இருப்பதற்கு வசதியாக அரசியல் யாப்பை திருத்தியபோது வாய்பொத்தி மௌனம் காத்ததேன்?

எனவேதான் அரசாங்கம் இன்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் அவற்றை முறியடித்து புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கின்றது. அரசின் இந்த மன உறுதியை வரவேற்கின்றோம். மகா சங்கம் சொல்வதற்காக அநீதிக்குத் துணை போக அரசு மறுத்திருக்கின்றது. இதில் இனம், மதம், மொழி பார்க்கப்பட முடியாது. நாட்டின் எதிர்காலம், மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் பிரச்சினைளுக்கான தீர்வு என்பவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதற்கு மக்களாதரவு நிச்சயம் கிடைக்கும்.

பௌத்த பீடங்கள் எடுத்திருக்கும் முடிவு நியாயமற்றது என்பதை உணர்ந்து தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். கௌரவமான முறையில் இந்தத் தீர்மானத்தை வாபஸ் பெறவேண்டும். நல்லாட்சியில் சிறந்ததொரு அரசியலமைப்பு எல்லோருக்கும் பொதுவான நேர்மையான யாப்பொன்றைக் கொண்டுவர ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். இது தான் தர்மமாகும் என்பதை வலியுறுத்தி வைக்கின்றோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...